விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 05, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சு. ப. தமிழ்ச்செல்வன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்து இறப்பின் போது புலிகளின் தலைமையின் உள்வட்டத்தின் ஒருவராக செயற்பட்டார். 1987 இல் யாழ். தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராகவும் 1991 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார். 1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; 2007 நவம்பர் இலங்கை வான்படையின் தாக்குதலில் கொல்லப்படும் வரை அப்பதவியில் இருந்தார். பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் பகிரங்க முகமாக செயற்பட்டு இராணுவ இயக்கமாக இருந்த புலிகள் இயக்கத்தில் அரசியல் மாற்றங்களையும் ஏற்படுத்தி வந்த்தார். புலிகளின் சமாதானப் பேச்சுவாத்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார். 23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.


காட்டீசியன் ஆள்கூற்று முறைமை.

கணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை (Cartesian coordinate system) என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண்டு எண்கள் மூலமாக இம்முறைப்படி வேறுபடுத்திக் குறிக்கலாம். இந்த இரண்டு எண்களும் குறிப்பிட்டத் தொடக்கப் புள்ளியில் இருந்து அளந்தறியப்படும். இவை x- ஆள்கூறு, y- ஆள்கூறு என அழைக்கப்படுகின்றன. ஆள்கூறுகளைத் தீர்மானிப்பதற்காக ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு கோடுகள் வரையப்படுகின்றன இவைதான் ஒப்பீட்டுச் சட்டக் கோடுகள். இவை x- அச்சு, y- அச்சு எனப்படுகின்றன. x- அச்சைக் கிடை நிலையிலும், y- அச்சை நிலைக்குத்தாகவும் வரைவது மரபாகும். இக்கோடுகள் ஒன்றையொன்று வெட்டும் புள்ளி தொடக்கப்புள்ளி எனப்படும். இப்புள்ளியிலிருந்து தொடங்கி அச்சுக்கள் வழியே அருகிலுள்ள படத்தில் காட்டியபடி, அளவுகள் குறிக்கப்படுகின்றன.