விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 19, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில உயிரினங்கள் வேறு வலிய உயிரினத்திற்கான அடையாளங்களைப் போலியாகப் பெற்றுத் தம்மைக் காத்துக்கொள்ளும் தன்மைக்குப் பேட்சின் போலியொப்புரு (Batesian mimicry) என்று பெயர். இத்துறையில் ஆய்வு செய்த ஆங்கில இயற்கையியலாளர் என்றி பேட்சு என்பவர் பெயரால் இவ்விளைவு அறியப்படுகின்றது. இவர் பிரேசில் நாட்டின் மழைக்காடுகளில் 1840களின் இறுதியில் கள ஆய்வுகள் செய்தபொழுது இதனைக் கண்டுபிடித்தார். பிறிதொரு வலிய உயிரினத்தின் அடையாளங்களைப் போலியொப்பாகப் பெற்று வேட்டையாடும் எதிரிகளிடம் (கோண்மா) இருந்து தப்பும் தன்மை ஒரு படிவளர்ச்சி வெளிப்பாடு என்று கருதப்படுகின்றது. இந்த விளக்கம் சார்லசு டார்வின் முன்வைத்த படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன் பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த "மிம்மிக்ரி" என்ற சொல் செடிகளின் பண்புகளையும் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. மேலும்..


ஆபிரகாம் கோவூர் (1898-1978) இலங்கையின் பகுத்தறிவாளரும், உளவியலாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர், கேரளாவில் பிறந்து கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்தவர். தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார். கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன. அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, "நம்பிக்கை" என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப்பட்டது. மேலும்..