ரோவுலன் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோவுலன் அருங்காட்சியகம் (Trowulan Museum) இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் மோஜோகெர்டோவில் ட்ரோவுலன் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் அருங்காட்சியகம் ஆகும். ட்ரோவுலன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருளைக் காட்சிப்படுத்துவதற்காக இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டது. மஜபாஹித்தின் வரலாற்றைக் கண்டுபிடிப்பது தொடர்பாக இந்தோனேசியாவில் உள்ள இந்த இடம் மிக முக்கியமான ஒன்றாகும் [1]

அருங்காட்சியக சேகரிப்புகளில் பெரும்பாலானவை மஜாபஹித் காலம் தொடக்கம் முதலாக அமைந்தவையாகும். இருப்பினும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சேகரிப்புகள் கிழக்கு ஜாவாவில் உள்ள கஹுரிபன், கெதிரி மற்றும் சிங்காசரி ராஜ்யங்களின் சகாப்தத்தையும் உள்ளடக்கியன ஆகும். கோலம் செகரனின் மேற்குப் பகுதியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ட்ரோவுலன் அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவில் மஜாபஹித் நினைவுச்சின்னங்களின் மிகப்பெரிய தொகுப்பு உள்ளது.

வரலாறு[தொகு]

சமோத்ரமந்தனா அல்லது பாற்கடல் கடைதல் சிற்பம்

ட்ரோவுலன் அருங்காட்சியகத்தின் வரலாறு ட்ரோவுலன் தொல்பொருள் தளத்துடன் பின்னிப்பிணைந்துள்ள ஒன்றாகும். ரோவுலானில் உள்ள பண்டைய நகர இடிபாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. 1811 ஆம் ஆண்டு முதல் 1816 ஆம் ஆண்டு வரை ஜாவாவின் ஆளுநராக இருந்த சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் நாட்டில் பல மைல்கள் பரப்பளவில் கோயில்களின் இடிபாடுகள் சிதறிக் கிடப்பதாகக் கூறினார். இப்பகுதியில் பெரும்பகுதி அடர்த்தியான தேக்கு காடுகளால் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக விரிவான கணக்கெடுப்பு எடுக்க சற்று சிரமமாக இருந்தது.

ட்ரோவுலன் தொல்பொருள் தளத்திலிருந்து கலைப்பொருள்கள் கொள்ளையடிப்பதையும் திருடுவதையும் தடுக்க வேண்டிய அவசரத் தேவை எழவே, அங்கு ஒரு எளிய நிலையிலான தொல்பொருள் பொருள்களைச் சேகரித்து வைக்க சேமிப்புக்கட்டடம் அமைக்கக் காரணமானது. அது பழைய ட்ரோவுலன் அருங்காட்சியகம் என்ற நிலையைப் பெற்றது.[2] இது டச்சு கட்டிடக் கலைஞரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஹென்றி மக்லைன் பாண்ட் மற்றும் மோஜோகெர்டோ ரீஜண்ட் காஞ்செங் ஆதிபதி அரியோ குரோமோட்ஜோ அடினெகோரோ ஆகியோரால் நிறுவப்பட்டது.[3]

புதிய அருங்காட்சியகம் 1987 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.[4] சுமார் 57,625 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த புதிய இடத்தில் பழைய ட்ரோவுலன் அருங்காட்சியகத்தின் சேகரிப்புகளும், மொஜோகெர்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள கற்சிற்பங்களின் பெரும்பாலான பகுதிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இப்பகுதிக்கு மேலும் ஒரு புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டது [5] அதற்கான இருப்பிடம் உலக பாரம்பரிய பகுதியாக முன்மொழியப்பட்டது [3][6]

சேகரிப்புகள்[தொகு]

ஜாவி கோயிலின் சிறிய மாதிரி வடிவம்

தற்போது இந்த அருங்காட்சியகத்தில் மஜாபஹித் காலத்திலிருந்து வந்த தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் மட்டும் அல்லாது கிழக்கு ஜாவா பகுதி முழுவதும் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் சேகரித்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எய்ர்லங்க்கா மன்னனான கெடிரி சகாப்தம் தொடங்கி சிங்கசாரி மற்றும் மஜாபாகித் சகாப்தம் வரையிலான பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இந்து பௌத்த கற்சிற்பங்களின் பெரிய தொகுப்புகள் மற்றும் மஜாபஹித் டெர்ரகோட்டா கலைப்பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களில் புகழ்பெற்ற உருவப்படச் சிலையான எய்ர்லங்க்கா உள்ளது. அதில் அவர் கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணுவாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இது சண்டி பெலகான் பகுதியைச் சேர்ந்ததாகும். பிளேம்பங்கனின் புகழ்பெற்ற மன்னர் மேனக் ஜிங்கோவை சித்தரிக்கும் ஒரு சிறகினைக் கொண்ட உருவம் இங்கு உள்ளது. அம்பெல்காடிங் என்னுமிடத்திலிருந்து எடுக்கப்பட்ட சண்டியின் ஒரு பகுதி இங்கு உள்ளது. இங்குள்ள ஒரு செதுக்கப்பட்ட சிலை சமோத்ரமந்தனா அல்லது "பாற்கடல் கடைதல்" கதையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்புகள்[தொகு]