ர. சு. நல்லபெருமாள்
ர. சு. நல்லபெருமாள் (நவம்பர் 1931 – 20 ஏப்ரல் 2011) ஒரு முதுபெரும் தமிழ் எழுத்தாளர். சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கான தமிழக அரசின் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்ற இவர் , அகிலன், நா. பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி. ஜானகிராமன், ல.ச. ராமாமிருதம் போன்ற எழுத்தாளர்களின் எழுத்து காலகட்டத்தை சேர்ந்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ர. சு. நல்லபெருமாள் திருநெல்வேலி மாவட்டம் கடையம் வட்டம், ரவண சமுத்திரம் சுப்பையா பிள்ளை - சிவஞானம் தம்பதிகளுக்கு பிறந்தவர். வாழ்ந்தது பாளையங்கோட்டையில் (திருநெல்வேலி) இவர் பொருளியல், சட்டம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார்.[1] 15 வயதில் "வீண் வேதனை" என்ற சிறுகதை மூலமாக தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். இதே வயது காலகட்டத்தில் "இரு நண்பர்கள்" என்ற சிறுகதைக்கு கல்கியின் பாராட்டுகளுடனும் உந்துதலினாலும் எழுத்துலகில் பிரவேசமனார். ஆரம்ப காலம் தொட்டே சமூக அவலங்களைக் சாடினார். மானிட கலாச்சாரத்திலும், வாழ்வியல், அரசியல், பிரபஞ்சம், ஆன்மீகம் மற்றும் ஆன்மா குறித்த தத்துவ சிந்தனைகளிலும் இந்தியர்களுக்குச் சமமாக சிந்தித்தவர்களும் / சிந்திக்கவும் உலகில் வேறு யாரும் இல்லை என்பதில் ஆணித்தரமான கருத்து கொண்டவர் ர. சு. நல்லபெருமாள். அவருக்கு மனைவி பாப்பா, மகன்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன், மகள்கள் சிவஞானம், அலமேலுமங்கை ஆகியோர் உள்ளனர்.
சிறு கதைகள்
[தொகு]- சங்கராபரணம் - 1962 - சிறுகதைத் தொகுதி
- இதயம் ஆயிரம் விதம் - 1970 சிறுகதைத் தொகுதி
புதினங்கள்
[தொகு]கல்லுக்குள் ஈரம் (1966)
- விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் மிகுந்த-தலைவர்களை இணைத்த, காந்தீயத்திற்குத் தலைமை தரும் அருமையது. அஹிம்சைக்கும் தீவிரவாதத்திற்கும் நடக்கும் போராட்டத்தை வெகு அழகாக சித்தரிக்கும் கதை. 1987 ஆகத்து 22 புரொண்ட்லைன் இதழில், இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொடுத்த பேட்டியில், தன்னை ஒரு போராளியாக்கியது ர. சு. நல்லபெருமாள் எழுதிய கல்லுக்குள் ஈரம் நாவல் என்றும் அதைத் தான் ஐந்துமுறைப் படித்ததாகவும் கூறி உள்ளார். நடிகர் கமலஹாசனின் "ஹே ராம்" என்ற திரைப்படம் நிச்சயமாக இந்தப் புதினத்தைத் தழுவித்தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கூற்றும் நிலவுகிறது. கல்கி வெள்ளி விழா 2ம் பரிசு பெற்ற படைப்பு.
கேட்டதெல்லாம் போதும் (1971)
- புத்தரின் தத்துவ தேடல், தத்துவ தர்க்கம் பற்றிய ஒரு கதையோட்டம். இந்திய சிந்தனைகளும், அரசியல் கோட்பாடுகளும், வாழ்க்கை முறையும் எப்படி கௌதமரை ஞானியாக உருவாக்கிற்று என்பதை விவரிக்கும் மிக அற்புதமான நாவல். இந்நூல் ஆசிரியரின் தத்துவ சிந்தனைகளையும், அரசியல் தாக்கங்களையும் பிரதிபலிக்கிறது என விமர்சகர்கள் விமர்சித்துள்ளார்கள்.
