விழுபளை ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விழுபளையும் அதன் பின்னணியும்[தொகு]

வில்லு -குளத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாய சமூகமாக அக்கால மக்கள் வாழ்க்கை காணப்பட்டது.விழுபளை என்பதில் பெரிய விழுவளையை நோக்கும் போது அங்கு குளமும் அதனைச் சுற்றி பாரிய வயல் வெளியும் அதனை ஊடறுத்து -பெரிய நீர் பாயும் வாய்க்காலும் அமைந்துள்ளது.இந்த வாய்க்கால் விடத்தற்பளை,கரம்பகம் ,ஒட்டுவளி,வயல் வெளிகள் ஊடாக பெரிய விழுவளையை ஊடறுத்து பின்பு வளைந்து இராமியன் மயானத்துக்கு அருகாக வளைந்து வில்லு அமைப்பை போன்று உள்ளது.இது நாகர்கோவில் அருகில் உள்ள மருதங்கேணி உப்பாற்றில் சங்கமமாகின்றது.வில்-குளம் ,வளை என்பது வாய்க்கால் என்று காலப்போக்கில் "விழுவளை " "சிறுவளை "என்றும் இரு பிரிவுகளாகியது.இதில் சிறு விழுவளையிலே கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளது.

விழுபளையும் கண்ணகி அம்பாளும்[தொகு]

எழுதுமட்டுவாழ் சந்தியில் இருந்து நாகர்கோவில் வீதியூடாக 3 கி.மீ சென்றால் விழுபளைச் சந்தியில் v.c கிணறு உள்ளது.இங்கு இருந்து உலாந்தா தெருவினுடாக மேற்கே சென்று பின்பு தெற்குப்புறமாக 200மீற்றர் தூரத்தில் அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது.அங்கு தான் கண்ணகிக்கு ஒரு கோவில் அமைத்துள்ளனர்.

ஜயவருடம் 2014.07.04 ஆந் திகதி வெள்ளிக்கிழமை அம்பாளின் மஹா கும்பாபிஷேகப் விழா சுட்டிபுரம் தேவஸ்தான பிரதமகுரு குமாரசுவாமிக் குருக்கள் அவர்களும் எமது ஆலய குருவான சிவஸ்ரீ  தில்லையம்பலக்குருக்கள் அவர்களாலும் ஏனைய குருமார்களும் இணைந்து அடியவர்களின் பெருமுயற்சியால் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுள்ளது.அதன் தொடர்ச்சியாக 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று இறுதிநாள் சங்காபிஷேக நிகழ்வு (17.08.2014 ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது.

ஆலய அமைவிடச் சூழல்[தொகு]

ஆலய அமைவிடம் காடும்-காடு சார்ந்த பகுதியாகவும் அமையப்பெற்று முல்லை நிலப்பண்புகள் மிகுந்த பகுதியாக உள்ள போதும் ஆலயத்தின் வாசல் பகுதியில் குஞ்சு விழுவளை வயல்வெளி உள்ளது.இது மருத நிலத்திற்குரிய பண்பாகும்.இதிலிருந்து ஆலய அமைவிடத்தில் முல்லை நிலப்பண்பும்,மருத நிலப் பண்பும் ஒருங்கே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.ஆலய அமைவிடத்தின் நிலப்பகுதி மணற்பாங்கானதாகும்.இங்குள்ள உள்வீதிக்கும்-வெளி விதிக்கும் இடையே சோலைக் காடுகள் காணப்படுகின்றன.இக் காட்டினுள் நீண்ட நெடுமரங்களும்,செடி -கொடிகளும் நிறைவாகக் காணப்படுகின்றது .அப்புதர்களிடையே காட்டு மிருகங்கள்,பாம்புகள்,விச ஜந்துகளும் காணப்பட்டன.தற்போது பெரு விருட்சங்களை விட்டு சிறு செடிகொடிகளையும்,புதர்களையும் ஆலய தொண்டர்களால் துப்பரவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.அத்துடன் தற்போது ஆலய பரிபாலனசபையினரால் உள்வீதியைச்   சுற்றி சுமார் 10 அடி உயரமான சுவர்களையும் தெற்கு பக்கத்திலும்,வடக்கு பக்கத்திலும் இரும்பு கதவுகளையும்  அமைத்துள்ளனர்.

