உள்ளடக்கத்துக்குச் செல்

மூவலகு வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாழ்ப்பாணத்தில், மூவலகு வீடு என்பது, தலைவாசல், வீடு, அடுக்களை என்னும் மூன்று தனித்தனி அலகுகள் ஒரு முற்றத்தின் மூன்று பக்கங்களில் அதை நோக்கியவாறு அமைந்த ஒரு வீட்டுவகை ஆகும். பெரும்பாலும் இம்மூவலகுத் தொகுதியைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருப்பது வழக்கம். மூவலகு வீடுகள் மரம், மண், பனை அல்லது தென்னை ஓலைகளைப் பயன்படுத்திக் கட்டப்படுகின்றன.

அலகுகள்

[தொகு]

தலைவாசல்

[தொகு]

தலைவாசல் என்னும் அலகு வெளியாரை வரவேற்று அளவளாவுவதற்கும், பெரும்பாலும், குடும்பத்து ஆண்களின் பயன்பாடுகளுக்கும் உரிய பகுதியாக உள்ளது. செவ்வக வடிவான தள வடிவம் கொண்ட இவ்வலகு செப்பமில்லாத மரக்கிளைகளைக்கொண்டு உருவாக்கப்பட்ட தூண்களின் மீது தாங்கப்பட்ட கூரையைக் கொண்டது. கூரை பனையோலை அல்லது தென்னங் கிடுகினால் வேயப்பட்டிருக்கும். இது நாற்புறமும் திறந்த அமைப்பைக் கொண்டது. ஆனாலும், நான்கு பக்கங்களிலும் குந்து போன்ற அமைப்பிலான அகலமான குட்டைச் சுவர்கள் இருக்கும். தளம் மண்ணால் ஆனது.

வீடு

[தொகு]

மூவலகு வீட்டின் முக்கியமான அலகு இது. யாழ்ப்பாணத்து வீடுகளின் வளர்ச்சி நிலைகளில் மூல நிலையான ஒற்றைக் குடிசை வீட்டை இவ்வலகு குறிக்கின்றது. இதன் காரணமாகவே இவ்வலகே மூவலகு வீட்டிலும் வீடு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அடிப்படையான மூவலகு வீடுகளில் இவ்வலகு ஓர் அறையைக் கொண்டதாக அமைந்திருக்கும். சில மூவலகு வீடுகளில் இது இரண்டு அறைகளைக் கொண்டனவாக அமைவதும் உண்டு. அறைக்கு முன்பக்கத்தில் வாயிலுக்கு இரு பக்கமும் திண்ணை அமைந்திருக்கும். இவ்வலகு பெறுமதியான பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும், பெண்களுடைய பயன்பாட்டுக்கும் உரியதாக உள்ளது.

இவ்வலகும், செப்பமில்லாத மரக்கிளைகளினால் தாங்கப்பட்ட ஓலைக் கூரை அமைப்புக்கொண்டது. ஆனால், நாற்புறமும் மண்ணாலான முழுச் சுவர் இருக்கும். மனிதர் நிமிர்ந்து உட்செல்ல முடியாத வகையில் வாயில் கதவு உயரம் குறைந்ததாக இருக்கும். தலைவாசலைப் போலவே இதன் தளமும் மண்ணால் ஆனதே.

அடுக்களை

[தொகு]

அடுக்களை, அடுப்படி அல்லது சமையல் அறை எனவும், அடுக்களையைக் குறிக்கும் போர்த்துக்கேயச் சொல்லிலிருந்து பெறப்பட்ட குசினி என்னும் பெயராலும் இவ்வலகு அறியப்படுவது உண்டு. இது சமையல் செய்வதற்கான இடம். இதன் கட்டமைப்பும் ஏனைய இரண்டு அலகுகளையும் போல் ம்மரக்கிளைத் தூண்களையும், ஓலைக் கூரையையும் கொண்டதே. இவ்வலகில், நாற்புறமும் மண்ணாலான அரைச்சுவரும், அதற்கு மேல், பெரும்பாலும் பனம் மட்டைகளாலான வரிச்சும் இருக்கும். இவ்வாறான பனம் மட்டை வரிச்சுகளில் காணப்படும் இடைவெளிகள் அடுக்களைக்குள் உருவாகும் புகை வெளியேறுவதற்கு உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவலகு_வீடு&oldid=1912784" இலிருந்து மீள்விக்கப்பட்டது