யூ.என்.ஈ.பி சசக்காவா பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யூ.என்.ஈ.பி சசக்காவா பரிசு (UNEP Sasakawa Prize) என்பது, சூழல் தொடர்பில் சிறப்பான சாதனைகளைச் செய்த ஒருவருக்கு வழங்கப்படும் ஒரு பரிசு ஆகும். ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஒத்த வகையில், சூழல் பாதுகாப்பு அதன் மேலாண்மை போன்றவற்றுக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய சாதனைகளைச் செய்பவர்களே இப் பரிசைப் பெறுவதற்குத் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். இது 200,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகையையும் உள்ளடக்கியது. இதனால் இப்பரிசைப் பெறுவது இத்துறையில் ஒரு மிகப் பெரிய மதிப்பாகவும், தமது சாதனைகளை மேலும் வளர்த்தெடுப்பதற்கான நிதியை வழங்குவதாகவும் அமைகின்றது.

1984 ஆம் ஆண்டில் முதன்முதலாக வழங்கப்பட்ட இப் பரிசு 2003 ஆம் ஆண்டுவரை 30 பேர்களுக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இப் பரிசைப் பெற்ற அனைவரையும் பீஜிங்குக்கு வரவழைத்து அப்பரிசின் 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர். 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சூழல் திட்டமும், நிப்பான் பவுண்டேசனும் இணைந்து இப் பரிசைப் புதிய முறையில் வழங்கத் தொடங்கினர். இப் புதிய முறையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் பரிசுக்குரிய கருப்பொருள் மாற்றப்படுகின்றது. 2010 ஆம் ஆண்டுப் பரிசுக்குரிய கருப்பொருளாக "தட்பவெப்ப மாற்றத்தைத் தடுப்பதற்கான பசுமைத் தீர்வுகள்" என்பதாகும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]