பேச்சு:பல்லுருத்தோற்றம் (உயிரியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லுருத்தோற்றம் (உயிரியல்) உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பல்லுருத்தோற்றம் (உயிரியல்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


திருத்தம் பற்றி[தொகு]

முதல் வரியைக் கீழ்க்காணுமாறு திருத்தலாம் என நினைக்கின்றேன்.

உயிரியலில் பல்லுருத்தோற்றம் (Polymorphism) எனப்படுவது, ஒரு குறிப்பிட்ட இனத்தில் அதன் உறுப்பினர்களிடையே தனிவகைப்பட்ட பல்வேறு தோற்ற அமைப்புகள் காணப்படுதல். அதாவது ஓர் இனத்தின் எண்தொகையில் அல்லது இனத்தொகையில் (population), அல்லது அவ்வினம் வாழும் சேர்ந்திருப்பில் (colony) உள்ள உறுப்பினர்களிடையே, பாலின வேறுபாடுகள் தவிர்த்த, வேறுவகையான, தெளிவாக வரையறுக்கப்பட கூடிய, , தொடரற்ற (discontinous), இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான தோற்றவமைப்புக்கள் காணப்படுதல் ஆகும்

மேலுள்ளபடி முதல் பத்தியை மாற்றவா. முதலில் சுருக்கமாக கருத்தைக் கூறிவிட்டு, சற்று நெடிய வரையறையை அடுத்ததாகத் தரலாம். population என்பது இங்கே சனத்தொகை/மக்கள்தொகை அல்ல. இனத்தொகை அல்லது எண்தொகை (எண்ணிக்கைத்தொகை) என்பது பொருந்து. colony என்பது இங்கு குடியிருப்பு அல்ல. இனத்தின் உறுப்பினர்கள் சேர்ந்துவாழும் சேர்ந்துறையும், சேர்ந்திருப்பு ஆகும். தொடரற்ற என்பது கூட சீர்மாற்றம் அற்ற என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். மாற்றுக் கருத்துகள் இல்லை எனில் முதல் பத்தியை மாற்றுகின்றேன்.

