மெத்தில் வினைல் கீட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெத்தில் வினைல் கீட்டோன் (Methyl vinyl ketone) என்பது CH3C(O)CH=CH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவேதியியல் சேர்மமாகும். ஈனோன் என்ற வினைத்திறன் மிகு சேர்ம்மாகவும் வினைல் கீட்டோன் வகையில் மிக எளிய சேர்மமாகவும் இது வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றதாகவும் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ஒரு நீர்மமாகவும் மெத்தில் வினைல் கீட்டோனின் இயற்பியல் பண்புகள் உள்ளன. நீர் மற்றும் முனைவு கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. மற்ற கரிமச் சேர்மங்களின் தயாரிப்பில் ஒரு பயனுள்ள இடைநிலையாக செயல்படுகிறது. [1] அசிட்டோன் மற்றும் பார்மால்டிகைடை ஒடுக்க வினைக்குட்படுத்தி தொடர்ந்து நீர் நீக்கம் செய்து மெத்தில் வினைல் கீட்டோன் தயாரிக்கப்படுகிறது. இதேபோல ஈரெத்திலமோனியம் குளோரைடும் அசிட்டோனும் பங்குபெறும் மன்னிச்சு வினையிலும் மெத்தில் வினைல் கீட்டோன் உருவாகிறது. இவ்வினையில் மன்னிச்சு கூட்டுவிளைபொருள் உருவாகிறது. :[1][2]

CH3C(O)CH3 + CH2O + [H2NEt2]Cl → [CH3C(O)CH2CH2N(H)Et2]Cl + H2O

இந்த அமோனியம் உப்பை சூடுபடுத்துவதால் அமோனியம் குளோரைடும் மெத்தில் வினைல் கீட்டோனும் உருவாகின்றன.[2]

[CH3C(O)CH2CH2N(H)Et2]Cl → CH3C(O)CH=CH2 + [H2NEt2]Cl

வேதிவினையும் பயனும்[தொகு]

ஓர் ஆல்கைலேற்றும் முகவராக மெத்தில் வினைல் கீட்டோனால் செயல்பட முடியும். ஏனெனில் இது ஒரு பயனுள்ள மைக்கேல் ஏற்பியாக செயல்படுகிறது. இசுடீராய்டுகளைத் தயாரிப்பதற்கு உதவும் பயனுள்ள முறையான ராபின்சன் வினையில் பயன்படுத்துவதற்காக இச்சேர்மம் ஆரம்பகால கவனத்தை ஈர்த்தது.

ராபின்சன் வளைய உருவாக்க வினை
ராபின்சன் வளைய உருவாக்க வினை

ஆல்கைலேற்றும் பண்பு இதன் உயர் நச்சுக்கான மூலமாகவும், கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு பயனுள்ள இடைநிலையாகவும் பயன்பட வழிவகுக்கிறது. மேலும் மெத்தில் வினைல் கீட்டோன் தன்னிச்சையாக பலபடியாதல் வினைக்கு உட்படுகிறது. உடனடியாக ஐதரோகுயினோனில் சேமிக்கப்பட்டால் இப்பலபடியாக்க வினை தடுக்கப்படுகிறது.

விங்குளோசோலின் என்ற பூஞ்சைக் கொல்லி தயாரிப்பில் மெத்தில் வினைல் கீட்டோன்.

பாதுகாப்பு[தொகு]

உள்ளிழுக்கும் போது மெத்தில் வினைல் கீட்டோன் மிகவும் ஆபத்தானதாக செயல்படுகிறது. குறைந்த செறிவுகளில் கூட இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. தோல், கண்கள் மற்றும் சளி சவ்வுகளின் எரிச்சலையும் உடனடியாக ஏற்படுத்தும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Siegel, H.; Eggersdorfer, M. (2005), "Ketones", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a15_077
  2. 2.0 2.1 L. Wilds, Alfred; Nowak, Robert M.; McCaleb, Kirtland E. (1957). "1-Diethylamino-3-butanone". Organic Syntheses 37: 18. doi:10.15227/orgsyn.037.0018. 

புற இணைப்புகள்[தொகு]