மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில்
மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில் | |
---|---|
மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவிலின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: | 9°39′57.6″N 80°11′44.5″E / 9.666000°N 80.195694°E |
பெயர் | |
பெயர்: | மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வட மாகாணம் |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிள்ளையார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 500 வருடங்கள் |
அமைத்தவர்: | கேகயர்த்தன முதலியார் |
மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் ஆலயம் இயற்கை வளம் நிறைந்த இலங்கையின் வடமாகாணத்தின்யாழ் குடா நாட்டின் தென்மராட்சிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மா, பலா, தென்னை போன்ற மரங்களால் சூழப்பட்ட மீசாலைக் கிராமத்தில்ஏ-9 வீதிக்கண்மையில் மீசாலை அல்லாரை வீதியில் அமைந்துள்ளது.
ஆலயவரலாறு
[தொகு]ஐரோப்பிய நாட்டவரான போர்த்துக்கேயரின் இலங்கை வருகைக்கு முன்னரே கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இக் கிராம வாசிகளின் வழிபாட்டுக்குட்பட்ட ஆலயமாக விளங்கியுள்ளது. இதன் வரலாற்றை கர்ணபரம்பரை தகவல்கள் வாயிலாகவும் தற்போது இப்பிரதேசத்தில் வாழ்கின்ற பெரியோர்களின் வாய்மொழி நேர்காணல் மூலமும், கோவில் தொடர்பான உறுதிகள் , நீதிமன்ற ஆவணங்கள் , ஆலயத்தினால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களாலும் அறிய முடிகிறது. கடந்த அரை நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாறு ஆதார பூர்வமானதாக உள்ளது.
இவ் ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற கோவிலுக்கு சிறப்பம்சம் மிக்கது. ஆலய மூலமூர்த்தியான விநாயகர் மிகவும் சிறியது.ஆனால் கீர்த்தி மிக்கது. கத்தோலியர்களான போர்த்துக்கேயர் தமது மதத்தை பரப்புவதற்காக இந்துசமய செயற்பாடுகளை முடக்கி ஆலயங்களை இடித்து வருவதை அறிந்த இவ்வூர் மக்கள் வெள்ளைமாமர அடியில் மூல லிங்கமாகிய விநாயகரை புதைத்துவிட்டனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என அந்நியர் ஆட்சி தொடர்ந்த்தால் இரண்டு நூற்றாண்டுக்குமேல் கவனிக்கப்படாது ஆலயம் இருந்த இடம் தெரியாது போய்விட்டது.
முகமாலையை சேர்ந்த கேகயர்த்தன முதலியார் என்பவர் தனது காணியில் கொள்ளு பயிரிடும்படி முத்தன் எனும் விவசாயிக்கு பணித்தார். முத்தன் நிலத்தை கொள்ளு விதைப்பதற்காக தரையை பண்படுத்திக்கொத்தினார். கொத்தும்போது வெள்ளை மா மரத்தின் அடியில்திருநீலகண்டம் எனும் ஜந்து புகுந்தது. அதைதேடி முத்தன் ஆழமாக்க்கொத்தும் போது மண் வெட்டி ஒரு பொருளில் பட்டு சத்தம் கேட்டது. திருநீலகண்டம் மறைந்து விட்டது. அவ்விடத்தில் இரத்தம் பெருகியது. அதை கண்ட முத்தனின் மனநிலை மாற்றம் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது. முத்தன் இரவு படுக்கையில் இருக்கும்போது கனவில் விநாயகர் உருவத்தில் தோன்றி " துன்ப படாதே , அவ்விடத்தே ஒரு விநாயகர் சிலை இருக்கின்றது. அதை எடுத்து நீராட்டி அந்த மாவின் அடியில் வைத்து பூசிப்பாயாக. நீ உண்ணும் உணவில் ஒரு பகுதியை எனக்கு படைத்துவிடு"என்று கூறினார். விடிந்ததும் அந்த அடியார் விநாயகர் சிலையை தோண்டி எடுத்து அந்த மரத்தடியில் வைத்து அமுது செய்து வணங்கினார்.
