பேச்சு:தொன்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg தொன்மா என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
DNA-structure-and-bases.png தொன்மா உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
Exquisite-kfind.png தொன்மா எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


செல்வா, தொன்மா - சொல் நன்று. இச்சொல் ஏற்கனவே எங்கும் ஆளப்பட்டுள்ளதா? நீங்கள் புதிதாக ஆளும் சொற்களைப் பற்றிய குறிப்புகளை பேச்சுப் பக்கத்தில் இட்டு வைத்தால் அது ஒரு வரலாற்று, கலைச்சொல் ஆவணமாக இருக்கும். நன்றி--ரவி 08:27, 23 மார்ச் 2007 (UTC)

இல்லை. இது நான் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக பயன்படுத்திவரும் ஒரு சொல். என் தங்கையின் குழந்தைக்கு தொன்மா என்றால் தான் என்ன என்று தெரியும் ஒரு காலத்தில்.மிக அருமையான தொன்மா பொம்மை ஒன்றை வாங்கி பரிசாக அளித்ததின் விளைவாக அது அவளுக்கு அன்றுமுதல் தொன்மா. கொடும்பல்லி முதலிய பொருந்தாததாக எண்ணுகிறேன். உடல் அமைப்பில் ஊர்வன-பல்லி முதலானவற்றின் இடுப்பு போலும், பறவைகளின் இடுப்பு போலும் அமைந்துள்ள விலங்குகள். இதுபற்றியே இவை டயன்சோர் என ஆங்கிலத்தில் பெயர் கொண்டுள்ளது. தமிழிலும், டயன்சோர் என்பதற்கு வழிமாற்று தரவேண்டும்.--செல்வா 12:20, 23 மார்ச் 2007 (UTC)

செல்வா, தொன்மா உட்பட டைனோசருக்கு தமிழில் வேறு எங்கும் தமிழ்ப் பெயர்கள் வழங்கப்பட்டு இருந்தால் அது பற்றிய குறிப்புகளைத் (குறிப்புக்காக மட்டுமே) தர முடியுமா? உங்களைத் தவிர வேறு எவரும் பயன்படுத்தி இருக்கின்றனரா என்றும் அறிய ஆவல். பொதுவாக, நம் நாட்டில் இருந்திராத இருக்க இயலாத பென்குயின் போன்ற விலங்குகள், மரஞ்செடிக் கொடிகளின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது சரியா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. பலரும் பல மாதிரி மொழிபெயர்க்க இயலும் அல்லவா? இதற்கு சீர்தரம் பேணுவது எப்படி? இல்லை. இது குறித்து தமிழில் முன்னோடியாக எழுதுபவர்களின் மொழிபெயர்ப்புகள் நிலைத்து விடுகின்றனவா? எடுத்துக்காட்டுக்கு, ஆந்திரா , வட மாநிலங்களில் tomato என்றே அழைக்கிறார்கள். ஆனால். அது நமக்கு எப்படித் தக்காளி ஆனது? அதே வேளை காரட், பீன்ஸ் போன்றவை அதே பெயரில் வழங்கி வருகின்றன. இது போன்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள வழிமுறை, நிலைப்பாடுகள் குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 15:09, 23 மார்ச் 2007 (UTC)

ரவி, தொன்மாவுக்குப் பிற பெயர்கள் இருக்கலாம், எனக்குத் தெரியாது. தமிழ் டாட் நெட்டில் எழுதும்பொழுது மணிவண்ணன் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெயர் ஆண்டார் என்று நினைக்கிறேன். தேடிப்பார்த்துச் சொல்கிறேன். கிரேக்கம் போன்ற தொன்மொழிதான் தமிழும். இது வளமான மொழி. இதில் நமக்கு ஏற்றார்போல சொற்களை ஆக்கி ஆள்வதில் தவறில்லை. நம்மூர் (அல்லது கிழக்கே) கிடைக்கும் பலாப்பழத்துக்கு ஆங்கேலேயர் பலா என்றா சொல்கின்றான்? சில சொற்கள் நாம் அப்படியே எடுத்தாள்வதில் தவறில்லை, எல்லாச் சொற்களும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது தேவை இல்லாதது. இக்காலத்தில் (அதுவும் கணினி - தேடுபொறிகள் உள்ள காலத்தில்), நமக்கு ஏற்ற முறையில் ஆக்கிக்கொள்வதே சிறந்தது. அறிவியல் பெயர் என்பதைக் கூட இன்று ஜெர்மனியர் வேறுவிதமாக தங்கள் மொழியில் எழுதுகிறார்க்கள் என நினைக்கிறேன். நான் triceratops என்பதை முக்கொம்பன் (முக்கொம்பன் தொன்மா) என்றுதான் எழுத இருக்கின்றேன். ஐங்கொம்பன் தொன்மா என்ன என்று கண்டுபிடியுங்கள். ஆங்கிலப்பெயரையும், அதன் தமிழ் எழுத்துப்பெயர்ப்பையும் தருவது முறை என்று நினைக்கின்றேன். இவையெல்லாம் விரிக்கின் மிக விரியும் ரவி. --செல்வா 15:56, 23 மார்ச் 2007 (UTC)