--செல்வா 14:50, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

Population, Colony என்பவற்றிற்கான சரியான பொருத்தமான சொற்கள் எனக்குப் பிடிபடவில்லை. முழுமையாக ஒத்துக்கொள்ள முடியாது இருந்த போதிலும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த சனத்தொகை, குடியிருப்பு என்ற சொற்களைப் பயன்படுத்தினேன். மேலும் இலங்கையில் Bee colony யை தேன்குடி என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது தேன் குடியிருப்பு என்பதையே குறிக்கும் என நினைக்கின்றேன். மேலும், முதல் பந்தியில் மாற்றங்கள் செய்துள்ளேன். பாருங்கள்.--கலை 21:37, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
கலை, சனத்தொகை சரியன்று. bee colony என்பதைத் தேனடை என்றே சொல்வோம். அடைந்திருக்கும் இடம், சேர்ந்திருக்கும் இடம். தேன்குடி என்பது பொருத்தமாகப் படவில்லை தேனீக்குடி என்றாலாவது பொருந்தக்கூடும். பாப்புலேசன் என்பதற்கு இனத்தொகை என்பது பொருந்தலாம் என நினைக்கின்றேன். எண்ணிக்கை என்றும் கூறக் கேட்டுள்ளேன். "புலிகளின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது" (எ.கா:"இந்திய நாட்டின் தேசிய விலங்கினமான புலிகள் எண்ணிக்கை 1,706ஆக அதிகரித்துள்ளது.".) இதே போல இனத்தொகை என்பதும் ஆட்சியில் இருக்கும் சொல். இப்பக்கத்தைப் பார்க்கவும்]. மற்றபடி முதல் பத்தியை மேலே உள்ளவாறு மாற்றலாமா?--செல்வா 02:24, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
  • நான் எழுதியதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கின்றேன். சனத்தொகை சரியென்று நான் சொல்லவில்லை. பொருத்தமில்லை எனத் தோன்றினாலும், வேறு சொற்கள் கிடைக்காததால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தினேன் என்றுதான் சொன்னேன். மேலும், நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி (எண்தொகையில் அல்லது இனத்தொகையில் (population)) என்று நேற்றே மாற்றிவிட்டிருந்தேன். கவனிக்கவில்லையா?
  • தேனடை என்பது இலங்கையிலும் பயன்படுத்தப்படும் சொல்தான். ஆனால் தேனீக்களால் கட்டப்பட்டிருக்கும் அந்த கூட்டைத்தான் (honeycomb) தேனடை என்று சொல்வார்கள். தேனீக்களில் இராணீ, வேலையாள், சோம்பேறிகள் என்ற ஒரு குறிப்பிட்ட கூட்டத்தைக் குறிக்க தேனடை பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் தேன்குடி என்பது இலங்கையில் பேச்சுவழக்கில் இருக்கும் சொல். நான் அப்படி கேள்விப்பட்டிருக்கிறேன் என்றுதான் சொன்னேன். அது சரியான சொல் என்று நான் குறிப்பிடவில்லை. மேலும், அதனையும் நேற்றே (சேர்ந்திருப்பில் அல்லது சமூகத்தில் (colony)) என்று மாற்றிவிட்டேன்.
  • //முதலில் சுருக்கமாக கருத்தைக் கூறிவிட்டு, சற்று நெடிய வரையறையை அடுத்ததாகத் தரலாம்.// மேலும், நீங்கள் கூறியபடி நேற்றே முதல் பத்தியில் மாற்றங்களைச் செய்துவிட்டு, மேலுள்ள எனது பதிலில் அதுபற்றி சொல்லியிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லையா தெரியவில்லை.
  • Discontinous என்பதற்கு சீர்மாற்றம் அற்ற என்பதை விட 'தொடரற்ற' என்பது, இலகுவாக இருந்தமையால், அதனை அப்படியே விட்டிருந்தேன். மற்றபடி, நீங்கள் சொல்லியிருந்த மாற்றங்கள் ஏற்கனவே செய்துவிட்டிருந்தேன்.--கலை 08:59, 5 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

சமநுகம், இதரநுகம் என்றால் என்ன?[தொகு]

சில சொல்லாட்சிகளை விளக்க வேண்டியிருக்குமோ? நுகம் என்பது சரியான சொல்லாட்சியா? இங்கே என்ன பொருளில் ஆளப்பட்டுளது என்று புரியவில்லை. --செல்வா 02:08, 1 பெப்ரவரி 2012 (UTC)

பல்லுருத்தோற்றத்துக்கான சொடுக்கி என்னும் பகுதியில் வரும் "இருமடிய நிலையில் உள்ள மனிதரில் XX சமநுகம் ஆணையும், XY இதரநுகம் பெண்ணையும் உருவாக்குகின்றது. " என்பதன் பொருள் என்ன?--செல்வா 02:11, 1 பெப்ரவரி 2012 (UTC)

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இந்த இடத்தில் சமநுகம், இதரநுகம் என்ற சொற்கள் பொருத்தமற்றவை. அவற்றை மாற்றி விடுகின்றேன். நுகம் என்பது சரியான சொல்லாட்சியா எனத் தெரியவில்லை. Zygote என்பதை எப்படிக் குறிப்பிடுவது? நாம் படித்தது நுகம் என்றே. அத்துடன் Homozygote, heterozygote என்ற சொற்களுக்கு தமிழ் விக்சனரியிலும், மரபியலில், சமநுகம், இதரநுகம் என்ற சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் படித்ததும் அவ்வாறே. --கலை 11:06, 2 பெப்ரவரி 2012 (UTC)