பின்பு முகமாலையை சேர்ந்த கேகயர்த்தன முதலியாருக்கு நடந்தவற்றை கூறினார். குடும்பத்தினருடன் வந்து சிறு கோவில் மண்டபம் அமைத்து அவ் விநாயகர் சிலையை பிரதிட்டை செய்து பூஜை ,நடைபெற ஒழுங்குகளை செய்வித்தார். இவ் ஆலையமே மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையார் ஆலையமாக விளங்குகின்றது. அன்று கிடைத்த மூர்த்தியே இன்றும் ஆலய மூர்த்தியாக விளங்குகின்றது. மண்வெட்டி பட்ட வடு இன்னமும் மூர்த்தியில் இருப்பதை அவதானிக்கலாம். இது கர்ண பரம்பரை கதை மூலம் அறியக்கூடிய ஆலய வரலாறாக உள்ளது. ஆலயத்தின் மூர்த்தியாக விநாயகரும், தலவிருட்சமாக வெள்ளை மாவும் விளங்குகிறது.
ஆண்டவர் பரம்பரையினரால் உருவாக்கப்பட வைரக்கல்லால் அமைக்கப்பட்ட பாரிய தீர்த்தக்கேணி இவ் ஆலயத்துக்கு அழகை சேர்க்கின்றது. இக் கேணி ஆனது ஊற்றுத்திறன் உள்ளதாகவும் நிலப்பரப்பு முழுதும் கற்களினால் ஆனதாகவும் காணப்படுகின்றது. ஊரில் உள்ள தோட்ட உரிமையாளர்கள் வருடம் தோறும் தீர்த்த திருவிழாவிற்கு முன்னர் கேணியை அனைத்து தீர்த்தத்திற்கு தயார் செய்வர். ஆலயத்தின் திருமஞ்சனக் கிணறும் அயலில் உள்ள கிணற்று நீரிலும் பார்க்க சிறப்பாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஆலய இராஜ கோபுரம்
[தொகு]மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் ஆலய இராஜ கோபுரத்திற்கான அடித்தளம் ஏற்கனவே இடப்பட்டிருந்தது. இவ் அடித்தளம் சிவசங்கர நமசிவாயம் அவர்கள் பரம்பரையில் வந்த கொடுக்கன் விதானை என அழைக்கப்படுபவரின் இளைய மகனான தங்கமுத்து என்பவரால் இடப்பட்டிருந்த்தாக அறிய முடிகிறது. இராஜ கோபுர திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் அடி எடுப்பாக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அடத்தளத்தின் உறுதித்தன்மை பொறியியலாளரின் உதவியுடன் பரிசீலிக்கப்பட்டது. அவரது ஆலோசனைக்கமைய 7 அடி ஆழமும் 3 அடி அகலமும் கொண்ட அகழி சுற்றிவர வெட்டப்பட்டு அத்திபாரத்திற்கு ஆதாரமாகச் செயற்பட்டு மேலும் அதனை உறுதியாக்க காட்டுக்கற்கள் சேர்ந்த "கொங்கிறீட்" இட்டு பலப்படுத்தப்பட்டது.
19.09.2003 இல் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் விழா வருடம் ஆனி மாதம் 2 ஆம் நாள் (16.06.2006) வெள்ளிக்கிழமை பகல் 10.00 மணி தொடக்கம் 10.24 மணி வரையான சுபவேளையில் கலாபூஷணம் சிவஸ்ரீ சி்.சிதம்பரநாதக்குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது. இதன் மூலம் மாவடியான் அடியார்கள் மனதிருந்த பெருவிருப்பொன்று நனவாகியது. இராஜ கோபுர நிர்மாணம் அராலியூர் சிற்பாசிரியர் திரு.கந்தசாமி கோபாலசிங்கம் குழுவினரால் நிறைவேற்றி வைக்கப்பட்டது. இந்த இராஜ கோபுரத்தில் அமைந்துள்ள சிற்பங்களின் மொத்த எண்ணிக்கை 286 ஆகும். விநாயகர், முருகன், தட்ஷணாமூர்த்தி, துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள், அட்டலட்சுமி வடிவங்கள், (லட்சுமி, சரஸ்வதி) என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
கோபுரத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் குறிப்பிடத்தக்கவை:
- முதலாவது தளத்தில் - நவ கணபதி சிற்பங்கள்
- இரண்டாவது தளத்தில் - நவக்கிரகங்கள்
- மூன்றாவது தளத்தில் - அட்டலட்சுமி வடிவங்கள்
- நான்காவது தளத்தில் - அட்ட திக்குப்பாலகர்கள்
- ஐந்தாவது தளத்தில் - மகாநாசிக்குள் தெற்கில் லட்சுமியும் வடக்கில் சரஸ்வதியும்
கோபுரத்தின் தாங்கிகள் குறவன், குறத்தி வடிவங்கள் என்றவகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் வேடன் (சிவன்) புலியுடன் சண்டையிடும் காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தட்ஷணாமூர்த்தி, பிரம்மா ஆகியோரின் திருவுருவங்களும் இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் 5ம் தளம் உட்பட கோபுரத்தின் வடபுறம் பூராகவும் பிரம்மாவின் வடிவங்களும் , தென்புறம் பூராகவும் தட்ஷணாமூர்த்தியின் வடிவங்களும் காட்சி தருகின்றன.
