சிதைத்துவடித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதைத்து வடித்தல் (Destructive Distillation) என்பது மரத்தில் பெரும்பகுதியான மரவிழையம், மரப்பசை (Lignin) ஆகிய வேதிப் பொருள்களையும் குறைந்த அளவுள்ள வேறு பல பொருள்களையும் சிதைத்து வடித்தலாகும். அப்போது மரவிழையம் முதலிய பொருட்கள் சிதைந்து வெப்பப் பகுப்ப்பால் (Pyrolysis) புதிய பல பொருள்கள் உண்டாகின்றன. மரத்தைச் சிதைத்து வடிக்கும்போது கிடைக்கும் வடிநீர்மத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வேதிச் சேர்மங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.

மரம் சிதைத்துவடிக்கும் முறை[தொகு]

மரத்தை வேண்டிய நீளமுள்ள துண்டுகளாக வெட்டி வார்ப்பிரும்பிலான வாலைகளினுள்ளே செலுத்திக் காற்று உள்ளே புகாவண்ணம் இறுக மூடிவிடுவர். வாலையில் தீமூட்டி விட்டால், பொதுவாக 24 மணி நேரத்தில் மரம் வடித்தல் முடிந்துவிடும்.

மரத்தைச் சிதைத்து வடிப்பதால் கிடைக்கும் பொருள்கள்[தொகு]

மரத்தைக் காய்ச்சி வடிப்பதால் கிடைக்கும் பொருள்களை நான்கு பிரிவுகளாக்கலாம். அவையாவன:

  1. வளிமங்களும் ஆவிகளும்
  2. நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய பொருள்கள்
  3. நிலக்கீல்
  4. கரி.

இவற்றில் நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகக்கூடிய பொருள்களும் நிலக்கீலும் கலந்த கலவை எரிமரப்பசை(பைரோலிக்னிய) நீர்மம் (Pyroligneous acid) எனப்படும். வளிமங்களையும் ஆவிகளையும் தவிர, இதர பொருள்களை மேற்கொண்டு பக்குவப்படுத்தி நவீனத் தொழிலியலில் பயன்படுத்துகிறார்கள். மரம் சிதைத்துவடித்தலின் முதன்மையான விளைபொருள்கள் கரியும் நிலக்கீலுமேயாகும். நிலக்கிலைமீண்டும் வினைப்படுத்திப் பலவகையான பொருள்களைப் பெறலாம். அகன்ற இலைகளையுடைய தாவர வகையைச் சேர்ந்த கெட்டியான மரங்களைச் சிதைத்துவடித்தால், நீரில் கரையக்கூடிய எளிதில் ஆவியாகும் பொருள்கள் எடையில் 30-35 சதவீதமும், நில்க்கீல் 10 சதவீதமும், கரி 40-45 சதவீதமும் கிடைக்கின்றன.[1][2]


எரிமரப்பசை நீர்மத்தில் உள்ள நிலக்கீலையும் மற்றப் பொருள்களையும் எந்திரங்களைக் கொண்டு பிரிக்கிறார்கள். நீர்ப்பகுதியுடன் சுண்ணாம்பைச் சேர்த்து வினைப்படுத்தி, மெதில் ஆல்ககாலையும், அசிட்டோன், அசிட்டிக் அமிலம் போன்ற பொருள்களையும் பெறலாம்.

மரம் வடிபொருள்களின் பயன்கள்[தொகு]

மரம் வடிபொருள்கள் பலவகைகளிலும் பயன்படுகின்றன. மெதில் ஆல்ககால், அசிட்டோன், அசிட்டிக் அமிலம் முதலியன தொழில் துறையில் முதன்மைமான கரைப்பான்களாகவும், வெடிமருந்து, வணணம், நெய்வனம், நெகிழி முதலியன செய்யும் தொழில்களிலும் பயன்படுகின்றன. மரத்தாரைப் பக்குவப்படுத்தி காப்புப்பொருள்கள் (Preservatives), தொற்றுநீக்கிகள் (Disinfectants), சாலையிடு பொருள்கள் (Road Binding materials) முதலியவற்றைப் பெறலாம். கரி சிறந்த எரிபொருளாகப் பயன்படுகிறது. உலோகத் தொழிலிலும், வளிம முகமூடிகளில் வடிகட்டியாகவும் கரி பயன்படுகிறது. அருவருப்பூட்டும் துர்நாற்றம், நிறம் முதலியவற்றை உறிஞ்சவல்லதாகக் முனைவுறுகரி (Activated charcoal) பயன்படுகிறது..[3][4]

மரம் சிதைத்துவடித்தல் செய்யும்போது ஏற்படும் மாறுபாடுகள்[தொகு]

மரம் வடித்தல் செய்யும்போது ஏற்படும் மாறுபாடுகள் மிகச் சிக்கலானவை. சுமார் 105 °C -110 °C வரையில் மரம் உலர்கிறது. அப்போது முதன்மை வடிதிரவம் நீரே. சுமார் 280 °C வெப்பநிலையில் எளிதில் ஆவியாகக் கூடிய பொருள்களில் பெரும்பகுதி வெளியாகிறது. இந்த இரண்டாவது நிலையில், வெப்பம் வெளியிடும் வினை நடக்கிறது; வெப்ப நிலை விரைவில் உயர்கிறது. மூன்றாவது நிலையில் 350 °C - 400 °C யில் வேதிவினை முற்றுப்பெறுகிறது.[5][6]

இந்தியாவில் மரம் வடிக்கும் தொழிற்சாலை[தொகு]

இந்தியாவிலேயே மிகப் பெரிய மரம் சிதைத்துவடிக்கும் தொழிற்சாலையைப் பத்திராவதியிலுள்ள மைசூர் இரும்பு எஃகுத் தொழிற்சாலையில் கர்நாடக அரசினர் நடத்துகிறார்கள். சுமார் 40,000 டன் மரம் ஆண்டுதோறும் சிதைத்து வடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bates, John S.; Distillation of hardwoods in Canada; Pub: Ottawa, F. A. Acland, 1922. May be downloaded from: [1]
  2. Klar, Max; Rule, Alexander; The technology of wood distillation, with special reference to the methods of obtaining the intermediate and finished products from the primary distillate; Pub: London Chapman & Hall 1925. May be downloaded from: [2]
  3. Lunge, George (1887). Coal-tar and ammonia. Gurney and Jackson. https://archive.org/details/coaltarandammon00lunggoog. 
  4. Speight, James G. (2010). The Refinery of the Future. William Andrew. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8155-2041-2. 
  5. Schorlemmer, Carl; Smithells, Arthur (1894). The rise and development of organic chemistry. Macmillan. https://archive.org/details/risedevelopmento00schorich. 
  6. I.L. Finar Organic Chemistry vol 1 ( 4th.ed.) Longmans 1963 plus I.L. Finar Organic Chemistry vol 2 ( 3rd.ed.) Longmans Green & Co. 1964 May be downloaded from: https://archive.org/details/OrganicChemistryVol1 plus https://archive.org/details/OrganicChemistryVol2
  • "குழந்தைகள் கலைக் களஞ்சியம்",1993, சென்னை:தமிழ் வளர்ச்சிக் கழகம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதைத்துவடித்தல்&oldid=3877721" இலிருந்து மீள்விக்கப்பட்டது