விளக்கத்துக்கு நன்றி, செல்வா. உங்களுக்கு இயன்ற போது உங்கள் வலைப்பதிவில் இது குறித்து எழுதினால் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி--ரவி 15:59, 23 மார்ச் 2007 (UTC)

நல்ல கட்டுரை. நன்றி செல்வா. Mayooranathan 09:03, 23 மார்ச் 2007 (UTC)
நன்றி மயூரநாதன். --செல்வா 12:20, 23 மார்ச் 2007 (UTC)

போஞ்சி எனப்படுவது பீன்ஸ் தானே? தொன்மா நல்ல சொல். ஆனால் சொல் விளக்கத்தைக் கட்டுரையிலிருந்து சற்று வேறுபடுத்தி அமைத்தால் என்ன? தனிப்பிரிவாக அல்லது ஒரு பெட்டியினுள் வருவது போல அமைப்பது தொன்மா பற்றி வாசிக்கும்போது சொல்விளக்கம் தகவல்களிடையில் வந்து குழப்பாமலிருப்பதோடு சொல்விளக்கம் தனித்திருப்பதால் போதிய கவனமும் பெறுமென எண்ணுகிறேன். கோபி 17:45, 23 மார்ச் 2007 (UTC)

இது போல் புதுச்சொற்களுக்கு கோபி சொல்வது போல் தனிப் பகுதியாக கட்டுரைக்குள் தரலாம். அதே வேளை பட்டாம்பூச்சியில் செதிலிறகிகள் குறித்த சொல் விளக்கம் கட்டுரையின் போக்கிலேயே இருந்தது பட்டாம்பூச்சிகளை மேலும் இலகுவாகப் புரிந்து கொள்ளத் தக்கதாக இருந்தது. எனவே, மொழிபெயர்ப்புச்சொல்லாக இருந்தால் கட்டுரைப் போக்கில் தரலாம். புதுச்சொல் என்றால் தனிக்குறிப்பாகத் தரலாம். --ரவி 18:51, 23 மார்ச் 2007 (UTC)

தொன்மா சொற்கள்[தொகு]

ரவி, ஒருமுறை முனைவர் மணிவண்னனுக்கும், தமிழ் டாட் நெட்டின் பாலா பிள்ளைக்கும் கடும் சொற்போராட்டம் ஏற்பட்டபொழுது துணுச்சரைகள் என்னும் சொல்லை டைனசோருக்கு பயன்படுத்தினார்கள். ஏன் எதனால் அப்பெயர் ஏற்பட்டது என்பதனை அறியேன். கட்டுரை ஏதும் ஆக்கியதாகவும் அறியேன். உரையாடலின் ஒரு பகுதியை இங்கே] பார்க்கலாம். வேறு ஏதேனும் சொற்கள் யாரும் ஆண்டிருந்தாலும் தொகுத்து இங்கே இடுவது பொருளுடையதாக இருக்கும்.