முகப்புப் பக்ககமான கிழக்கில் வலது பாகத்தில் பால கணபதி , நடன கணபதி, நிருத்த கணபதி, பஞ்சமுக விநாயகர் , சித்தி விநாயகர் , முத்தி விநாயகர் என வடிவங்களும் இடது பாகத்தில் பாலமுருகன், சுப்பிரமணியர், பழனி திருக்கோல முருகன், ஆறுமுக வடிவம் , வள்ளி தேவசேனா சமேத முருகன் என முருகனது வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்குப்புறம் உள்ள கோபுரத்தின் அபர பாகத்தில் விஷ்ணு, பைரவர் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயில் முகாமை
[தொகு]ஆரம்ப கோயில் முகாமையாளர் கேகயரத்தின முதலியாரின் தனிப்பட்ட முகாமையின் கீழ் இருந்தது. கோவிலுக்கு இரு மண்டபங்களை ஆக்கி நித்திய பூசை நடைபெறுவதற்குரிய ஒழுங்குகளை செய்துள்ளார். இக்கோவில் கிரியைகள் சரிவர நடைபெறுவதற்காக ஊரிலுள்ள அடியார்கள் பலர் பல கிராமங்களில் நிலங்களை தருமதானம் செய்துள்ளனர். கேகய முதலியாரின் மறைவைத்தொடர்ந்து அவரின் மகன் கணபதிப்பிள்ளை மணிய காரனும் அவருக்குப்பின் அவருடைய மகன் சரவணமுத்து நொத்தாரிசும் முகாமைப்பொறுப்பை ஏற்று நடாத்தியதாக அறியமுடிகிறது. இவரது காலத்தில் ஆகம விதிப்படி மண்டபங்கள் அமைக்கப்பட்டதுடன் மூன்று கால நித்திய பூசைகளும் நைமித்திய பூஜைகளும் நடைபெற ஆரம்பித்தன என்பதை அறிய முடிகிறது. நொத்தரிசு சரவணமுத்து அவர்களின் பின்னர் அவரின் மகன் ஏரம்பு அவர்களும் அவரின் பேரன் வி.சபாரத்தினம் அவர்களும் ஆலயத்தை முகாமை செய்தனர். ஏரம்புவின் பின்னர் அவரின் மகன் வினாசித்தம்பி தனது பொறுப்பை தனது இளைய மகனான சின்னையா என்று அழைக்கப்படும் சபாரத்தினத்திடம் வழங்கினார். திரு. சபாரத்தினம் அவர்கள் கஷ்டமான பொருளாதார நிலையிலும் 50 ஆண்டுகள் ஆலயத்தை சிறப்புற நடாத்தினார்.மூன்று கால நித்திய பூசையும் மஹோற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. இவரது காலத்தில் ஆலயம் பிரதான மண்டபங்களுடன் மடைப்பள்ளி, களஞ்சியம் , குருக்கள் அறை, வாகனசாலை உள்வீதி மண்டபத்தில் ஒருபகுதி அமைக்கப்பட்டது. இம்மண்டபங்கள் மீசாலை ஊர் பெரியவர் வேலுப்பிள்ளை அப்பாவின் நிமி உதவியுடன் செய்யப்பட்டது. சபாரத்தினம் அவர்களது காலத்தில் 1954 இல் தர்மகர்த்தா சபை சட்டபூர்வமாக ஏற்படுத்தப்பட்டது. திரு வி.சபாரத்தினம் அவர்களின் பின்னர் தர்மகர்த்ததாசபை உறுப்பினர்களில் ஒருவரான இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர், திரு.