வீட்டு வடிவங்களும் பண்பாடும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீட்டு வடிவங்களும் பண்பாடும் என்னும் இக்கட்டுரை, பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த மக்களுடைய வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிப்பதில் அச்சமூகங்களின் பண்பாடு கொண்டுள்ள தாக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மக்களுடைய வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்பது குறித்துப் பல கோட்பாடுகள் பலரால், பல்வேறு காலகட்டங்களில் முன்வைக்கப்பட்டன. இவற்றின்படி, வீட்டு வடிவங்களைத் தீர்மானிக்கும் காரணிகளாகக் கூறப்படுவனவற்றுள் காலநிலை, கட்டிடப்பொருட்கள், தொழில்நுட்பம், அமைவிடம், பாதுகாப்பு, பொருளாதாரம், சமயம், பண்பாடு என்பவை முக்கியமானவை.

1960களில் வீட்டு வடிவங்களைத் தீர்மானிப்பதில் பண்பாட்டின் முதன்மையை வலியுறுத்திப் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுள் அமெரிக்கப் பேராசிரியரான அமொஸ் ராப்பப்போர்ட் என்பவர், தான் எழுதிய "House, Form and Culture" நூலில் முன்வைத்த கருத்துக்கள் இந்தக் கருத்துருவின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கின. ஒரு சமூகத்தின் பண்பாடே அச்சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிப்பதில் முதன்மைக் காரணியாக விளங்குகின்றது என்றும், ஏனையவை துணைக் காரணிகளே என்று அவர் வாதித்தார்.[1] இவரைத் தொடர்ந்து மேலும் பலர் பொது மக்களின் வீடுகளைப் பண்பாட்டு நோக்கில் பார்த்து ஆய்வுகளை முன்னெடுக்கலாயினர்.

இங்கே வீடுகள் என்னும்போது, கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அல்லது ஒரு குறித்த பண்பாட்டுக்கு வெளியே உருவான வீடுகளைத் தழுவிக் கட்டப்பட்ட வீடுகளை விட நாட்டார் கட்டிடக்கலை சார்ந்த, அல்லது ஒரு பண்பாட்டினரின் பாரம்பரிய வீடுகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

பண்பாடு - வீடு இடைவினை[தொகு]

பண்பாடு என்பது ஒரு பண்பியக் (abstract) கருத்துரு. இதன் வெளிப்பாடாக அமையக் கூடிய சமூக அமைப்புக்கள் மூலமோ அல்லது இதனூடாக வெளிப்படக்கூடிய மனிதச் செயல்பாடுகள் மூலமோதான் பண்பாடு என்பதை அறிந்துகொள்ள முடியும். இத்தகைய வெளிப்பாடுகளுக்கு ஆதரமாக அமையும் வகையில் தம்மைச் சுற்றியுள்ள சூழலை உருவாக்குவதற்கு மனிதர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். வீடுகள் இவ்வாறான சூழல்களுள் முக்கியமானவை.

குறிப்புக்கள்[தொகு]

  1. Rappoport, Amos., 1969. p.60

உசாத்துணைகள்[தொகு]

  • Rappoport, Amos., House Form and Culture, Prentice-Hall, New Jercy, 1969