விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 14, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹஜ் என்பது இசுலாமியர் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இசுலாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு இசுலாமியன் தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்பயணத்தைச் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் ஒரு மனிதன் தன்னை இறைவனிடம் (அல்லா) அர்ப்பணிப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் புனித பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12வது மாதம் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும். ஹஜ் புனிதப் பயணம் முகமது நபியின் வாழ்கையின் தொடர்பில் 7-ம் நூற்றாண்டில் ஆரம்பித்ததாகும். காபாவை ஏழு முறை இடப்புறமாக வலம் வந்தும் அல்-சபா, அல்-மார்வாஹ் மலைகளின் நடுவே மாறி மாறி ஓடியும் அறபாத் மலைக்கு சென்றும் சம்சம் கிணறின் புனித நீரைப் பருகியும் சாத்தானின் மீது கல்லெறிந்தும் வழிபட்டனர். பின் தலையை மொட்டை அடித்து, ஒரு விலங்கைப் பலியிட்டு ஈத் அல்-அதா எனும் மூன்று நாள் திருவிழாவான தியாகத் திருநாளைக் கொண்டாடுவர். மேலும்...


திருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்கத் திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர். மேலும்...