விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 2, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாதித் திருநாள் ராம வர்மா 1829 முதல் 1846 வரை இந்தியாவின் திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆண்ட மன்னராவார். இவருடைய தாய் மகாராணி கவுரி லட்சுமி பாய் 1810-1815- ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமத்தானத்தை ஆங்கிலேயரின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியுடன் ஆண்டு வந்தார். மகாராணி லட்சுமி பாய் - இராசராச வர்மா கோயில் தம்புரான் தம்பதியருக்கு 1813 ஆம் ஆண்டு சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்தார். இவர் பிறந்த ஆண்டிலேயே அரசராக அறிவிக்கப்பட்டார். மகாராணி கவுரி லட்சுமி பாய் இறந்த பின், 1815 ஆம் ஆண்டு முதல் 1829 ஆம் ஆண்டு வரை அரசனின் இளவயது காரணமாக நாட்டினைப் பதிலுக்கு ஆள்பவர் என்ற முறையில் மகாராணி கவுரி பார்வதி பாய் ஆட்சி செய்தார். சுவாதித் திருநாள் 1829 ஆம் ஆண்டு தக்க அகவையடைந்ததும் முழு அரசாங்க அதிகாரத்தையும் ஏற்று திருவிதாங்கூர் அரசைத் தன அந்திமக் காலமான 1846 ஆண்டு வரை ஆண்டார். சுவாதித் திருநாள் சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்லாமல், சிறந்த இசை வல்லுனரும் இசைப் புரவலரும் ஆவார். இவர் 400க்கும் மேலான கீர்த்தனைகளை கருநாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை வடிவங்களில் இயற்றியுள்ளார். மேலும்...


மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும் நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. மேலும்...