கருக்கட்டப்பட்ட முட்டை, நுகம் எனப்படும் என நானும் படித்திருக்கின்றேன்.--சஞ்சீவி சிவகுமார் 11:24, 2 பெப்ரவரி 2012 (UTC)

ஆம். அதுவேதான். நுகம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை ஆக்கவும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன். கருக்கட்டல் மூலம் ஆண், பெண் புணரிகள் இணைந்து உருவாகும் முதற்கலம் நுகம் எனப்படுகின்றது. நுகத்திற்கு வேறு சொல் உள்ளதா என்பது தெரியவில்லை. சில இடங்களில் கருவணு என இருந்ததாக நினைவு. ஆனால் பொருத்தமான சொல்லா எனத் தெரியவில்லை. --கலை 12:29, 2 பெப்ரவரி 2012 (UTC)

கலை, சில ஆண்டுகளுக்கு முன்பு இது பற்றி பேச்சு:உயிரணு என்னும் பக்கத்தில் விரிவாக உரையாடியிருக்கின்றோம். சைகான் (zygon) என்றால் கிரேக்க மொழியில் நுகம் (yoke) . இதிலிருந்து தமிழில் நுகம் என ஆக்கியுள்ளனர் என நினைக்கின்றேன். yoke-நுகம் என்பது பூட்டுவது என்றாகும். இது ஓரளவுக்குப் பொருந்தும் (கிரேக்கச்சொல் சுட்டும் பொருளோடு தொடர்பு படுத்தினால்). ஆனால் Zygote என்பதற்கு அ. கி. மூர்த்தியின் அறிவியல் அகராதி "கருவணு: முட்டையும் சிதலும் சேர்வதால் உண்டாகும் அணு" என்று கொடுத்துள்ளார்கள். புணரியணு என்றும் ஒரு சொல் கருவணுவுக்கு ஈடாகத் தருகிறார்கள் (பிற இடங்களிலே). "முளையணு, புணரணு, சினையணு, துளிரணு என்றும் கூறலாம், ஆனால் கருவணு என்பதே நன்றாக இருப்பதாக நினைக்கின்றேன்." என்று திசம்பர் 2008 இல் நிகழ்ந்த உரையாடலில் கூறினேன்.