குருஷேத்திரம் (போராட்டங்கள்) - (1972); சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்
- இடதுசாரிக் கொள்கை மோதல் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமிடையே வர்க்கப் போராட்டம், நேர்மைக்கும் சுயநலத்துக்கும் நடக்கும் போட்டி பற்றியது. கம்யூனிஸ்ட்களின் தலைமறைவு (underground activities) நடவடிக்கைகளை ஆராய்ந்து விவரிக்கும் நாவல். ராஜாஜி இந்த நாவலைப் பற்றி ஆசிரியரிடம் கூறியபோது, “ இம்மாதிரியான உண்மைகளை துணிந்து எழுதி மக்களுக்கு உணர்த்த வேண்டும். உன் துணிச்சலுக்கு என் வாழ்த்துக்கள்” என்று கூறினாராம். முதலில், போராட்டங்கள் என்னும் தலைப்பில் தான் இந்த நாவல் வெளியானது. பின்பு “குருஷேத்திரம்” என்று தலைப்பு மாற்றப்பட்டது. இந்த நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு சுருச்சி சாஹித்ய என்னும் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
எண்ணங்கள் மாறலாம்(1976)
- விஞ்ஞானத்தில் ஊன்றிய டாக்டர் ஒருவர், தெய்வீகத்தில் நம்பிக்கையுடைய உதவி டாக்டர்கள் பற்றியது. மேலும் காதல் என்பது வெறும் உடலோடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமில்லை என்பதை சித்தரிக்கும் நாவல்.
நம்பிக்கைகள் (1981)
- கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு பெற்றது. மனிதனின் நம்பிக்கையின் தாக்கமும் வாழ்க்கையின் போக்கும் பற்றிய நாவல். தென் இந்திய கோயிலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். கோவில் நடை முறைகளைப் பற்றியும், ஆகம விதிகள் பற்றியும், அரசியல்வாதிகளால் கோவில்கள் சீரழிந்து இருப்பதையும் அற்புதமாகச் சாடி இருக்கும் கதை.
மாயமான்கள் (திருடர்கள்)- (1976); பாரி நிலையம், சென்னை.
- சட்ட இலக்கிய துறையில் திருட்டு வாழ்க்கை நடத்தும் சமூகப் போலிகளின் சாடல். 1974ஆம் ஆண்டு கல்கி இதழில் வெளிவந்த தொடர்கதை
தூங்கும் எரிமலைகள் (1985)
- இந்த நாவல் மிகுந்த எதிர்ப்பை சந்தித்தது. சாதி அடிப்படையில் படிப்பு, வேலை வாய்ப்பு என்று அரசியல் லாபத்திற்காக ஏற்படுத்தப்பட்ட விதிமுறையால் எப்படி ஒரு தகுதியானவன் தீவிரவாதியாகிறான் என்பதை விவரிக்கும் நாவல். இந்த நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கூட முயற்சி நடந்தது. ஒவ்வொருவர் வாழ்விலும் சமுதாய, அரசியல் சூழலால் ஏற்படும் முட்டுக்கட்டைகள் எப்படி அவர்களை எரிமலைகளாக உருவாக்குகின்றன என்பதையும் சித்தரிக்கும் கதை அமைப்பு.
மருக்கொழுந்து மங்கை (1985)
- ஒரு வரலாற்று நாவல். ஒரு பெண் ஆட்சியாளரின் / அரசியின் ஆட்சியும் அதன் விளைவுகளையும் பற்றிய புதினம்.
உணர்வுகள் உறங்குவதில்லை (1986)
- மன உணர்வுகளைப் பல கோணங்களில் சித்தரிக்கும் நாவல். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது பெற்ற நாவல்.
மயக்கங்கள் (1990)
- நம்பிக்கை ஒருவனை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்னும் மனோ தத்துவத்தைத் திறம்பட விளக்கும் நாவல். மூட நம்பிக்கைகள் கூட மனிதனின் மன அமைதிக்குத் தேவைப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் கதை அமைப்பு.
