பொது நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூயார்க் பொது நூலக முதன்மைக் கிளையில் வாசிப்பதற்கான பகுதி.

பொது நூலகம் என்பது, பொதுமக்களால் பயன்படுத்தக் கூடியதும், பொதுவாக வரிகள் போன்றவற்றால் கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நடத்தப்படுவதுமான நூலகங்களைக் குறிக்கும். இவ்வகை நூலகங்கள் குடிசார் பணியாளர்களான நூலகர்களாலோ, பிற நூலகத்துறைசார் பணியாளர்களாலோ இயக்கப்படுகின்றன.

பொது நூலகங்கள் ஐந்து பொதுவான இயல்புகளைக் கொண்டவை. முதலாவது, அவை பொது மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணத்தினால் நிதி அளிக்கப்படுகின்றன. அடுத்தது, இவை மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் ஒரு சபையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. குறித்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் இங்குள்ள சேகரங்களைப் பயன்படுத்தலாம். இவற்றைப் பயன்படுத்துவது தன்னார்வ அடிப்படையிலானது. இவை வழங்கும் அடிப்படையான சேவைகளுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை.[1]

உலகிலுள்ள பல நாடுகளிலும் பொது நூலகங்கள் உள்ளன. கல்வியறிவு பெற்ற மக்கள் வாழும் நாடுகளில் பொது நூலகங்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஆய்வு நூலகங்கள், பள்ளி நூலகங்கள் போன்ற சிறப்பு நூலகங்களில் இருந்து பொது நூலகங்கள் வேறுபடுகின்றன. ஏனெனில், குறித்த ஒரு கல்வி நிறுவனம், ஆய்வுச் சமூகம் போன்றவற்றின் தேவைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பொது மக்களின் தகவல் தேவைகளைப் பூர்த்தி செய்வதையே பொது நூலகங்கள் கடமையாகக் கொண்டுள்ளன. பள்ளிக்கு முந்திய கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக குழந்தைகளுக்குக் கதை சொல்லல்; மாணவர்களும், தொழில் வல்லுனர்களும் படிப்பதற்கு வேண்டிய அமைதியான இடவசதிகளை ஏற்படுத்துதல்; வளர்ந்தோரிடையே வாசிப்பதை ஊக்குவிக்க நூல் குழுக்களை ஏற்படுத்தல் போன்ற சேவைகளும் பொது நூலகங்களில் கட்டணம் இன்றி வழங்கப்படுவது உண்டு. வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிப்பதற்காக, பொது நூலகங்கள் நூல்களைக் கடனாக வழங்குவது வழக்கம். இதற்காகக் கடனுதவும் பகுதி பொது நூலகங்களில் இருக்கும். உசாத்துணைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நூல்களை வெளியில் எடுத்துச்செல்ல அனுமதிப்பது இல்லை. அண்மைக் காலத்தில் சில பொது நூலகங்கள் கணினி வசதிகளையும், இணைய வசதிகளையும் பயன்பாட்டாளருக்கு வழங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rubin, Richard E. Foundations of Library and Information Science (3rd ed). 2010. Neal-Schuman Publishers: New York.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நூலகம்&oldid=3381483" இலிருந்து மீள்விக்கப்பட்டது