யமகண்டம்
யமகண்டம் என்பது உறியை மேலே கட்டி, கீழே தீ மூட்டி, எட்டுக் கத்திகளை ஒருவரின் மீது பாய்ச்சுவதற்கு யானைகள் துணையுடன் அமைக்கப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பை தலைக்கு மேல் கத்தி, உடலுக்கு கீழ் நெருப்பு என சுட்டுகின்றனர்.[1] இந்த யமகண்ட முறையில் பல்வேறு சமயங்களில் பாடகர்கள் தங்களுக்குள் போட்டியை வைத்துக் கொண்டு பாடியுள்ளார்கள். இந்த யமகண்டத்தில் பாடிய புலவர்களில் காளமேகப் புலவர் குறிப்பிடத்தக்கவர். அபிராமி அந்தாதியை பாடிய அபிராமி பட்டரும் இந்த யமகண்டத்தில் நின்று பாடியுள்ளார்.
யமகண்ட அமைப்பு முறை
[தொகு]16 அடி நீள அகல உயரத்திற்கு சதுரமான பெரிய குழியை வெட்டி, அதன் நான்கு மூலைகளிலும் 16 அடி உயர இரும்பு கம்பங்களை நட்டு… கம்பத்தின் மீது நான்கு சட்டமும், அதன் நடுவே ஒரு சட்டமும் அமைக்கவேண்டும். நடுசட்டத்தின் மீகு உறிகட்டி, குழியினுள் பழுத்த புளியக்கொம்புகளை அடுக்கி, அதற்கு நெருப்பினை இடவேண்டும். புளியம்கொம்புகள் எரிந்து கனன்று கொண்டிருக்கும் போது… அந்த நெருப்பில் இரும்புக் கொப்பறையும், அந்த இரும்புக் கொப்பறைக்குள் எண்ணெயை நிரம்ப விட்டு, அந்த எண்ணைக்குள் அரக்கு, மெழுகு, குங்குலியம், கந்தகம், சாம்பிராணிகளை நிரப்பி உருகும் அளவிற்குக் கொதிக்க வைக்க வேண்டும். காளமேகப் புலவர் தன்னுடைய பாடல் தொகுப்பொன்றை யமகண்ட முறையில் பாடியுள்ளார். அந்தத் தொகுப்பிற்கு யமகண்டம் என்றே பெயரிட்டுள்ளார்.[2]
போட்டி
[தொகு]கம்பத்திற்கு ஒரு யானை என நான்கு யானைகளை நிறுத்த வேண்டும். கூரிய எட்டுக் கத்திகளை நடுசட்டத்தின் மேல் இருக்கும் மனிதரின் கழுத்திலும், இடுப்பிலும் கோத்துக்கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்ட கத்திகளின் இணைப்பை யானைகளின் துதிக்கையில் கொடுத்து வைக்க வேண்டும். அதன்பின்பு நடுசட்டத்தில் உள்ள மனிதர் சுற்றியுள்ளவர் பாடும்படி கூறும் பொருளிளெல்லாம் பாட வேண்டும். இவ்வாறு பாடுவதில் தவறு நிகழ்ந்தால்,. யானைகள் பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு அந்த இரும்பு இணைப்புகளை இழுத்து பாடிக் கொண்டிருக்கும் மனிதரைக் கொல்லும்.
இலக்கியங்களில்
[தொகு]யமகண்டத்தினைப் பற்றி அபிதான சிந்தாமணியில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது.[3] வண்ணச்சரபம் தவத்திரு தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் எனும் நூலில் அட்டாவதானம், எமகண்டம், கண்டசுத்தி போன்ற ஆபத்தான விசயங்களில் இறையருள் பெறாத கவிகள் ஈடுபடக் கூடாது என வழியுறுத்தப்பட்டுள்ளது.[4]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ ரகுநாதனின் புதுமைப்பித்தன் - தி இந்து
- ↑ சரஸ்வதி அருள் பெற்று சாதனை படைத்தவர்கள் - தினகரன்
- ↑ http://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=19&pno=511
- ↑ அட்டாவ தானம் எமகண்டம் மற்றோன் கண்டதைப் பாடல் ஆதியில் கருதும் தவம்முடி வதன்முன் சருவவொண் ணாதே - அறுவகையிலக்கணம் 107