மெய்யியல்
[தொகு]- பிரும்ம இரகசியம்[2] - தத்துவம்
இந்திய தத்துவ ஞானங்களை எளிய முறையில் புரிந்து ரசிக்கும் படியாக அமைந்த புத்தகம். நாஸ்திக தத்துவத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரை இந்திய தத்துவங்களை கேள்வி-பதில் முறையில் எழுதப்பட்ட நூல். அந்ததந்த தத்துவங்களை அருளிச் செய்த மகான்களிடமே நேரடியாக பேட்டி கண்டு தத்துவ விளக்கங்களைப் பெறுவது போல் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசினால் சிறந்த நூலுக்கான முதல் பரிசினை 1982 பெற்றது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற நூல்
வரலாறு
[தொகு]- சிந்தனை வகுத்த வழி[3]
பாமரனுக்கு உலக வரலாற்றை விளம்புவது.
- பாரதம் வளர்ந்த கதை
இந்திய வரலாற்று நூல். இந்திய சரித்திரத்தை அந்தந்த காலகட்டத்தில் உள்ளவர்களே நமக்கு நேரடியாக கதை சொல்லுவது போல ரசனையுடன் எழுதப்பட்ட நூல். இது போன்ற பாணியில் இந்திய சரித்திர நூல் இதுவரை தமிழில் எழுதப்படவில்லை
- இந்திய சிந்தனை மரபு
நமது இந்திய தத்துவ சிந்தனைகள் எவ்வாறு பரிணமித்தது என்பது பற்றியது. இந்தியாவில் அரசியல் சிந்தனை ஆதிகாலத்தில் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது என்பதை வர்ணிக்கும் நூல். இந்தியாவில் அரசர்கள் ஆட்சி செய்தாலும் உண்மையில் நாட்டையும், சமூகத்தையும் வழிநடத்தி சென்றவர்கள் அறிஞர்கள் தாம் என விவரிக்கும் அமைப்பு. இந்திய நாகரிகமும் கலாசாரமும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிக உன்னத நிலையில் இருந்ததைச் சித்தரிக்கும் நூல்.
பரிசுகள்
[தொகு]- கல்கி வெள்ளிவிழா - 2ம் பரிசு - கல்லுக்குள் ஈரம் - 7500 பரிசும்
- தமிழக அரசின் பரிசு - 1972- சிந்தனை வகுத்த வழி.
- தமிழக அரசின் பரிசு - 1982 - பிரும்ம ரகசியம்.
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது - 1990 - உணர்வுகள் உறங்குவதில்லை
- கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு - நம்பிக்கைகள்
மறைவு
[தொகு]பாளையங்கோட்டையில் உள்ள காவல் நிலையத் தெருவில் வசித்துவந்த அவர் சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்தார். 2011, ஏப்ரல் 20 புதன்கிழமை தனது 81வது அகவையில் காலமானார்.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=140&cid=2&aid=7964
- ↑ தத்துவங்களின் சாரம்[தொடர்பிழந்த இணைப்பு], - A review by Aravindan in The Hindu-Tamil
- ↑ World history in simple style, The Hindu
- ↑ முதுபெரும் எழுத்தாளர் ர.சு.நல்லபெருமாள் காலமானார், தினமலர்
உசாத்துணைகள்
[தொகு]- தமிழ் இலக்கிய வரலாறு, மது. ச. விமலானந்தம் (பக்கம் 988)
- ர. சு. நல்லபெருமாளின் படைப்புகள் - ஒரு ஆய்வு
- ர.சு. நல்லபெருமாள், அகிலன் புதினங்களில் காந்தீயம்[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
[தொகு]- விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பேட்டியில் - ர. சு.நல்லபெருமாள்
- ர.சு. நல்லபெருமாளைப் பற்றி திரு. நெல்லை கண்ணன்
- எழுத்தாளர் ஜெயமோகனின் பார்வையில் ர. சு. நல்லபெருமாள்
- Full Text of August 1987 Interview with LTTE Leader Prabakharan That was Re-produced by “Frontline” in Feb 6, 2015 Issue பரணிடப்பட்டது 2018-12-27 at the வந்தவழி இயந்திரம் (Last question is about Ra.Su. Nallaperumal)
- வாசிப்பும் யோசிப்பும் - கல்லுக்குள் ஈரம்
- பரணிவாசம்: நாவலாசிரியர் ர.சு.நல்லபெருமாள் (தி இந்து தமிழ் திசை, 15 செப்டம்பர் 2018)
- நடிகர் சீமானின் (இப்போது அரசியல் கட்சி தலைவர்) வார்த்தைகளில் ...
- http://pitchaipathiram.blogspot.com/2011/04/blog-post_22.html