பொருளியல் குறிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு பொருளியல் குறிகாட்டி (Economic indicator) அல்லது வணிகக் குறிகாட்டி என்பது பொருளாதாரம் குறித்த ஒரு புள்ளிவிபரம் ஆகும். பொருளியல் குறிகாட்டிகள் பொருளியல் செயல் திறன், எதிர்காலச் செயல் திறன் குறித்த எதிர்வுகூறல் போன்றவற்றைப் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. பொருளியல் குறிகாட்டியின் ஒரு பயன்பாடு வணிகச் சுழல்களை ஆய்வு செய்வதாகும்.


பொருளியல் குறிகாட்டிகள் பல்வேறு சுட்டெண்கள், வருமான அறிக்கைகள், பொருளியல் சுருக்க அறிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்குகிறது. எடுத்துக்காடுகள்: வேலையின்மை வீதம், housing starts, நுகர்வோர் விலைச் சுட்டெண் (பண வீக்கத்தைக் காட்டும் ஒரு அளவீடு), நுகர்வோர் Leverage விகிதம், தொழில்சார் உற்பத்தி, வங்குறோத்துகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி, அகலப்பட்டை இணைய ஊடுருவல், சில்லறை விற்பனை, பங்குச் சந்தை விலைகள், பண வழங்கல் மாற்றங்கள்.


ஐக்கிய அமெரிக்காவிலுள்ள முன்னணி வணிகச் சுழல் நாள் குறிப்புக் குழு தேசிய பொருளியல் ஆய்வுப் பணியகம் (தனியார்) ஆகும். தொழில்சார் புள்ளியியல் பணியகம், தொழில்சார் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறைகளில் அமெரிக்க அரசுக்கான தகவல்களைத் திரட்டும் முகமை நிறுவனம் ஆகும். ஐக்கிய அமெரிக்கத் தொகை மதிப்பீட்டுப் பணியகம் மற்றும் ஐக்கிய அமெரிக்க பொருளியல் பகுப்பாய்வுப் பணியகம் என்பவை பொருளியல் குறிகாட்டிகளை வெளியிடும் நிறுவனங்களுள் அடங்கும்.


பொருளியல் சுழல் தொடர்பில் அவற்றின் காலப்பகுதியைப் பொறுத்து பொருளியல் குறிகாட்டிகளை மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர்:

  • வழிகாட்டுக் குறிகாட்டிகள் என்பன பொருளாதாரம் முழுதும் தழுவிய மாற்றங்கள் ஏற்படுமுன் மாறும் குறிகாட்டிகள். இதனால் இவை வழமையாகப் பொருளியல் தொடர்பான குறுகியகால எதிர்வுகூறல் குறிகாட்டிகள் ஆகும். பங்குச் சந்தை வருமானங்கள் ஒரு வழிகாட்டுக் குறிகாட்டி: முழுமையான பொருளாதாரம் சரியத் தொடங்கு முன்பே பங்குச் சந்தை சரியத் தொடங்குவதும் சரிவு நிலையில் இருந்து பொதுவான பொருளாதார மீட்சி தொடங்கு முன்பே பங்குச் சந்தைகள் முன்னேறத் தொடங்குவதும் வழக்கமான நிகழ்வுகள்.
  • பிந்தும் குறிகாட்டிகள் என்பன பொருளாதாரம் முழுதும் தழுவிய மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் மாறும் குறிகாட்டிகள் ஆகும். பொதுவாக இப் பின் தங்கல் சில காலாண்டுகளாகக் காணப்படும். வேலையின்மை வீதம் ஒரு பிந்தும் குறிகாட்டி: பொதுவான பொருளாதார முன்னேற்றம் தொடங்கி இரண்டு, மூன்று காலாண்டுகளுக்குப் பின்னரே வேலைநிலைமை முன்னேறத் தொடங்கும்.
  • பொருந்தும் குறிகாட்டிகள் என்பன பொதுவான பொருளாதார மாற்றங்களுடன் அதே காலத்தில் மாறும் குறிகாட்டிகள், இதனால் இவை பொருளாதாரத்தின் நடப்பு நிலை குறித்த தகவல்களைத் தருகின்றன. தனிநபர் வருமானம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்சார் உற்பத்தி, சில்லறை விற்பனை என்பன பொருந்தும் குறிகாட்டிகள் ஆகும். நிகழ்வு முடிந்த பின்னர் வணிகச் சுழலின் உயர் நிலை, தாழ் நிலை போன்றவற்றுக்கான தேதிகளை அடையாளம் காண்பதற்கு பொருந்தும் குறிகாட்டிகளைப் பயன்படுத்த முடியும்.[1]

பொதுவான பொருளாதாரத்தின் திசைக்குச் சார்பாக பொருளியல் குறிகாட்டிகளின் திசை யைக் குறிக்கும் மூன்று சொற்கள் உள்ளன:

  • ஒத்தசுழல் குறிகாட்டிகள் பொதுப் பொருளாதாரத்தின் அதே திசையில் நகர்பவை: பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும்போது இவை கூடுகின்றன; மோசமாகச் செயல்படும்போது குறைகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு ஒத்தசுழல் குறிகாட்டி ஆகும்.
  • எதிர்ச் சுழல் குறிகாட்டிகள் பொதுப் பொருளாதாரத்தின் திசைக்கு எதிராகச் செல்வன. வேலையின்மை வீதம் எதிர்ச்சுழல் வகையானது: பொதுப் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது இது கூடுகின்றது.
  • சுழல்சாரா க் குறிகாட்டிகள் என்பன வணிகச் சுழலுடன் குறைவான தொடர்பு கொண்டவை அல்லது எவ்வித தொடர்பும் கொண்டிராதவை: இவை பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படும்போதும் ஏறவோ இறங்கவோ செய்யலாம்; அதுபோல பொருளாதாரம் மோசமாகச் செயல்படும்போதும் ஏற்றம் இறக்கம் இரண்டையும் காட்டலாம்.[2]


பொருளாதாரத்தின் ஒரு பகுதியில் மட்டும் கவனம் செலுத்தும் கூடுதல் சிறப்புக் குறிகாட்டிகளும் (எகா. நுகர்வோர் வழிகாட்டுக் குறிகாட்டிகள்) உள்ளன.


மேலும் பார்க்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. Charles Emrys Smith, 'Economic Indicators,' in Wankel, c. (ed.) Encyclopedia of business in Today's World , கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா, 2009.
  2. அபௌட்.காம், A Beginner's Guide to Economic Indicators, நவம்பர் 2009ல் பார்க்கப்பட்டது. This was the source of "procyclic," "acyclic," etc., as well as confirmation of "leading," "lagging," etc., and the source of some of the examples.

வெளி இணைப்புகள்[தொகு]