தம்பிராஜா அவர்கள் முகாமைப்பொறுப்பை ஏற்றார். குறிப்பிட்ட நேரத்தில் பூசைகள் ஒழுங்காக நடைபெற வழிவகுத்தார். இவரது காலத்தில் ஆலயத்தின் உட்பிரகாரம் முழுவதும் கொட்டகை அமைக்கப்பட்டதுடன் முருகன், சந்தான கோபாலர் ஆலயங்களும் அமைக்கப்பட்டது. வெள்ளிக்கிழமைத்திருவிழா விஷேடதினங்களுக்கான உற்சவங்கள் நடைபெறுவதற்கு உதவிய சிறந்த முகாமையாளராக திகழ்கிறார். இவரது காலத்தில் ஆலய வழிபடுவோர் சபை 1991 இல் ஆரம்பிக்கப்பட்டது. திரு.தம்பிராஜா அவர்களை தொடர்ந்தது திரு. சி. இராமலிங்கம் அவர்கள் ஆலய முகாமைப்பொறுப்பை 1990 ம் ஆண்டு நடுப்பகுதியில் ஏற்றார். தர்மகர்த்தா சபை வரிபடுவோர் சபை ஆகியவற்றின் அனுசரணையோடு மிகச்சிறப்பாக ஆலய பரிபாலனத்தை செய்துவருகிறார். இவரது காலத்தில் இரண்டு கும்பாபிடேகங்கள் நடைபெற்றுள்ளது. வசந்த மண்டபம், யாக மண்டபம் , வைரவர் ஆலயம், சண்டேஸ்வரர் ஆலயம், கோயில் சுற்றுமதில் , இராஜகோபுரம் , மணிமண்டபம் , ஆகியன அமைக்கப்பட்டு ஆலயம் முழுநிறைவு பெற்றுள்ளது. இவரும் இவரது துணைவியாரும் முழுமையாக விநாயகர் பணி செய்துவருவது பாராட்டுக்குரியது. தென்மராட்சியில் மிகப்பெரிய ஆலயமாகவும் குறிப்பிட்ட நேரத்தில் பூசைகள் மஹோற்சவம் ஆகியன நடைபெறுகின்ற ஆலயமாகவும் மீசாலை வெள்ளை மாவடிப் பிள்ளையார் ஆலயம் விளங்குகின்றது.
கும்பாபிசேகங்கள்
[தொகு]உலகத்தில் நாம் உய்வதற்காக பார்க்கும் இடம் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ள இறைவனை ஆலயத்தில் எழுத்தருளச்செய்து வழிபடுவதே கும்பாபிடேகம் ஆகும். இறைவன் பஞ்சபூதங்கள் முதலிய எட்டு இடங்களில் வியாபிக்கின்றார். அவை பின்வருமாறு நிலம், நீர், காற்று, ஆகாயம், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டும். இது குடமுழுக்கு அல்லது பெரும்சாந்தி எனப்படும். கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகின்றது. இதைக்ககண்டு களிப்பது 12 ஆண்டுகள் தினந்தோறும் ஆலயம் சென்று வழிபடுவதற்கு சமமாகும். கும்பாபிஷேகம் காண்பது கோடி புண்ணியமாகும். அக்கினி, நீர், குரு ஆகிய மூவரும் கும்பாபிஷேகத்தில் முக்கியம் பெறுகின்றனர். 1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற கும்பாபிஷேகங்களுக்கு எமது ஆலயத்தில் எழுத்து மூலமான சான்றுகள் இல்லை.ஆலய மூத்தோர் கூற்றுப்படி 1947 ஆம் ஆண்டிலும் 1957 ம் ஆண்டிலும் கும்பாபிஷேகங்கள் நடந்துள்ளதாக கருதப்படுகிறது.
