மரம் வடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மரம் வடித்தல்[தொகு]

மரத்தில் பெரும்பகுதி செல்லுலோஸ், லிக்னின் (Lignin) என்ற ரசாயனப் பொருள்களாலும் மற்றும் குறைந்த அளவுள்ள வேறு பல பொருள்களாலும் ஆனது. மரத்தைக் காய்ச்சி வடித்தால் செல்லுலோஸ் முதலிய பொருட்கள் சிதைந்து வெப்பப் பகுப்பு (Pyrolysis) ஏற்படுவதன் மூலம் புதிய பல பொருள்கள் உண்டாகின்றன. இவ்வாறு பழைய பொருள்களைச் சிதைத்துப் புதிய பொருள்களை உண்டாக்க மரத்தை வடித்தலை மரம் வடித்தல் (Wood Distillation) அல்லது மரத்தைச் சிதைத்து வடித்தல் (Destructive Distillation) எனக் கூறுவது உண்டு. மரத்தைக் காய்ச்சி வடிக்கும் போது கிடைக்கும் வடிதிரவத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ரசாயனக் கூட்டுப்பொருள்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.

மரம் வடிக்கும் முறை[தொகு]

மரத்தை வேண்டிய நீளமுள்ள துண்டுகளாக வெட்டி வார்ப்பிரும்பிலான வாலைகளினுள்ளே செலுத்திக் காற்று உள்ளே புகாவண்ணம் இறுக மூடிவிடுவர். வாலையில் தீமூட்டி விட்டால், பொதுவாக 24 மணி நேரத்தில் மரம் வடித்தல் முடிந்துவிடும்.

மரத்தைக் காய்ச்சி வடிப்பதால் கிடைக்கும் பொருள்கள்[தொகு]

மரத்தைக் காய்ச்சி வடிப்பதால் கிடைக்கும் பொருள்களை நான்கு பிரிவுகளாக்கலாம். அவையாவன:

  1. வாயுக்களும் ஆவிகளும்
  2. நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய பொருள்கள்
  3. தார்
  4. கரி.

இவற்றில் நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய பொருள்களும் தாரும் கலந்த கலவை பைரோலிக்னிய திரவம் (Pyroligneous acid) எனப்படும். வாயுக்களையும் ஆவிகளையும் தவிர, இதர பொருள்களை மேற்கொண்டு பக்குவப்படுத்தி நவீனத் தொழிலியலில் பயன்படுத்துகிறார்கள். மரம் வடித்தலின் முக்கியமான விளைபொருள்கள் கரியும் தாருமேயாகும். தாரை மீண்டும் வினைப்படுத்திப் பலவகையான பொருள்களைப் பெறலாம். அகன்ற இலைகளையுடைய தாவர வகையைச் சேர்ந்த கெட்டியான மரங்களைக் காய்ச்சி வடித்தால், நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகும் பொருள்கள் எடையில் 30-35 சதவீதமும், தார் 10 சதவீதமும், கரி 40-45 சதவீதமும் கிடைக்கின்றன.

பைரோலிக்னிய திரவத்தில் உள்ள தாரையும் மற்றப் பொருள்களையும் எந்திரங்களைக் கொண்டு பிரிக்கிறார்கள். நீர்ப்பகுதியுடன் சுண்ணாம்பைச் சேர்த்து வினைப்படுத்தி, மெதில் ஆல்கஹாலையும், அசிட்டோன், அசிட்டிக் அமிலம் போன்ற பொருள்களையும் பெறலாம்.

மரம் வடி பொருள்களின் பயன்கள்[தொகு]

மரம் வடி பொருள்கள் பலவகைகளிலும் பயன்படுகின்றன. மெதில் ஆல்கஹால், அசிட்டோன், அசிட்டிக் அமிலம் முதலியன தொழில் துறையில் முக்கியமான கரைப்பான்களாகவும், வெடிமருந்து, வர்ணம், வார்னீஷ், பிளாஸ்டிக் முதலியன உற்பத்தி செய்யும் தொழில்களிலும் பயன்படுகின்றன. மரத்தாரைப் பக்குவப்படுத்தி காப்புப் பொருள்கள் (Preservatives), தொற்றுநீக்கிகள் (Disinfectants), சாலையிடு பொருள்கள் (Road Binding materials) முதலியவற்றைப் பெறலாம். கரியானது சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது. உலோகத் தொழிலிலும், வாயு முகமூடிகளில் வடிகட்டியாகவும் கரி பயன்படுகிறது. அருவருப்பூட்டும் துர்நாற்றம், நிறம் முதலியவற்றை உறிஞ்ச வினைவல்ல கரி (Activated charcoal) பயன்படுகிறது.

மரம் வடித்தல் செய்யும்போது ஏற்படும் மாறுபாடுகள்[தொகு]

மரம் வடித்தல் செய்யும்போது ஏற்படும் மாறுபாடுகள் மிகச் சிக்கலானவை. சுமார் 105 °C -110 °C வரையில் மரம் உலர்கிறது. அப்போது முக்கிய வடிதிரவம் நீரே. சுமார் 280 °C யில் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள்களில் பெரும்பகுதி வெளியாகிறது. இந்த இரண்டாவது நிலையில், வெப்பம் வெளியிடும் வினையாகிறது (Exothermic Reaction); வெப்ப நிலை விரைவில் உயர்கிறது. மூன்றாவது நிலையில் 350 °C - 400 °C யில் ரசாயன வினை முற்றுப்பெறுகிறது.

இந்தியாவில் மரம் வடிக்கும் தொழிற்சாலை[தொகு]

இந்தியாவிலேயே மிகப் பெரிய மரம் வடிக்கும் தொழிற்சாலையைப் பத்திராவதியிலுள்ள மைசூர் இரும்பு எஃகுத் தொழிற்சாலையில் கர்நாடக அரசினர் நடத்துகிறார்கள். சுமார் 40,000 டன் மரம் ஆண்டுதோறும் காய்ச்சி வடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரம்_வடித்தல்&oldid=2724089" இருந்து மீள்விக்கப்பட்டது