விக்கிப்பீடியா:ஆங்கில விக்கியில் உள்ள தமிழ்ப் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களைப் பெற ஏற்கனவே ஆங்கில விக்கியில் செயல்பட்டு வரும் தமிழர்களை ஈர்க்கலாம் என சோடா பாட்டில் தெரிவித்தார். ஆங்கில விக்கியில் இருந்து இங்கு வந்த சுந்தர், சோடா பாட்டில் போன்றோர் மிக நல்ல பங்களிப்புகளைத் தந்துள்ளனர். ஏற்கனவே விக்கி முறைகளை அறிந்தோர் என்பதால் மிக இலகுவாக இங்கு செயற்பட முடியும். எனவே, இதனை ஒரு முறையான ஒரு திட்டமாகவே செயற்படுத்தலாம்.

தமிழ் விக்கிக்கு ஒரு சிறிய அறிமுகம் தந்து, ஆங்கில விக்கியில் உள்ள தமிழர்கள் ஏன் இங்கும் வந்து பங்களிக்க வேண்டும் என்பதனை ஒரு வேண்டுகோளாக எழுதி பயனர் பேச்சுப் பக்கங்களில் இடலாம்.

ஆங்கில விக்கியில் உள்ள தமிழர்களின் பேச்சுப் பக்கங்களில் இட வேண்டிய வேண்டுகோளை கீழே தொகுக்கலாம்.

வேண்டுகோள்

வணக்கம்.

தமிழ் விக்கிப்பீடியா சார்பாக உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய்மொழி மூலமே முழுமையான, ஆழமான அறிவைப் பெற முடியும். எனவே, விக்கிப்பீடியா திட்டம் "அனைவருக்கும் கட்டற்ற அறிவு" என்னும் தன்னுடைய இலக்கை அடைய, பல்வேறு மொழிகளிலும் வளர்வது அவசியம்.

தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது 25,000க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் கொண்டு முன்னணி இந்திய விக்கிப்பீடியாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆங்கில விக்கி அனுபவம் உள்ள உங்களைப் போன்றோர் தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தில் ஈடுபாடு காட்டுவது மிகவும் நன்றாக இருக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தங்கள் பங்களிப்பு என்பது நேரடியாக கட்டுரை எழுதுவதாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. பின்வரும் வழிகளில் கூட பங்களிக்கலாம்:

  • உதவிப் பக்கங்கள், கொள்கைப் பக்கங்கள் உருவாக்கம்.
  • விக்கியாக்கம்.
  • கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள் நீக்கம், படம் சேர்ப்பு.
  • நீங்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தமிழாக்கம். அக்கட்டுரைகள் ஏற்கனவே இருந்தால் அவற்றை விரிவாக்குவது, தகவலைச் சரி பார்ப்பது.
  • நுட்பப் பணிகளில் உதவுதல்.
  • தமிழ் விக்சனரி, தமிழ் விக்கி மூலம் போன்ற பிற தமிழ் விக்கித் திட்டங்களில் ஈடுபாடு.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விக்கி பயிற்சிப் பட்டறைகள் ஏற்பாடு செய்தல்.

ஏற்கனவே, சுந்தர், சோடா பாட்டில் போன்ற பல ஆங்கில விக்கிப்பயனர்களின் வரவு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க உதவி வருகிறது. நீங்களும் இணைந்து பங்களிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து ஏதேனும் ஐயங்கள் இருந்தால், உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் தமிழ் விக்கிப்பீடியா தூதரகத்தில் கேட்கவும். நன்றி.