மிசிசிப்பிப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசிசிப்பிப் பண்பாட்டைச் சேர்ந்த உள்ளீடற்ற மட்பாண்டக் குவளை, found at Rose Mound in குரொஸ் கவுண்டி, ஆர்க்கன்சாஸ் பகுதியில் உள்ள ரோஸ் மவுண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. 1400-1600. உயரம்: 8 அங்குலங்கள் (20 சமீ).

மிசிசிப்பிப் பண்பாடு என்பது, மண்மேடு கட்டும் (mound-building) தொல்குடி அமெரிக்கப் பண்பாடு ஆகும். இது இன்றைய ஐக்கிய அமெரிக்காவின் நடுமேற்கு, கிழக்கு, தென்கிழக்குப் பகுதிகளில் ஏறத்தாழ கி.பி 800 தொடக்கம் 1500 வரை நிலவியது. இக்காலப் பகுதி இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்பட்டது. மிசிசிப்பிப் பண்பாட்டு மக்கள் ஐரோப்பாவின் செப்புக் கால மக்களுடன் ஒப்பிடத் தக்கவர்கள். இப் பண்பாடு, மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உருவானது. கிளை ஆறான தென்னசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் நிலவிய பண்பாடுகளும் இக்கால கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாட்டின் இயல்புகளைப் பெறத் தொடங்கின. ஏறத்தாழ காலம் கணிக்கப்பட்ட எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் களங்களுமே 1539 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கே மிகக் குறைவான ஐரோப்பியப் பொருட்களே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இது இப்பண்பாடு முழுவதும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரே நிலவியதைக் காட்டுகின்றது.

பண்பாட்டு இயல்புகள்[தொகு]

மேடை மேடுகள் at the Kincaid Site in Massac Co., Ill.

மிசிசிப்பிப் பண்பாட்டுக்கு உரிய இயல்புகளாகப் பல இனம் காணப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள எல்லாமே எல்லா மிசிசிப்பிப் பண்பாட்டுக் குழுவினருக்கும் பொதுவானவை என்று சொல்ல முடியாது எனினும், அவர்கள் எல்லோருமே இவற்றில் சிலவற்றையோ அல்லது முழுவதையுமோ பயன்படுத்துவதில் தங்கள் முன்னோரிலும் வேறுபட்டிருந்தார்கள்.

  1. மேற்பகுதி தட்டையான பிரமிட்டு மேடுகள் அல்லது மேடை வடிவ மேடுகளை அமைத்தனர். இவ்வாறான மேடுகள் பொதுவாகச் சதுரம், நீள்சதுரம் அல்லது மிக அரிதாக வட்ட வடிவில் இருந்தன. இம்மேடுகளுக்கு மேல், வீடுகள், கோயில்கள், அடக்கக் கட்டிடங்கள் அல்லது வேறு அமைப்புக்கள் அமைக்கப்பட்டன.
  2. சோழப் பயிர் சார்ந்த வேளாண்மை. பல பகுதிகளில் மிசிசிப்பிப் பண்பாட்டுத் தொடக்கம் ஒப்பீட்டளவில் பெரும்படியான, செறிந்த சோழப் பயிர்ச் செய்கைத் தொடக்கத்துடன் ஒத்திசைவாக உள்ளது.
  3. பரவலான வணிக வலையமைப்பு. இது மேற்கில் றொக்கீஸ், வடக்கில் பேரேரிகள், தெற்கில் மெக்சிக்கோக் குடா, கிழக்கில் அத்லாந்திக் பெருங்கடல் வரை பரந்து இருந்தது.
  4. குழுத்தலைமை (chiefdom) முறை அல்லது இது போன்ற சமூகச் சிக்கல்தன்மையின் வளர்ச்சி.
  5. நிறுவனப்படுத்தப்பட்ட சமூகச் சமனில்நிலையின் வளர்ச்சி.
  6. அரசியல் மற்றும் சமயக் கூட்டு அதிகாரம் ஒன்று அல்லது மிகச் சிலர் கையில் குவிந்தமை.
  7. குடியிருப்புகளின் படிநிலை அமைப்பு. பெரிய மேடு ஒன்றுடன் கூடிய ஒரு முதன்மை மையமும், அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சிறிய குடியிருப்புக்களும். இவை சிறிய மேடுகளைக் கொண்டிருக்கக் கூடும்.

இவர்களிடம் எழுத்து முறையோ அல்லது கற்களால் கட்டிடங்களைக் கட்டும் முறையோ இருக்கவில்லை. இயற்கையாகக் கிடைத்த உலோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால், இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு எடுக்கத் தெரிந்திருக்கவில்லை.

காலவரிசை[தொகு]

மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுவது உண்டு:

  1. தொடக்க மிசிசிப்பிப் பண்பாட்டுக் காலம் (கி.பி 1000 - 1200)
  2. இடை மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1200 - 1400)
  3. பிந்திய மிசிசிப்பிப் பண்பாட்டுக்காலம் (கி.பி 1400 - ஐரோப்பியர் தொடர்பு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிசிப்பிப்_பண்பாடு&oldid=2222855" இலிருந்து மீள்விக்கப்பட்டது