விழுபளை ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலய வரலாறு[தொகு]

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் ஈழவளநாடு தஷிண கைலாயம் என்றும் இந்து மகா சமுத்திரத்தின் முத்து என்றும் இரத்தின துவீபம் எனவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றது .இத்தகைய பிரசித்தி வாய்ந்த ஈழமணித் திருநாட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்து சமயம் வேரூன்றி வளர்ந்து வருகின்றது .இதனாலேயே ஈழத்தை "சிவபூமி" எனத் திருமூலர் போற்றிக் கூறியுள்ளமையைக் காணலாம். இந்தியாவிலே சேர நாட்டரசனான சேரன் செங்குட்டுவன் இமய மலையிலிருந்து கருங்கல் எடுத்து வந்து கண்ணகிக்கு சிலை செய்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் செப்புகின்றது.சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை அமைத்து எடுத்த விழாவில்"கடல் சூழ் இலங்கைக் கயபாகு வேந்தனும் கலந்துகொண்டான் "என்றும் அவன் இலங்கைக்கு மீண்டபொழுது கண்ணகி சிலையையும் கொண்டுவந்து இலங்கையிலே அனுராதபுரத்திலே வைத்து வழிபட்டதாக சான்றுகள் பகிர்கின்றன.இதனைத் தொடர்ந்தே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியெங்கும் கண்ணகி வழிபாடு ஆதி பராசக்திக்கு நிகராக பத்தினித் தெய்வமாக வழிபாடியற்றப்பட்டு வருகின்றது. தெய்வீகத்தன்மையும் திருவருட்சிறப்பும் கொண்ட திருத்தலங்களில் உறைந்துள்ள தெய்வங்களின் அருள் நிறைந்த அற்புதங்கள் நம் நாட்டு ஆலயச் சிறப்புக்கும் பக்தி மேம்பாட்டிற்கும் உறுதுணையாகின்றது. இந்தயாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசத்தின் கிழக்கு திசையிலே எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் ஏ 9(கண்டி)பிரதான வீதிக்கு 2மைல் தொலைவில் பலர் புகழும் விழுபளை என்னும் பழம் பதியிலே அருள்மிகு கண்ணகை என வழங்கும் ஸ்ரீமீனாட்சி அம்பாள் எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கிறாள் .அம்பாள் மிகவும் பழமை வாய்ந்த சக்தி ஆகும்.தம்மை நாடி வருகின்ற அடியார்களுக்கும்,நம்பிக்கை உடையவர்களுக்கும் என்றும் அருள் பொழிவாள் விழுபளை கண்ணகி அம்பாள் தாயே சக்தியின் வடிவமே என்று மனம் குளிர எமது மூதாதையர் தொட்டு இற்றைவரை வழிபாடு செய்து வருகின்றனர்.தாயின் பெருமைகளை நாம் கூற முடியாது.மாபெரும் சக்தியாக கிழக்கு பக்கம் நோக்கியபடியே கருணை மழை பொழியும் அருட்கடாட்சமானது இக் கிராம மக்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்று கூறின் மிகையாகாது. இவ்வாறு பெருமையோடு விளங்குகின்ற இவ்வாலயம் இற்றைக்கு 200வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது.மண் குடிசையிலே கண்ணகை அம்பாள் என்னும் பெயர் வழக்கத்தோடு மக்களால் பெரும்பக்தியோடு வணங்கப்பெற்று வந்துள்ளது. அன்பர்களுக்கு துன்பம் நேர்கையில் பல அற்புதங்கள் நிகழ்த்திய வரலாறுகள் செவிவழியாக பலவுண்டு . இப்பிரதேச மக்கள் தமக்கு ஏற்படுகின்ற நோய்களை நீக்கும்படி கண்ணகைத்தாயின் தயவினை வேண்டித் தொழுக்கின்றனர்.அருட்கடலாகி கருணாகதியாக நோய் துயரில் இருந்து மக்களை விடுவித்து மழை வளம் கொடுத்து பயிர்வளம் செழித்து மகிழ்வோடு இருக்கும் வரம் அளிப்பாள். மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம் மருத நிலச்சூழலிலே அமைந்திருக்கின்றது.அவ் ஆலயத்தைச் சுற்றி மகிழ்,வேம்பு,புன்னை ,அத்தி,ஆத்தி,கொன்றை,சுரபுன்னை முதலான விருட்சங்கள் நிறைந்து இயற்கை அழகோடு இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றது.