விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டெம்பர் 14, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சலீம் அலி (நவம்பர் 12, 1896 - ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் மற்றும் இயற்கையியல் அறிஞர் ஆவார். சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி என்பதாகும்.இவர் இந்தியாவில் முதன்முதலில்பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத் துவக்கியவர். இவர் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society) புரவலராக (patron) விளங்கியவர். பறவைகளின் வாழ்க்கையைப் பற்றியும், பழக்க வழக்கங்கள் குறித்தும் அவர் வெளியிட்ட கட்டுரைகளும், நூல்களும் உலகப் புகழ் வாய்ந்தவை.


நாமக்கல் (ஆங்கிலம்: Namakkal) இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது ஒரு நகராட்சியாகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது குப்பை இல்லா நகரம் என்னும் சிறப்பையும் பெற்றதாகும். "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீ உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இந்தப் பாறையின் மீது இராம சந்திர நாயக்கர் கட்டிய கோட்டை உள்ளது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். மகாத்மா காந்தி அவர்களின் பொதுக்கூட்டம் 1933ல் இப்பாறை அருகே நடைபெற்றது.


அஞ்சற்தலை அல்லது தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு, முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்று அளிக்கின்றார். முன் கட்டணம் செலுத்தப்பட்ட உறைகளைப் பயன்படுத்துவதிலும் பார்க்க அதிகம் விரும்பப்படும் முறை இதுவாகும்.