பையம்பள்ளி
இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் தாலுகா பையம்பள்ளி என்ற கிராமம் உள்ளது. இது பர்கூரில் இருந்து கிழக்கில் 5 கி. மீ மற்றும் நாட்டறம்பள்ளியில் மேற்கு பக்கமாக 8 கி. மீ தொலைவில் உள்ளது.[1] இப்பகுதியில் அகழ்வாராய்ச்சித் தளமாக இது அறியப்படுகிறது. இது புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலங்களில் உள்ளது.[2] 1964-65 மற்றும் 1967-68 ஆண்டுகளில் ஷிகரிபுர ரங்கநாத ராவ் தலைமையிலான இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் இந்த பிராந்தியத்தில் அகழ்வாய்வுகளை நடத்தியது.[3][4]
திருப்பத்தூர் அருகே உள்ளது பையம்பள்ளி. இங்கு மைய அரசு அகழாய்வு மேற்கொண்டு பல புதிய செய்திகளை வழங்கியுள்ளது. இவ்வகழ்வாய்வு, முதன்முதலாகத் தமிழகத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், அவர்கள் விவசாயம் செய்துள்ளனர் என்பதற்குரிய சான்றாகப் பயிர் வகைகளையும் கண்டடைந்த சிறப்பு பெற்றதாகும்.
மட்கலன்களையும் உபயோகப்படுத்தியுள்ளனர். மேலும், இங்கு கற்கோடாரிகள், அம்மிக்கற்கள், குழவிக்கற்கள், திரிகைக் கற்களும் கிடைத்துள்ளன. இதிலிருந்து, அம்மி, திரிகை முதலான கருவிகளைப் பயன்படுத்தி தானியங்களை அரைத்து உணவாகப் பயன்படுத்தியதையும், தானியங்களில் இருந்து கொட்டைகளைப் பிரித்து எடுக்கும் அறிவையும் பெற்றிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.*6[5]
இங்கு கால்நடைகளின் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இக்கால மக்கள் விவசாயத்தின் பயனறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்குச் சான்றாக கேழ்வரகு (Ragi), பச்சைப்பயிறு (Green Gram), கொள்ளு (Horse Gram) மற்றும் சோளம் போன்ற பயிர் வகைகள் மக்கிய நிலையில் கிடைத்துள்ளன. மேலும், மக்கள் தங்கும் இருப்பிடங்களாக தரைமட்டப் பள்ளங்களும் (Pit Dwelling) வெட்டப்பட்டு, அதன்மேல் புல் வேய்ந்த கூறைகளை அமைத்துக்கொண்டதற்கான அடையாளங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் தரை, தட்டைக் கற்களால் பாவப்பட்டிருந்தன. இவர்கள், வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான புல் வேய்ந்த கூரை வீடுகளில் வசித்தனர் என்பதற்கு அடையாளமாக, மரக்கம்புகள் நடும் குழிகளும் (Post Holes) அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன.[6]
தக்காணத்தில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பர்கள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஈரான் பகுதியில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது. ஆனால், பென்காடு லெவின் போன்றவர்கள், அவர்கள் தென்னிந்தியாவைச் சார்ந்த தொல்குடிகளே என்பர்.*3 இக்கருத்து ஏற்புடையதாகும். தக்காணத்தில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பவர்கள் தொண்டை மண்டலத்திலும் வாழ்ந்துள்ளர். மத்திய அரசு தொல்லியல் துறை மேற்கொண்ட பையம்பள்ளி அகழாய்வில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் புதிய கற்காலத்தின் முடிவும், பெருங் கற்காலத்தின் தொடக்கமும் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. இதனை இங்கு கணப்பட்ட மண்ணடுக்கில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து, மேலடுக்கில் பெருங் கற்காலப் பண்பாட்டு எச்சங்கள் காணப்படுவதும் உறுதி செய்கிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Iron in Ancient Tamilnadu — Paiyampalli" (pdf). National Metallurgical Laboratory. p. 96. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
- ↑ Bhairabi Prasad Sahu (1 January 1988). From Hunters to Breeders: Faunal Background of Early India. Anamika Prakashan. pp. 199–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85150-06-2.
{{cite book}}
: More than one of|ISBN=
and|isbn=
specified (help); More than one of|author=
and|last=
specified (help) - ↑ "Excavations carried out from 1950 to 2011". Archaeological Survey of India Chennai circle. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
- ↑ "Excavations since Independence in Tamil Nadu". Archaeological Survey of India. Archived from the original on 27 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ செல்வராஜ், ச (2015-10-30). "புதிய கற்காலம் – 3". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
- ↑ செல்வராஜ், ச (2015-10-30). "புதிய கற்காலம் – 3". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
- ↑ செல்வராஜ், ச (2015-10-30). "புதிய கற்காலம் – 3". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.