உள்ளடக்கத்துக்குச் செல்

வானகெஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வானகெஞ்சி என்பது விருதுநகர் மாவட்ட தெலுங்கு பேசும் கிராம மக்கள், மழை இன்றி பஞ்சம் ஏற்படின் தங்கள் கிராமங்களில் மழை பொழிய வேண்டி, புரட்டாசி மாதத்தில் நடைபெறும் ஒரு விழா. வானகெஞ்சி எனும் தெலுங்கு சொல்லுக்குத் தமிழில் மழைக்கஞ்சி என்று பொருள்.

விழா நடைமுறை

[தொகு]
வானகெஞ்சி விழாவில் பி. ராமசந்திரபுரம் கிராமத்துச் சிறுவர்கள்.
வானகெஞ்சி விழாவில் கிராமத்து மக்கள்.

மழைஇன்றி பஞ்சம் ஏற்படின் கிராமச் சிறுவர்கள் ஒன்றுகூடி வீடுதோறும்

வானலேது வர்ஸாலேது வானகெஞ்சி
புல்லலேது புடகலேது புல்லகெஞ்சி

என தெலுங்கு மொழியில் கூவி "மழைக்கஞ்சி" பிச்சை எடுப்பார்கள்.


பாத்திரம் நிறைந்த பின் ஊர்ப்பொதுக் குடிதண்ணீர்க் கிணற்றில் நீர் எடுத்து, ஒரு செம்பில் (குவளை) ஊற்றி அதன் வாய்ப் பகுதியிணை, அகலமான இலையினால் மூடி, செம்பைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, இலை கீழே விழுந்து தண்ணீர் கொட்டும் வரை ஊர் எல்லைப் பகுதி வரை செல்வார்கள். இலை கீழே விழுந்து தண்ணீர் கொட்டிய இடத்தில் அனைவரும் ஒன்றுகூடி பிச்சை எடுத்த "மழைக்கஞ்சியை" சாப்பிடுவர். அதன் பிறகு ஒரு வயதான மூதாட்டியைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி (அழுகுரல்) வைத்து அழுவார்கள். அதன் பின் மழை பெய்யாததற்கு அவரே காரணம் எனக் கூறி வசைமாரி பொழிந்து மொட்ட விளக்குமாறால் (தேய்ந்த துடைப்பம்) அடித்து விட்டு கலைந்து செல்வார்கள். இந்நிகழ்வுக்குப் பின் மழை விழும் என்பது அங்குள்ள கிராம மக்களின் நம்பிக்கை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானகெஞ்சி&oldid=1256974" இலிருந்து மீள்விக்கப்பட்டது