உள்ளடக்கத்துக்குச் செல்

மடலேறுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மடல் ஊர்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை நேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்ணாய் பாவித்துப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.


தன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.

மடல் - விளக்கம்[1]

[தொகு]

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் 'மடல்' ஆகும்.

இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.

மடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு.

தமிழ் இலக்கியத்தில்

[தொகு]

தொல்காப்பியம்

[தொகு]

சங்க நூல்

[தொகு]

மடலூரும் தலைவன் அணிந்துகொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப்பட்டிருக்கும். [2]

திருக்குறள்

[தொகு]
  • காமத்தில் துன்புறுபவர்களுக்கு மடலூர்தல்தான் வலிமை [3].
  • தாங்கமுடியாவிட்டால் வெட்கத்தை விட்டுவிட்டு மடலேறுவர். [4]
  • காமுற்றவர் மடலேறுவர். [5]
  • அவள்தான் என்னை மடலேறும் நிலைக்கு ஆளாக்கினாள் [6]
  • இரவெல்லாம் தூக்கமின்றி மடலூர்தல் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன் [7]
  • கடல் போல் காமம் இருக்கும்போதும் பெண் மடலேறுவது இல்லை. அதனால் ஆணைவிடப் பெண்ணே மேலானவள். [8]

மடல் (சிற்றிலக்கியம்)

[தொகு]

மடலேறுதலைப் பாடும் நூல் மடல் எனப்படுகிறது. தமிழில் மடல் வகை சிற்றிலக்கியங்களின் முன்னோடியாக உள்ளவை திருமங்கை ஆழ்வாரால் இயற்றப்பட்ட பெரிய திருமடலும் சிறிய திருமடலும் ஆகும். இவை பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளன.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. http://www.tamilvu.org/courses/degree/p103/p1033/html/p103323.htm
  2. மற்றை, அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலித்தொகை 138, 140-4
  3. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி - திருக்குறள் 1131
  4. நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. - திருக்குறள் 1132.
  5. நாணொடு நல்லாண்மை பண்ணுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் - திருக்குறள் 1133
  6. தொடலைப் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் - திருக்குறள் 1135
  7. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல் ஒல்லா பேதைக்கு என் கண்.- திருக்குறள் 1136
  8. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - திருக்குறள் 1137
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடலேறுதல்&oldid=3726868" இலிருந்து மீள்விக்கப்பட்டது