கும்பாபிஷேகம் 1981
[தொகு]திரு.மு.தா.சுப்பிரமணியம் அவர்களது தலமையில் செயலாற்றிய திருப்பணிச்சபை 1980.01.28 திங்கள் அன்று மாவடிப் பிள்ளையாருக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகத்தை நடாத்தி திருப்பணிச்சேவைகள் ஆரம்பித்தது. மூலஸ்தானம் உட்பட நான்கு மண்டபங்களையும் வைரக்கல்லால் அமைத்து ஏனைய பகுதிகளையும் புனரமைத்தனர்.1981.06.22 திங்கள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. எமது ஆலயப் பிரதம குரு கலாபூசணம் சிவஸ்ரீ சி.சிதம்பரநாதக்குருக்கள் அவர்கள் பிரதம குருவாகச் செயற்பட்டு கும்பாபிஷேகத்தை இனிதே நிறைவேற்றினார். 45 நாட்கள் எம்பெருமானுக்கு மண்டலாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று 1981.08.05 புதன்கிழமை மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. சங்காபிஷேகத்தை தொடர்த்து கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பண்டிதர் ந.கந்தையா ஆசிரியர், மலராசிரியராகச் செயற்பட்டார். இக்காலப்பகுதியில் திரு.வி.சபாரத்தினம் முகாமையாளராக செயப்பட்டார்.
கும்பாபிஷேகம் 1997
[தொகு]பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைற வேண்டும். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. திரு.ஐ.மாணிக்கவாசகர் ஐ தலைவராகவும் திரு.சி.இராமலிங்கம் அவர்களை முகாமையாளராகவும் கொண்ட தர்மகர்த்தா சபை வழிபடுவோர் சபையினருடன் இணைந்து திருப்பணிச்சபை செயற்குழுவை உருவாக்கியது. திருப்ணித்தலைவராக திரு.ஐ.மாணிக்கவாசகர் ம் செயலாளராக திரு.அ.கைலாயபிள்ளையும் பொருளாளராக திரு.அ.சோமசேகரமும் செயற்பட்டனர். இத்ததிருப்பணிச்சபையால் 1997.02.09 ஞாயிறு அன்று ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.ஆலயம் 4 மாதங்களில் மிகத்துரிதமாக புனரமைக்கப்பட்டது. ஆகம விதிப்படி வசந்த மண்டபம், யாக மண்டபம், வைரவர் ஆலயம், சண்டேஸ்வர்ர் கோயில், சுற்றுமதில் என்பன அமைக்கப்பட்டன. வசந்த மண்டபத்தினை திருப்பணிச்சபைத்தலைவர் திரு.ஐ.மாணிக்கவாசகர் குடும்பத்தினரும் சண்டேஸ்வரர் ஆலயத்தை திரு.சோ .கணபதிப்பிள்ளை குடும்பத்தினரும் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கினர்.பொதுமக்களின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 1997.06.08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலய பிரதம குரு கலாபூசணம் சிதம்பரநாதக்குருக்கள் அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இது குருக்கள் அவர்கள் நடாத்திய இரண்டாவது மகா கும்பாபிஷேகம் என்பதுடன் , ஆதார பூர்வமான இரண்டாவது கும்பாபிஷேகமுமாகும். 45 தினங்கள் தொடர்ச்சியாக மண்டலாபிஷேகம் நடைபெற்றெ 1997.07.22 செவ்வாய்க்கிழமை சங்காபிடேகத்துடன் மண்டலாபிடேகப் பூர்த்தி நடைபெற்றது.