புதுச் சொற்களுக்கு பட்டிகட்டி தரலாம். எப்படிச்செய்தால் நன்றாக இருக்குமோ அப்படியே செய்யுங்கள். கனகும் உரைத்திருத்தம் செய்வதில் நல்ல தேர்ச்சியுடையவர். அவரும் பங்களித்தால் நன்றாக இருக்கும். --செல்வா 21:13, 23 மார்ச் 2007 (UTC)

செல்வா, அவர்கள் பாவித்த சொல் துணுசாரைகள்.--Kanags 22:52, 23 மார்ச் 2007 (UTC)
நன்றி கனகு. இச்சொல்லை நான் மேலே குறித்துள்ளேன். பிற சொற்கள் இருப்பதை அறிந்தால் தெரிவியுங்கள். நன்றி.--செல்வா 23:29, 23 மார்ச் 2007 (UTC)

dinosaurs-டினோசர்-தினோசர்-துனோசார்-துணுச்சாரை - என்பது போல் ஒலிப்பு நெருக்கம், தொடர்பு வருவது தற்செயலா? இல்லை, வேண்டி செய்யப்பட்டதோ? எப்படியோ, தகவலுக்கு நன்றி--ரவி 23:54, 23 மார்ச் 2007 (UTC)

இராம.கி கொடுத்திருப்பார் என நினைக்கிறேன். அங்கு தேடிப்பார்க்கலாம். --செல்வா 00:15, 24 மார்ச் 2007 (UTC)
இங்கு இருக்கின்றது மணிவண்னனுடையது --செல்வா 00:33, 24 மார்ச் 2007 (UTC)
துணுச்சாரை dinasaur என்பதன் நேரடி பெயர்ப்பாக இருக்கலாம். நல்ல சொல். ஆனால் இது சாரை என்ற பாம்பு வகையோடு குழப்புவதாக அமையாதா?--Kanags 00:42, 24 மார்ச் 2007 (UTC)
சாரை என்பது reptile என்பதோடு தொடர்புபடுத்தி யிருப்பார் எனத் தோன்றுகின்றது. இர்ரம.கி யின் அலைப்பதிவில் தேடினேன் கிடைக்கவில்லை. இது 1999ல் நடந்த பேச்சு. அப்பொழுது வலைப்பதிவெல்லாம் கிடையாது. --செல்வா 00:51, 24 மார்ச் 2007 (UTC)

தமிழ்.நெட் இல் மணி மணிவண்ணனின் கருத்துகள்[தொகு]

(திஸ்கியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றியது) To tamil@tamil.net From "Mani M. Manivannan" <manim@ix.***> (by way of Bala Pillai <bala@tamil.net>) Date Thu, 26 Aug 1999 14:37:43 +1000 கணினிப் பல்கலைக்கழகம் ("computer university") என்ற இழையில் பாலா பிள்ளை தனக்கு மிகவும் பிடித்த கூற்று ஒன்றை மீண்டும் எழுதினார்:

"How did smallish fleet-footed mammals (சீக்கரநடை பாலுட்டிகள்) outlive and overtake the large dinosaurs (துணுசரைகள்) which became extinct, in history? What was the glue that made the mammals collectively more powerful?"

இந்தக் கூற்றின் தொடர்பில் அவர் தமிழ் இணைய உறுப்பினர்களுக்கு விடுத்த அறைகூவலுக்குத் தமிழ் இணைய உறுப்பினர்களே பதிலளிப்பார்கள் என நம்புகிறேன். ஆனால், மந்த நடைத் துணுச்சாரைகளைக் குறுநடைப் பாலூட்டிகள் வென்றன என்ற அவர் கூற்று சரியா என்ற எண்ணம் எழுகிறது.

