லீலா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலா நாயுடு

பிறப்பு 1940
இறப்பு 28 சூலை 2009 (அகவை 69)
மும்பை
தொழில் நடிகை, மாடல்

லீலா நாயுடு (Leela Naidu, தெலுங்கு: లీలా నాయుడు, 1940 - சூலை 28, 2009) ஆந்திராவில் பிறந்தவர். இவருடைய தந்தை ஓர் இந்தியர்; தாயார் பிரான்ஸ் தேசத்தவர். இந்தித் திரைப்பட உலகில் சிலபடங்கள் மூலம் முக்கிய இடத்தினை வகித்தவர். வோக் பத்திரிகை, உலகின் மிகச் சிறந்த பத்து அழகிய பெண்கள் என்று பட்டியலிட்டிருந்ததில் இந்தியாவின் சார்பில் இடம் பெற்றிருந்த இருவரில் இவரும் ஒருவர்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

அணு விஞ்ஞானி டாக்டர் ராமையா நாயுடுவுக்கும், டாக்டர் மார்த்தே நாயுடுவுக்கும் மகளாக 1940-ல் ஆந்திராவில் பிறந்தவர் லீலா நாயுடு. ராமையா நாயுடு யுனெஸ்கோ நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றி வந்தவர். டாக்டர் மார்த்தே ஃபிரான்ஸ் தேசத்தவர். லீலா நாயுடு 1954-ஆம் ஆண்டு, ஃபெமினா பத்திரிகை நடத்திய மிஸ்.இந்தியா போட்டியில் முதலிடத்தில் வந்தார். லண்டனைச் சேர்ந்த வோக் பத்திரிகை உலகின் தலைசிறந்த அழகிகள் பட்டியலை வெளியிட்ட போது அதில் ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரிதேவியுடன் லீலா நாயுடுவும் இடம் பிடித்திருந்தார்.

திரைஉலக வாழ்க்கை[தொகு]

1960-ஆம் ஆண்டில் ரிஷிகேஷ் முகர்ஜி என்கிற இந்தித் திரைப்பட இயக்குநரின் “அனுராதா” என்கிற படத்தில் பல்ராம் சஹானிக்கு இணையாக இவருடைய திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. அந்தத் திரைப்படம் வணிகரீதியாக வெற்றி அடையவில்லை எனினும் தேசிய விருதினைப் பெற்றது. அதன்பிறகு 1962-ல் “உம்மீத்” என்கிற படத்தில் அஷோக்குமாருக்கு இணையாக நடித்தார். 1963-ல் இவர் நடித்து ஆர்.கே.நய்யாரின் இயக்கத்தில் வெளிவந்த “ஏ ராஸ்தே ஹை ப்யார் கே” என்கிற படம் இவருக்கு எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துத் தந்தது. அது அடிப்படையில் ஓர் உண்மைக்கதையின் திரை வடிவம். அந்தக் காலத்தில் பரபரப்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்த நானாவதி வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் அது. அதில் கணவனுக்கு துரோகம் செய்து அவனுடைய நண்பனுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணின் பாத்திரத்தில் நடித்தார் லீலாநாயுடு. அது இவருக்குப் பெயர் வாங்கித் தந்தாலும் வெற்றிப்படமாக அமையவில்லை. ஹவுஸ்ஹோல்டர் என்கிற திரைப்படத்தில் இவருடைய நடிப்பைப் பார்த்து விட்டு சத்யஜித் ரே, மார்லன் பிராண்டோ, லீலாநாயுடு, சசிகபூர் ஆகியோரை வைத்து “தி ஜர்னி” என்கிற ஆங்கிலப்படம் ஒன்றினை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். (அந்தத் திரைப்படம் முழுமை பெற்று வெளிவரவில்லை.). பாகி என்கிற திரைப்படத்திற்குப் (1964) பிறகு இவர் திரை உலகினை விட்டு ஒதுங்கி இருந்தார்.

மீண்டும் 1985-ல் ஷ்யாம் பெனகலின் திரைப்படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் நடித்தார். 1992-ல் பிரதீப் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த “எலக்ட்ரிக் மூன்” என்கிற திரைப்படம் தான் இவருடைய கடைசிப் படம்.

சொந்த வாழ்க்கை[தொகு]

இவருடைய முதல் திருமணம் பதினேழாம் வயதிலேயே திலக்ராஜ் ஓபராய் என்பவருடன் நடந்தது. அப்போது ஓபராய்க்கு வயது 33. அந்த வாழ்க்கையில் இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால் அந்தத் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. கோவாவைச் சேர்ந்த கவிஞர் டாம் மோரே-வை இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கை பத்து ஆண்டுகள் வரை இனிமையாகச் சென்றது. பின்னர் டாம்மோரேயின் குடிப்பழக்கம், இன்னொரு பெண்ணுடன் தொடர்பு போன்ற பிரச்னைகளால் இந்த வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. ஏற்கெனவே முதல் விவாக ரத்தில் தன்னுடைய இரட்டைக் குழந்தைகளையும் பறிகொடுத்திருந்தார் லீலா நாயுடு.

கடைசிக் காலம்[தொகு]

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ வகுப்புகளில் சேர்ந்து அவரைத் தன் வழிகாட்டியாக ஏற்று கடைசிக் காலத்தை மும்பை கொலாபாவில் தனிமையிலேயே கழித்து வந்தார் லீலா நாயுடு.

மறைவு[தொகு]

நுரையீரல் சளிப் பிரச்னை காரணமாக நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த லீலா நாயுடு, 2009-ஆம் ஆண்டு ஜூலை 28-ஆம் நாள் காலமானார். அதற்கு அடுத்த நாளில் இவருடன் வோக் பத்திரிகையின் அழகிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஜெய்ப்பூர் மகாராணி காயத்ரி தேவியும் மரணமடைந்தார்.

குறிப்புதவி[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_நாயுடு&oldid=3946639" இலிருந்து மீள்விக்கப்பட்டது