பிராயச்சித்த கும்பாபிஷேகம் 2002
[தொகு]தென்மராட்சி பிரதேசம் 2000 ஆம் ஆண்டு சித்திரை மாதத்தில் பெரும் இராணுவ மோதலுக்கு உட்பட்டது. மக்களின் குடியிருப்பு , ஆலயங்கள் போர்ப்பாதிப்புக்கு உட்பட்டன. மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப்பிள்ளையாரின் அருளினால் மீசாலை பிரதேசத்துக்கோ , ஆலயத்திற்கோ , மக்கள் வீடுகளுக்கோ அழிவு ஏற்படவில்லை. ஆயினும் மக்கள் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் தமது வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து வடமராட்சி, வலிகாமம் பகுதிகளில் வாழ்த்தனர். இடப்பெயர்ச்சி காரணமாக விநாயகருக்கு இக் காலப்பகுதியில் பூசை நடைபெறவில்லை. அன்றைய இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற சமாதான ஒப்பந்தத்தை தொடர்த்து மக்கள் தென்மராட்சி பிரதேசத்தில் மீள்குடியேறினர். 2002.01.28 ஆம் திகதி எம்பெருமானுக்கு பிராயச்சித்த கும்பாபிஷேகம் நடைபெற்றது . அதைத்தொடர்ந்து மூன்றுவேளை பூசையும் ஏனைய உற்சவங்களும் வழமை போல நடைபெற ஆரம்பித்தது.
இராஜ கோபுரக் கும்பாபிஷேகம் 2006
[தொகு]ஒரு மனிதனின் உடலமைப்பை ஒத்ததாக ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இராஜ கோபுரம் பாதங்களுக்கு ஒப்பானது. இராஜ கோபுரத்தின் வடிவம் லிங்கம் போல் உள்ளதால் இதனை " ஸ்தூல லிங்கம்" என அழைப்பர். இராஜ கோபுரத்தில் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து அம்சங்களும் உள்ளடக்கப்படும். மீசாலைவாழ் மக்களின் நீண்டகால கனவாக மாவடி விநாயகரின் இராஜ கோபுர திருப்பணி இருந்த்து. ஊர்மக்களின் ஆதரவுடன் ஆலய தர்மகர்த்தா சபையீனரும் முகாமையாளர் திரு.சி.இராமலிங்கம் அவர்களும் இத்திருப்பணிக்கு செயல் வடிவம் கொடுத்தார். 2003.09.19 ஆம்திகதி வெள்ளிக்கிழமை மாவடி விநாயகருன் இராஜ கோபுரத் திருப்பணிக்காக நடுகல் நாட்டப்பட்டது. ஊரிலுள்ள அடியார்களும் புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்கின்ற எமது உறவுகளினது உதவியுடன் அழகான சிற்பங்களுடன் கூடிய இராஜ கோபுரம் உருவாக்கப்பட்டது. பல்வேறு வரலாறுகளைக்கூறும் பஞ்சதள இராஜ கோபுரத்தின் கும்பாபிஷேகம் 2006.09.19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அத்துடன் அழகான மணி மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டு ஆலயத்துக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தியது.
கும்பாபிஷேகம் 2010
[தொகு]பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென ஆகமங்கள் கூறுவதற்கேற்ப தர்மகர்த்தா சபையினர் 2010 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் செய்வதற்கு தீர்மானித்தனர். 2010.01.27 ம் திகதி புதன்கிழமை பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 127 வது நாள் அதாவது 2010.06.04 வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் செய்வதாகவும் நாள் குறிக்கப்பட்டது. உற்சவ மூர்த்திகள் மண்டபம் , மகா மண்டபம், ஸ்நபந மண்டபம், வசந்தமண்டப விமானம் என்பன மிகச்சிறந்த முறையில் கொங்கிறீற்றால் அமைக்கப்பட்டது. சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நிலங்கள் புனரமைக்கப்பட்டன. ஆலயக்கட்டடங்கள் , சுற்று மதில் , இராஜா கோபுரம் என்பன அழகுறு வண்ணத்தில் நிறம்தீட்டப்பட்டது. கொடிக்கம்பத்திற்கருகில் தம்பப்பிள்ளையார் ஸ்தாபிக்கப்பட்டது. மணிமண்டப வாயிலில் அழகிய இரு புதிய துவாரபாலகர்கள் உருவாக்கப்பட்டன.மணிமண்டபத்தின் மேற்குப்புறத்தில் அழகான சிற்பங்களாகவும் , ஓவியங்களாகவும் ஆலய வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. மிகக்குறுகிய காலத்தில் திருப்பசி வேலைகள் நிறைவு பெற்றது. 2010.06.02 புதன்கிழமை காலை பத்துமணி முதல் 2010.06.03 வியாழன் மாலை நான்கு மணிவரை எண்ணை காப்பு சாத்தப்பட்டது. ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சி.சிதம்பரதாதக்குருக்கள் தலைமையில் அவரது மகன் கிருபாகரக்குருக்கள் ஏனைய அத்தணப் பெருமக்களின் துணையுடன் ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெறுவதற்கான கிரியைகள் நடத்தேறின. 2010.06.04 ம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 05.50 மணிமுதல் 06.38 வரை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 45 நாட்கள் மண்டலாபிடேகத்துடன் 2019.07.18 ம் திகதி சங்காபிடேகத்துடன் பூர்த்தி விழா நடைபெற்றது. கும்பாபிஷேகம், சங்காபிடேகம் ஆகியவற்றிற்கு மாவடிப் பிள்ளையார் ஆலய வழிபடுவோர் சபையினர் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.