Homozygote என்பதற்கு ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, "A diploid individual that has identical alleles at one or more genetic loci." (OED) என்கிறது. எனவே இது ஒத்த இணைமாற்றுக் கருவணு என்னும் பொருள் தருகின்றது. அ.கி மூர்த்தியின் அகராதி allele என்பதற்கு "இணைமாற்று" என்கிறது. அதாவது அல்லீல் என்பது மரபணுவின் ஒரு மாற்றுரு (இணையாகக் கருதப்படும் மாற்றுரு). எனவே ஒத்தினக் கருவணு என்பது Homozygote ஆகக் கருதலாம். heterozygote என்பது கலப்பினக் கருவணு. zygosis என்பதைப் புணர்ச்சி என்றோ கருப்புணர்ச்சி என்றோ கருவொன்றல் என்றோ கூறலாம். நுகம் என்பது இலங்கையில் உள்ள ஆட்சி போல் தெரிவதால், இருவேறு சொற்கள் தர வேண்டியிருக்கலாம் (கருவணு, நுகம்). கருவணு என்பது பொருள் நன்கு சுட்டுவதாக எனக்குத் தோன்றுகின்றது. இங்கே homo,hetero என்பதை, ஓரின (அல்லது ஒத்தின), கலப்பின என்று கூறலாம் என்று நினைக்கின்றேன்.--செல்வா 12:45, 2 பெப்ரவரி 2012 (UTC)
அப்படியானால் Zygote இற்கு கருவணு, நுகம் ஆகிய இரு சொற்களையும் பயன்படுத்தலாம். கருவணு என்ற தலைப்பை கட்டுரைத் தலைப்பாகக் கொள்ளலாம். நுகம் என்ற சொல்லும் ஏற்றுக் கொள்ளப்படுவதனால், Homozygote, Heterozygote இற்கு சமநுகம், இதரநுகமும் ஏற்றுக் கொள்ளப்படலாம்தானே?
//புணரியணு என்றும் ஒரு சொல் கருவணுவுக்கு ஈடாகத் தருகிறார்கள் (பிற இடங்களிலே).// இது பொருத்தமற்றதாகவே தோன்றுகின்றது. காரணம். முட்டை, விந்து உயிரணுக்களே புணரிகள். அவை இரண்டும் இணைந்து ஒருவாகும் உயிரணுவே Zygote. எனவே Zygote ஐ புணரியணு என்பது பொருத்தமில்லை என்றே தோன்றுகின்றது. முட்டை, விந்து கருக்கட்டலால் உருவாதலினால் கருவணு என்பது பொருந்துகின்றது.
Allele என்பதனை எதிருருக்கள் என்று குறித்து ஏற்கனவே கட்டுரை ஆக்கியுள்ளேன். ஒரு நிறப்புரியின் குறிப்பிட்ட ஒரு மரபணு இருக்கையில் அமைந்திருக்கக் கூடிய எதிரான (அல்லது ஒன்றுக்கொன்று மாற்றாகக் கருதப்படக் கூடிய) மரபணு வடிவங்கள்/உருவங்கள் என்பதனால் எதிருரு என்ற சொல்லும் சரியாகவே தோன்றுகின்றது.
கலை, நுகம் என்பது பொருத்தமாக நீங்கள் நினைத்தாலும் சமநுகம், இதரநுகம் பொருந்தாததாகவே நினைக்கின்றேன். ஏனெனில் இதர என்றால் "etc." அது போன்ற பிற பல என்பதாகப் பொருள் தரும். சமநுகம் என்பதும் பொருத்தம் இல்லை. சமம் என்பது ஈடு ஒன்றுக்கு ஒன்று ஈடு என்னும் பொருள். ஒரே வகை என்னும் பொருள் தராது. அல்லீல் என்பதற்கு எதிருரு என்பதும் சற்று நெருடுகின்றது. காரணம் எதிர் என்றால் opposite, oppose என்பது போன்ற பொருள் தருவது. மாற்று என்பது alternative என்னும் பொருள் தருவது. எண்ணிப்பாருங்கள். மற்றவர்களும் கருதிப்பார்க்க வேண்டும். புணிரியணு என்பது புணர்ந்தகூட்டு என்றும் பொருள்தரும் (இதனைப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை, பொருள் சொல்கின்றேன்; புணரும் அணு என்றும் பொருள் தருவதால் குழப்பம் தரலாம்). ஒத்தின அல்லது ஓரினக் கருவணு, கலப்பினக் கருவணு என்பன என் தேர்வுகள் (நுகமமென்று பயன்படுத்தினாலும், ஓரின நுகம் கலப்பின நுகம் என்பது பொருந்தும்)--செல்வா 14:46, 2 பெப்ரவரி 2012 (UTC)

Homozygote, Heterozygote இற்கு ஒத்தினக் கருவணு, கலப்பினக் கருவணு எனப் பயன்படுத்தலாம். அடைப்புக்குறிக்குள் சமநுகம்/ஓரின நுகம், இதரநுகம்/கலப்பின நுகம் என்பவற்றைக் கொடுக்கலாம். அவ்வகையாக படித்தவர்கள் அடையாளம் காண இலகுவாக இருக்கும். புணரும் அணுக்கள் என்றும் பொருள் வருவதனால், புணரியணு என்பது நிச்சயம் குழப்பம் தருவதாகவே தோன்றுகின்றது. எனவே அதனைத் தவிர்க்கலாம்.
இந்த உரையாடலை விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/உயிரியல் பக்கத்திற்கு நகர்த்தியுள்ளேன்.