கலங்கரை விளக்கு போன்று ஒளி வீசுகின்ற கண்ணகை அம்பாளுக்கு வருடம் தோறும் ஆடி மாதத்தில் பத்து நாட்களுக்கு மகோற்சவம் எடுத்தும் பொங்கல்,வேள்விகள் செய்தும் பக்தர் தமது மனக்குறைகளை நீக்குவார்கள். இவ்வாலயத்தில் அலங்காரத் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது.விசேட மேளக்கச்சேரிகள் ,நாட்டிய தாரகைகளின் நடனக் கச்சேரிகள்,வான வேடிக்கைகள் போட்டி போட்டு இரவு முழுவதும் நடைபெற்றிருக்கின்றது.அதிகாலையிலே அம்பாள் காராம்பசு,சிங்கம்,அன்னப்பட்சி வாகனங்களிலும் முத்துச் சப்பறத்திலும் வீதியுலா வரும் காட்சி மிகவும் பக்திப்பரவசத்துடன் கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருக்கும்.தேர் உற்சவத்தன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெற்றுச் செல்வர். மேற்படி இவ்வாலயம் நெடுங்காலமாக தர்மகர்த்தாக்களான வேலுப்பிள்ளை தெய்வானை,சுந்தரம் பொன்னம்மா ஆகியோரின் வழித்தோன்றல்களால் நிர்வகிக்கக்கப்பட்டு வந்துள்ளது.இப்போதும் அவர்களின் மூத்த மகளான அருளம்பலம் அருந்தவநாயகி (பவளம்) அவர்களே தர்மகர்த்தாவாகச் செயற்பட்டு வருகின்றார்.சைவ ஆச்சாரியார்களாலும்,அந்தணர்களாலும் காலத்துக்கு காலம் நித்திய நைமித்திய பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது. இவ்வாலயம் 1975ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாக புனருத்தாரணம் செய்யப்படாமல் இருப்பதை அவதானித்து கவலையுற்ற அம்பாள் அடியார்கள் தர்மகர்த்தாவின் ஒப்புதலுடன் ஓர் ஆலய பரிபாலன சபையை அமைக்கும் நல் நோக்குடன் 1984ஆம் ஆண்டு ஆலய முன்றலில் கூடினர்.அன்றைய கூட்டத்தில் சமாதான நீதவான் உயர்திரு குலசேகரம் பிள்ளை அவர்களின் தலைமையில் ஆலய திருப்பணிச் சபை ஒன்றைத் தெரிவு செய்தனர். இச் சபையின் அயராத முயற்சியாலும் அம்பாள் அடியார்களின் பேராதரவினாலும் கர்ப்பக்கிரகம் முதலாக கொடித்தம்பம் வரையான ஐந்து மண்டபங்களையும் ,அத்துடன் மடைப்பள்ளியாக மண்டபம்,வசந்தமண்டபம்,ஆகியவற்றையும் கட்டி முடித்து 1989ஆம் ஆண்டு தைத் திங்கள் 28ஆம் நாள் இவ்வாலயத்தில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் சிவஸ்ரீ மு.பராமசாமிக்குருக்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. தொடர்ந்து சங்காபிஷேகம்,மகோற்சவம்,நித்திய,நைமித்திய பூசைகள் எதுவித இடையூறுறின்றி இனிதே நடைபெற்றுள்ளது.1997ஆம் ஆண்டில் உயர் திரு க.குலசேகரம்பிள்ளை அவர்கள் கடும் சுகவீனம் உற்று இருந்தமையால் ஆலய பரிபாலன சபையின் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு சி .விநாயகமூர்த்தி அவர்கள் ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக செயற்பாடுகளை சிறப்புடன் முன்னெடுத்து வந்தார். இவ்வாறான காலகட்டத்தில் 2000ஆம் ஆண்டு எமது நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக அனைவரும் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது பத்து வருடங்களுக்கு2011 பின் ஆம் ஆண்டில் போர்ச்சூழல் நீங்கி மீள் குடியேற்றம் ஆரம்பமான போது அம்பாள் அடியார்கள் ஆவலுடன் வந்து பார்த்த போது கர்ப்பக்கிரகம் தவிர அனைத்து மண்டபங்களும் முழுமையாக சேதமடைந்ததுடன் ஆலய பொருட்களும் சூறையாடப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.இதனால் மனமுடைந்த அம்பாள் அடியார்கள் தர்மகர்த்தா குடும்பத்தினர்,ஆலயச் சிவாச்சாரியார் ,ஆகியோர் இவ்வாலயத்தை புனருத்தாரணம் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் ஆலய பரிபாலன சபை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

