வரலாற்றுக்கு முந்திய காலக் கலை
வரலாற்றுக்கு முந்திய காலக் கலை என்பது எழுத்தறிவுக்கு முற்பட்ட பண்பாடுகளால் ஆக்கப்பட்ட எல்லாக் கலைகளையும் குறிக்கும். இது, நிலவியல் வரலாற்றில் மிகப் பிந்திய காலகட்டம் ஆகும்.
பழங்கற்காலம்
[தொகு]நிச்சயமான கலை வெளிப்பாடு என்ற அளவில் அறியப்பட்ட சான்றுகள் மேல் பழங்கற்காலத்தில் இருந்தே கிடைக்கின்றன. இவை ஹோமோ சப்பியன்களால் உருவாக்கப்பட்டவை. எனினும் இதற்கு முன்னரே ஹோமோ இரக்டஸ்களும், இலக்கற்ற வரிவடிவங்களை பயன்பாட்டுப் பொருட்களில் ஆக்கியிருப்பது தெரியவந்துள்ளது. துரிங்கியாவில் உள்ள பொல்சிங்ஸ்லெபான் என்னுமிடத்தில் இவ்வாறான பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றைக் கலைக்கு ஒரு முன்னோடி என்பதுடன், பயன்பாட்டுத் தேவைக்கும் மேல் பொருட்களை அழகு படுத்தும் எண்ணத்தின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது எனலாம். சமச்சீர்த்தன்மை, கருவிகளின் வடிவத்தில் செலுத்தப்பட்ட கவனம் என்பன, நடுப் பழைய கற்காலக் கைக் கோடரிகளைக் கலை வெளிப்பாடுகளாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட சில பொருட்கள், நியண்டர்தால் மனிதர் சிக்கலான கலை மரபு ஒன்றைக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்னும் கருத்தை உருவாக்கியுள்ளன.
இன்றுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கலை வேலைப்பாடு எனக் கருதத் தக்கது, தான்-தானின் வீனஸ் எனப்படும் கி.மு 500,000 முதல் 300,000 வரையான, நடு ஆக்கியூலியக் காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய உருவச் சிலை ஆகும். மொரோக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இது, 6 சமீ நீளம் கொண்ட மனித உருவத்தை ஒத்திருக்கும் ஒரு சிலை ஆகும். இது இயற்கையான நிலவியல் செயற்பாடுகளால் உருவாகியிருக்கக் கூடும் எனினும், மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சுவடுகளும், நிறம் தீட்டப்பட்டதற்கான சில சான்றுகளும் இதிலே உள்ளன. இச் சிலையின் மேற்பரப்பில் காணப்பட்ட எண்ணெய்த் தன்மை கொண்ட பொருள் இரும்பு, மங்கனீசு ஆகியவை கொண்ட சேர்வைகளின் கலவை எனக் கண்டறியப்பட்டது. இது, இவ்வுருவம் எவ்வாறு தோன்றியது எனினும், யாரோ இதற்கு நிறம் தீட்டிப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொருளை மனிதர்களின் கலை உணர்வு வெளிப்பாட்டின் சான்றாகக் கொள்வதையிட்டுக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏறத்தாழ இதே போன்ற, கிமு 250,000 காலப்பகுதியைச் சேர்ந்த, பெரக்காத் ராமின் வீனஸ் என்னும் இன்னொரு உருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் முன்போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.