விக்கிப்பீடியா:விக்கி மின்மினிகள்/பயிற்சி/நாள் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முந்தைய பயிற்சியில், தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி சிறு சிறு பங்களிப்புகளை நல்குவது என்று பார்த்தோம்.

அடுத்து பெரிய பங்களிப்புகளைச் செய்யும் முன், விக்கிப்பீடியாவில் என்ன வகையான பங்களிப்புகளைச் செய்யக்கூடாது என்று பார்ப்போம்.

விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று.

எடுத்துக்காட்டு: தமிழகப் பள்ளிகளில் இந்தி கற்பிக்க வேண்டுமா வேண்டாமா என்ற உங்கள் கருத்தினை உங்கள் வலைப்பதிவில் எழுதலாம். ஆனால், விக்கிப்பீடியாவிலோ இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களின் வரலாற்றையும் இரு பக்க நிலைப்பாடுகளையும் தகுந்த ஆதாரங்களுடன் தொகுத்து எழுத வேண்டும். விக்கிப்பீடியாவில் உங்கள் தனிப்பட்ட கருத்துக்கு இடம் இல்லை.

விக்கிப்பீடியா ஒரு அகரமுதலி அன்று.

எடுத்துக்காட்டு: சித்திரை ஒரு தமிழ் மாதம் என்று பொருள் மட்டும் கூறுவது என்றால் நீங்கள் விக்சனரியில் பங்களிக்கலாம். அதுவே, அம்மாதம் குறித்த விரிவான தகவலைத் தருவது விக்கிப்பீடியா. பார்க்க: சித்திரை குறித்த விக்கிப்பீடியா கட்டுரை.

விக்கிப்பீடியா ஒரு படக்கோவை அன்று.

எடுத்துக்காட்டு: ஒரு ஊருக்கு சுற்றுலா சென்றால் அந்ந ஊர் தொடர்பான பொருத்தமான ஒரு படத்தை அந்த ஊர் குறித்த கட்டுரையில் சேர்க்கலாம். மாறாக, நீங்கள் சுற்றுலாவில் எடுத்த அத்தனைப் படங்களையும் விக்கிப்பீடியாவில் பதிவேற்றி கட்டுரையிலோ உங்கள் பயனர் பக்கத்திலோ இணைக்கக்கூடாது.

விக்கிப்பீடியா ஒரு சந்தைக்கடை அன்று.

எடுத்துக்காட்டு: குறிப்பிடத்தக்க ஒரு நூல் பற்றி கட்டுரை எழுதலாம். ஆனால், அந்நூலை வாங்குவதற்கான இணையக் கடைகளுக்கு இணைப்புகள் தராதீர். நூலின் விலை போன்ற விற்பனை விவரங்களைக் குறிப்பிடக்கூடாது. இதே போல், உங்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்கள், பொருட்களை விளம்பரப்படுத்தும் நோக்கிலும் கட்டுரைகள் எழுதக்கூடாது.

மேலும். விக்கிப்பீடியாவில் எவ்வாறெல்லாம் பங்களிக்கக்கூடாது என்று அறிய விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று பாருங்கள்.