விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 17, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குதிரைலாட நண்டுகள், குறிப்பாக மென்மையான மணற்பாங்கான அல்லது சேற்று அடித்தளத்தைக் கொண்ட ஆழம் குறைந்த கடல் நீரில் வாழும் ஆர்த்திரப்போடா அங்கிகளாகும். இணைசேரும் காலங்களில் அவை கடற்கரைக்கு வருகை தரும். அவை மீன் பிடிப்பதற்கான தூண்டில் இரையாகவும், வளமாக்கிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் கரையோர வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும், வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரமாக இவை கட்டுப்பாடின்றி அதிகளவில் பிடிக்கப்படுவதாலும் அண்மைக்காலமாக இவற்றின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது. தாய்லாந்துக் கடல்களிற் காணப்படும் குதிரைலாட நண்டு இனங்களின் சினைகளில் ரெற்றோடோரொக்சின் எனப்படும் கடுமையான நரம்புத்தொட்சின் காணப்படலாம். குதிரைலாட நண்டுகள் வாழும் உயிர்ச்சுவடுகளாகக் கருதப்படுகின்றன. மேலும்


நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப்பிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக இருந்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். உலக முக்கியத் தலைவர்களுள் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்ததாக கருதப்படும் தலைவர்களில் ஒருவரான இவரை 27 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதன்படி அவரின் விடுதலையை உலகமே எதிர்பார்த்திருந்தது. மேலும்