யுரேனியம்(IV) சேர்மங்கள்
யுரேனியம்(IV) சேர்மங்கள் (Uranium(IV) compounds) பொதுவாக யுரேனசு சேர்மங்கள் என அறியப்படுகின்றன. யுரேனசு என்ற சொல் யுரேனியத்தின் குறைக்கப்பட்ட நான்கு நேர்மின் அயனி என்பதற்கான வேதியியல் சொல் ஆகும். U4+ என்று குறியிடுவது யுரேனியம் இங்கு நான்கு என்ற இணைதிறனை வெளிப்படுத்துகிறது என்பது பொருளாகும். இயற்கையில் காணப்படும் யுரேனியத்தின் இரண்டு பொதுவான அயனி நிலைகளில் இதுவும் ஒன்றாகும். மற்றொன்று யுரேனைல் எனப்படும் ஆக்சிசனேற்றப்பட்ட ஆறு நேர்மின் அயனி நிலையாகும். யுரேனசு சேர்மங்கள் பொதுவாக நிலைப்புத் தன்மையற்றவையாகும். காற்றின் வெளிப்பாட்டின் போது இவை ஆக்சிசனேற்றப்பட்ட வடிவத்திற்குத் திரும்புகின்றன.
யுரேனசு சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக யுரேனியம் நாற்குளோரைடு (UCl4) மற்றும் யுரேனியம் நாற்புளோரைடு (UF4), அணு எரிபொருளின் பொதுவான வடிவமான யுரேனியம் டை ஆக்சைடு (UO2) ஆகியவற்றை கூறலாம். இவை உருகிய உப்பு உலை பயன்பாடுகளில் முக்கியமானவைகளாகும்.
கரைக்கப்பட்ட U4+ அயனி பொதுவாக தண்ணீரில் இருக்காது. UCl4 போன்ற பெரும்பாலான சேர்மங்கள் அயனிப் பிணைப்பைக் காட்டிலும் சகப்பிணைப்புடன் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன.
யுரேனசு அயனியைக் கொண்ட தாதுக்கள் பொதுவாக பழுப்பு அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவை குறைக்கும் வினைச் சூழல்களில் தோன்றுகின்றன. பொதுவான யுரேனசு கனிமங்களில் யுரேனைட்டு மற்றும் காஃபினைட்டு ஆகியவை அடங்கும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hutchinson, R. W.; Blackwell, J. D. (1984). "Time, crustal evolution and generation of uranium deposits". In De Vivo, B.; Ippolito, F.; Capaldi, G.; Simpson, P. R. (eds.). Uranium geochemistry, mineralogy, geology, exploration and resources. Springer. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-94-009-6060-2_7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-6060-2.