இதன் பயனாக 2012ஆம் ஆண்டு சட்டத்தரணி திரு த.வேலாயுதம் அவர்களின் தலைமையில் 21பேர் உறுப்பினராக கொண்ட ஆலய பரிபாலன சபை உருவாக்கப்பட்டது .இச்சபையானது துரிதமாகச் செயற்பட்டு கேள்வி கோரல் மூலம் பொருத்தமான கட்டிட ஒப்பந்தகாரரிடம் நிர்மாண வேலைகளை ஒப்படைத்தனர்.ஒப்பந்தக்காரரும் ஒரு வருடத்தில் ஆலயத்தைப்புனரமைத்து வழங்கியுள்ளனர்.இங்கு வாழும் அம்பாளின் அடியார்களும்,புலம்பெயர்ந்து மேலைத்தேய நாடுகளில் வாழும் அம்பாளின் பக்தர்களும் வழங்கிய பங்களிப்பின் விளைவாக இன்று காட்சி தந்து கொண்டிருக்கும் பஞ்ச தள இராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம் பூரணமாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது . ஜய வருஷம் ஆனித்திங்கள் 20ஆம் நாள் (04.07.2014) வெள்ளிக்கிழமை காலை உத்தர நட்சத்திரமும் ஸப்தமி திதியும் கூடிய 09.31மணி முதல் 10.19மணி வரையுள்ள சுப முகூர்த்த சுப வேளையில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

கோயில் குலநாகம்[தொகு]

ஆலய தல விருட்சமான நாவல்மரப்பொந்தில் பெரிய செட்டிநாகம் ஒன்று நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இதனுடைய சோடிப் பாம்பு தேரினுள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.கோவில் குலநாகம் ஆலயத்தை கள்வர் கயவர்களிடம் இருந்து பாதுகாத்து வந்தது.கி.பி 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தத்தினால் ஆலயத்தின் வசந்தமண்டபம்,சந்தனமண்டபம்,தம்பமண்டபம்,மடப்பள்ளி என்பவைகள் சேதமுற்ற போதும் ஆலயத்தின் பிரதான கர்ப்பக்கிரகம் அர்த்த மண்டபம் என்பவைகளுக்கு எவ்வித சேதாரமும் இல்லை.பின்பு 2009இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது மக்கள் அங்கே சென்று பார்த்த போது மூலஸ்தானம் உட்பட சகல விக்கிரகங்களும் அங்கே காணப்பட்டன.ஒருசில எழுந்தருளிகள் காணாமல் போய்விட்டன.அதனை அறிந்த அடியவர்கள் அங்கே சென்று பார்த்த போது கோயில் குலநாகம் அங்குள்ளவர்களுக்கு படம் விரித்து காட்சி கொடுத்தது.ஒருசில நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஒரு வர்த்தகரிடம் இருந்து இவ் எழுந்தருளி மூர்த்தங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

சந்தன மண்டபமும் அதன் சிறப்பும்[தொகு]