ஆலயத்திருப்பணிகளும் வளர்ச்சியும்
[தொகு]ஆலய வரலாற்றின் உற்சவ மூர்த்திகள் மகோற்சவ காலத்தில் மட்டும் வசந்த மண்டபத்திலும் ஏனைய காலங்களில் ஆலயத்தின் உட்பகுதியில் அடியார்கள் வணங்கமுடியாத இடத்தில் வைக்கப்பட்டிருத்தன. 1985.08.21 புதன்கிழமை மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கான ஆலயம் உருவாக்கப்பட்டு அடியவர்கள் உற்சவமூர்த்தியை வணங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டது. 1985 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை பல்வேறு மக்களின் நிதியுதவியுடன் உள்வீதி மதில் அமைக்கப்பட்டதுடன் உள்வீதி மண்டபங்களும் சீமெத்திலான நிலம் போடப்பட்டது. மாவடி விநாயகர் ஆலயத்தின் அடையாளத்திற்காக 1988.03.26 ஆம் திகதி கண்டி வீதியில் விநாயகர் சிலை திறக்கப்பட்டது. ஆலயத்தின் உட்பிரசாரத்தின் சாவகச்சேரி வடக்கு மடத்தடி வீதியில் வசித்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான திரு. சரவணமுத்து அவர்களின் திருப்பணியாக முருகன் ஆலயம் அமைக்கப்பட்டது. 1989.04.24 ஆம் தேதி காலை 05.38 மணிக்கு முருகனாலய குடமுழுக்கு சிறப்புற நடந்தேறியது. மீசாலைப்பகுதியில் கிருஷ்ணருடைய ஆலயம் இல்லாத குறை இருந்தது. ஆலய முகாமையாளராக அக்காலப்பகுதியில் விளங்கிய திரு. தம்பிராஜா அவர்களின் முயற்சியால் சந்தானகோபாலர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு 1990.06.03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.27 மணிக்கு சத்தான கோபாலருக்கு குடமுழுக்கு நடாத்தப்பட்டது. சிவபெருமான் ஐந்து திருமுகங்களுடன் விளங்குவது போலவே விநாயகரும் பஞ்சமுக விநாயகராக காட்சி தருகின்றார். விநாயகரின் திருவுருவத்திலே யானைத்தலை, விலங்கு உருவத்தையும் , இரு கால்கள் மனித உருவத்தையும் , நான்கு கரங்கள் தேவ உருவத்தையும் காட்டி நிற்கின்றன. விதாயகன் விலங்காய் , மனிதராய் , தேவராய் விளங்குகின்றார் என்னும் தத்துவத்தை பஞ்சமுக விநாயகர் விளக்குகின்றார். பஞ்சமுக விநாயகர் மாவடியான் ஆலயத்தில் 2003.07.02 ஆம் திகதி புதன்கிழமை பிரதிஷ்டை நடைபெற்றது. இத் திருப்பணியை மாவடியான் அடியவர் திரு.வே. திருநாவுக்கரசு அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
உசாத்துணைகள்
[தொகு]https://www.facebook.com/mavadippillaiyaar/
- ↑ மீசாலை திருநீலகண்ட வெள்ளை மாவடிப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக மலர் 2010 ISBN-978-955-0414-00-0