வட காந்தமுனை
புவியின் வட காந்தமுனை (North Magnetic Pole) என்பது புவியின் காந்தப்புலம் நிலைக்குத்தாகக் கீழ் நோக்கி இருக்கும்படியான புவி மேற்பரப்பில் உள்ள ஒரு இடம் ஆகும். காலத்தைப் பொறுத்து இப்புள்ளி படிப்படியாக மாறுகிறது. உண்மையில் வட காந்தமுனை காந்தப்புலத்தின் தென்முனை ஆகும்.
2001 ஆம் ஆண்டில் வட காந்தமுனையின் அமைவிடம் வட கனடாவில் உள்ள எல்லெசுமியர் தீவுக்கு அண்மையில் 81°18′N 110°48′W / 81.3°N 110.8°W ஆல் குறிக்கப்படும் புள்ளியில் இருப்பதாக கனடா நிலவியல் அளவையகத்தினால் கணிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இதன் அமைவிடம் 82°42′N 114°24′W / 82.7°N 114.4°W என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென் அரைக்கோளத்தில் உள்ள இதனை ஒத்த புள்ளி தென் காந்தமுனை ஆகும். புவியின் காந்தப்புலம் சமச்சீர்த் தன்மை கொண்டதல்ல ஆதலால் வட காந்தமுனையும், தென் காந்தமுனையும் ஒன்றுக்கொன்று நேரெதிராக அமைந்திருப்பதில்லை. அதாவது வட காந்தமுனையையும், தென் காந்தமுனையையும் இணைத்து வரையப்படும் கோடு புவிக் கோளத்தின் மையத்தினூடாகச் செல்லாது. உண்மையில் இம் மையம் மேற்குறிப்பிட்ட கோட்டில் இருந்து 530 கிமீ (329.3 மைல்) தொலைவில் உள்ளது.
நகரும் வட துருவ காந்தப்புலம்
[தொகு]1881-ஆம் ஆண்டில் தான் பூமிப் பந்தின் வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்டது. அப்போதிருந்தே வட காந்தமுனை ஆண்டுக்கு, 10 கி.மீ.,வேகத்தில் இடம் பெயர்ந்து வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். தற்போது இந்த வேகமானது கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 30 முதல் 40 கி.மீ வரை இடம்பெயர ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வட காந்த துருவம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 34 மைல் தொலைவில் கனடாவின் ஆர்டிக் பகுதியிலிருந்து சைபீரியாவை நோக்கி நகர்ந்துள்ளது. பூமியின் தற்போதுள்ள இரு காந்தப் புலங்களும் 7.8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். [1][2]