மல்லிங்காபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லிங்காபுரம் தமிழ்நாடு, தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். கம்பம் - போடிநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமம், உத்தமபாளையத்திலிருந்து ஒன்பதாவது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

பண்ணைப்புரம், கரியணம்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இக்கிராமம் "தாய்கிராமம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு. பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட முதல் இரண்டு வார்டுகள் இக்கிராமத்தில் வருகின்றன. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இக்கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஐம்பது அடியில் துவங்கிய அந்தக் கால கட்டத்தில், மதுரை, ஒட்டன்சத்திரம், விருதுநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு இங்கிருந்து விவசாயப் பொருட்களான காய்கனிகள் அதிகம் ஏற்றுமதியானது. மக்களின் வாழ்க்கைத்தரம் விவசாயத்தை போன்றே பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது.

இவ்வூரில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி தொடக்கப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகச் செயல்பட்டு வருகின்றது. மல்லிங்காபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் தற்போதைய நிலவரப்படி தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்வியறிவு பெற்று உள்ளனர். இவ்வூரின் தென்கிழக்கே சுயம்புவாக எழும்பியுள்ள மல்லிங்கேஸ்வரருக்கு ஆலயம் ஒன்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டது. முற்காலத்தில் இக்கோவிலை சுற்றித்தான் மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்து விவசாயம் செய்து வந்ததாகவும், பின்னர் தொற்றுநோய் பரவிய காரணத்தால் மேற்குத் திசை நோக்கி குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

மல்லிங்காபுரம் கிராமத்தில் பிள்ளையார், காளியம்மன், முத்தாலம்மன், பேச்சியம்மன், பட்டாளம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர்த் திட்டம் நிறைவேற்றி வருகிறது. பொன் விளைந்த இப்பகுதி விவசாய நிலங்கள், தற்போது நிலத்தடி நீர்மட்டம் எண்ணூறு அடிக்கும் கீழாகச் சென்று விட்டதால் பெரும்பாலான விவசாய நிலங்கள், வானம் பார்த்த பூமியாக மானாவாரிச் சாகுபடிக்கு மாறிவிட்டன.

இங்குள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் அருகிலுள்ள பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, இந்து நடுநிலைப்பள்ளி, கோம்பை கன்னிகா பரமேஸ்வரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், கல்லூரிப் படிப்பை உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரியிலும் தொடர்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிங்காபுரம்&oldid=2807565" இருந்து மீள்விக்கப்பட்டது