சந்தன மண்டபம் என்றால் சந்தனக்கல்லும் அதனை அரைத்து நெற்றியில் பொட்டாகப் போடுவதற்கு மருத மரத்தில் வெட்டப்பட்ட மருதம் குற்றியும் நீரும் காணப்படும்.இதனை அரைத்து போடும் அடியவர்கள் நெற்றியில் போடுவதுடன் ஆக்கி,தேமல்,பூச்சிக்கடிகளுக்கு அதனை மருந்தாக போட்டுவிடுவார்கள்.எல்லாம் அம்பாள் அருளால் மாறிவிடும்.சந்தன மண்டபத்திலும் அதன் விளிம்புகள் வெண் வைரக்கற்களால் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.அதற்கு அப்பால் தம்ப கொட்டகை கொடிமரம்-நந்தி பலிபீடம் அமைந்த மண்டபம் காணப்படும்.பீட அமைவிடம் தவிர ஏனைய பகுதிகள் மண்தரையாகவே காணப்பட்டது.மண்டபம் கிடுகினால் அழகுற வேயப்பட்டிருக்கும்.சந்தன மண்டபத்தில் சிங்கவாகனம்,அன்னவாகனம்,காராம்பசு போன்ற வாகனங்கள் வைக்கப்பட்டிருக்கும்.மண்டப தளம் நன்கு பசுவினுடைய சாணியும்-புற்று மண்ணும் முருக்கம் இலைச்சாறும் கலந்து மெழுகி இருப்பார்கள்.

வைரவர் ஆலயமும் அதன் சிறப்பும்[தொகு]

கண்ணகி அம்பாள் ஆலய வாசல் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளமை போல இங்குள்ள வைரவர் ஆலயமும் கிழக்கின் நோக்கி அமையப் பெற்றுள்ளது.இன்றும் அவ்வாறே உள்ளது.முதல் முதல் வைரவர் ஆலயமே இருந்ததாகவும் அவ்வாலயச் சூழலிலே கண்ணகி வற்றாப்பளை நோக்கிச் செல்லும்போது ஓய்வெடுத்ததாகவும் கர்ணபரம்பரைக் கதையாகக் கூறுவர்.இப்பொழுது வைரவருக்கு பூயை நடைபெற்றதன் பின்பு  தான் அம்பாளுக்கு பூயைகள் நடைபெறுவது வழமையானதாகும்.

ஆலயத்திற்கு என்று அப்பொழுது தீர்த்த கிணறு கிடையாது.தீர்த்த குளமே இருக்கும்.இது மிகப் புனிதமானது.இத் தீர்த்தக் குளத்தில் இருந்தே அம்பாளுக்கும் அபிஷேகத் தீர்த்தமோ ஏனைய மடப்பள்ளி அன்னதான தேவைக்கு நீரினை வாளிகள் மூலம் அள்ளி எடுப்பர்.இக்குளத்து நீர் மகத்துவமானது.பல அடியவர்களது நோய் நொடிகளை நீக்குவதை காணலாம்.பேய் பிசாசு பிடித்தவர்கள்,வைத்தியசாலைகளில் கைவிடப்பட்டவர்கள் எனப்பலர் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி அம்பாளை வழிபட்டு பூசாரியிடம் விபூதி போடுவித்து முடிந்ததும் நோய் நீங்கிவிடும்.

ஆலயத்தின் இன்றைய நிலை[தொகு]

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிறிய குடிசையிலே இருந்த இந்த ஆலயம் இன்றைய நிலையில் பஞ்சதள இராஜ கோபுரத்துடன் காட்சியளிக்கின்றது."கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பர் நம் சமய ஞானிகள்.இந்தக் கோபுரத்தை பார்த்தால் கலை நுணுக்கத்துடனான வண்ண ஓவியங்கள் புத்தம் புது பூக்கள் கோர்த்த மாலையாக உள்ளது.பஞ்சதள இராஜகோபுரம் ஐந்து கலங்களுடன் காணப்படுகின்றது.இதனைப் பார்க்கும் போது அழகாக ஜொலிக்கின்றது.உலகத்தில் உள்ள வர்ணப்  பூக்களை கொட்டிக் குவித்து கோபுரம் செய்வது போல பக்திப் பரவசத்தோடு பவித்திரமான அழகு என்னே ! ஒழுங்கு ,சிறப்பு ,வனப்பு மனது மயங்கி நிற்கிறது.

இக்கோபுரம் இந்து மதத்திற்கு உரிய இராஜகோபுரம் ,கட்டட சிற்ப சாஸ்திரங்கள் பொதிந்து நிற்கின்றது.ஒவ்வொரு சிறிய சிற்பமும் கலை நுணுக்கத்தின் உரைப்போடும் உற்சாகத்தோடும் செய்யப்பட்டு இருக்கின்றது.அம்பாளின் பல்வேறு திருக்காட்சிகள்,திருவிளையாடல்கள் இக் கோபுரத்தில் காணப்படுகின்றன.