ராபர்ட் ஜோர்டான்
ராபர்ட் ஜோர்டான் | |
---|---|
பிறப்பு | ராபர்ட் ஜோர்டான் அக்டோபர் 17, 1948 சார்ல்ஸ்டன், தெற்கு கரோலினா, அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 16, 2007 சார்ல்ஸ்டன், தெற்கு கரோலினா, அமெரிக்கா | (அகவை 58)
தொழில் | எழுத்தாளர் |
வகை | கனவுருப்புனைவு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி வீல் ஆஃப் டைம் |
இணையதளம் | |
http://www.dragonmount.com |
ராபர்ட் ஜோர்டான் (Robert Jordan, அக்டோபர் 17, 1948 – செப்டம்பர் 16, 2007) ஒரு அமெரிக்க கனவுருப்புனைவு எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஜேம்ஸ் ஆலிவர் ரிக்னி, இளையவர் (James Oliver Rigney, Jr). ரீகன் ஓ’ நீல், ஜாக்சன் ஓ’ ரெய்லி போன்ற புனைப்பெயர்களிலும் எழுதியுள்ளார். தி வீல் ஆஃப் டைம் (The Wheel of Time) கனவுருப்புனைவு புதின வரிசை இவரது குறிப்பிடத்தக்க படைப்பாகும். ஜோர்டான் கனவுருப்புனைவு உலகின் பெரும்புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் பிறந்த ஜோர்டான் வியட்நாம் போரில் பங்கு கொண்டார். வியட்நாமிலிருந்து திரும்பிய பின்னர் தெற்கு கரோலினா ராணுவக் கல்லூரியில் இயற்பியலில் படித்து பட்டம் பெற்றார். அமெரிக்கக் கடற்படையில் அணுக்கரு இயற்பியலாளராகப் பணியாற்றினார். 1977ல் எழுதத் தொடங்கினார். அவரது முதல் படைப்பு (ஃபாலோன் புதின வரிசை) ரீகன் ஓ’ நீல் என்ற பெயரில் 1980ல் வெளியானது. அதன் பின்னர் கோணன் தி பார்பாரியன் புதின வரிசையில் பல புதிய புத்தகங்களை எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த வரிசையில் மொத்தம் ஏழு புத்தகங்களை எழுதினார். 1990ல் வீல் ஆஃப் டைம் புதின வரிசையில் முதல் புத்தகமான தி ஐய் ஆஃப் தி வோர்ல்ட் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த பதினைந்து ஆண்டுகளில் மேலும் பத்து புத்தகங்கள் இந்த வரிசையில் வெளியாகி லட்சக்கணக்கில் விற்றன. இந்த புத்தகங்களின் வெற்றியால் ஜோர்டான், நவீனக் கனவுருப்புனைவு எழுத்தாளர்களின் வரிசையில் டோல்கீனுக்கு அடுத்தபடியாகக் கருதப்படுகிறார். 2006ல் ஜோர்டான் கார்டியாக் ஏமைலாய்டோசிஸ் (cardiac amyloidosis) என்ற இருதய நோயால் பாதிக்கப்பட்டார். செப்டம்பர் 2007ல் மரணமடைந்தார். தனது இறுதி நாட்களில் வீல் ஆஃப் டைம் வரிசையில் மீதமுள்ள புத்தகங்களை எப்படி முடிக்க வேண்டுமென்று நிறைய குறிப்புகளையும் ஒலித்துண்டுகளையும் தயார் செய்தார். அவர் இறந்த பின் அவரது மனைவியும் தொகுப்பாசிரியருமான ஹாரியட் மக்டொகல், அந்த குறிப்புகளைக் கொண்டு மீதமுள்ள புத்தகங்களை எழுத பிராண்டன் சாண்டர்சன் என்ற இளம் எழுத்தாளரைத் தேர்வு செய்தார். தற்போது சாண்டர்சன் அந்த புத்தகங்களை எழுதி வருகிறார்.