கற்பொடிக்காலத்தின் (Cretaceous Period) இறுதியில் பேரழிவு ஏற்பட்டது உண்மைதான். பல உயிரினங்கள் அடியோடு அழிந்து போயின இக்காலத்தின் இறுதியில். ஐம்பது பவுண்டு எடைக்கு மேற்பட்டிருந்த பல உயிரினங்கள் அழிந்தன. கடல்வாழ் உயிரினங்களும் அவிந்தன. ஆனால் எல்லா உயிரினங்களும் ஒரே அளவில் அடிபடவில்லை. நீரினங்களிலும், கடல்வாழ் இனங்கள் அழிந்த அளவுக்கு நந்நீரினங்கள் (freshwater species) அழியவில்லை. வடகோடியில் (northern/polar plants) வாழ்ந்த செடியினங்கள் தப்பித்தன. நிலநடுக்கோட்டருகிருந்த வேனிற்செடியினங்கள் (tropical plants) வாடின. இறகுச்சாரைகள் (pterosaurs) அழிந்தன. பறவைகள் அழியவில்லை. பல பாலூட்டிகள் தப்பித்தன. ஆனால் பல வயிற்றுப்பைப்பாலூட்டிகள் (marsupials) பிழைக்கவில்லை. துணுச்சாரைகள் அழிந்தன. ஆனால் முதலைகள் பிழைத்தன. அளவில் மிகச்சிறிதாக இருந்த பாலூட்டிகளும், சிறு ஓணானினங்களும் (lizards) பிழைத்தன. ஆனால் சின்னஞ்சிறு துணுச்சாரைகளும் உயிரிழந்தன. இந்தப் பேரழிவு எதனால் ஏற்பட்டது? சிலர் நம்பிக்கைப்படி உயிர்க்காற்றின் (oxygen) அளவு காற்றுமண்டலத்தில் (atmosphere) கூடியதால், மந்தநடைத் துணுச்சாரைகள் தளர, வெங்குருதிக் குறுநடைப் பாலூட்டிகள் (warm-blooded fleet-footed mammals) ஓங்கின. இதற்கு ஆதாரம் உள்ளதா? சில ஆதாரங்களின்படி கற்பொடிக்காலத்தில் உயிர்க்காற்றின் அளவு 30% இருந்ததாம் (இன்று 21%). அது நம்பமுடியாத அளவு - அந்த அளவில் பல உயிரினங்கள், ஏன், உலகில் இருந்த பல பொருட்களே வெந்து தணிந்து சாம்பலாகியிருக்கும்.

சிலர் கூற்றின்படி, குறுநடைப் பாலூட்டிகள் துணுச்சாரை முட்டைகளை வேட்டையாடி அழித்தன. எல்லா துணுச்சாரைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பனவில்லை. மேலும், வேட்டையாடும் இனங்களும் தங்கள் இரைகள் அழிந்தால் விரைவில் அழியும். அது மட்டுமல்லாமல், குறுநடைப் பாலூட்டிகள் ஏனைய உயிரினங்களையுமா அழித்தன என்ற கேள்வியும் எழுகிறது.

வெப்பநிலை கூடியதால், துணுச்சாரை விந்துக்கள் குறைந்து அவை மலடாயின என்று கூறுவாரும் உண்டு. அல்லது, அதனால், துணுச்சாரைக் குஞ்சுகள் எல்லாமே ஒரே பாலினமாகப் (same gender) பொரித்தன என்பாரும் உண்டு. தளிரகவினையினால் (செடிவீட்டுச்செயல், green-house effect) கரியமிலக்காற்றின் அளவு கூடி, வெப்பநிலை கூடியிருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர் சிலர் கருதுகின்றனர். மணி மு. மணிவண்ணன் நூவர்க், கலி., அ.கூ.நா. --Kanags 02:07, 24 மார்ச் 2007 (UTC)

தொன்மா சரியான பெயரா?[தொகு]

இக்கட்டுரை எழுதப்பட்டு பல மாதங்கள் ஆன போதும், நான் இங்கு புதிய பயனர் என்பதால் இக்கேள்வியை எழுப்புகிறேன்.

டைனொசர்களை "தொன்மா" எனப்பெயரிட்டது சரியா? தொன்மா என்பது பழங்காலத்து விலங்கினங்களைப் பொதுவாக குறிப்பதற்கு ஏதுவாக இருக்கும். "Prehistoric Animals" என்பதற்கு ஒத்த சொல்லாக பயன்படுத்தலாம். en:Plesiosauria போன்றவை கூட தொன்மாக்கள்தாம்.

--Mojosaurus 14:33, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

தொன்மா என்னும் சொல் இங்கு டைனொசோர் என்னும் சொல்லுக்கு இணையாக ஆளபட்டுள்ளது. டைனசோர் என்னும் சொல்லின் பொருளும் ஆங்கிலத்திலேயும் பொருந்துவதல்ல. எல்லா டைனொசோரும் "கொடிய, அச்சம்மூட்டும், பெரிய" விலங்குகள் அல்ல (δεινός deinos என்றால் “கொடிய” “அச்சமூட்டும்”, “பெரிய” என்று பொருள்படும்);. அதே போல எல்லா விலங்குகளும் பல்லிகளும் அல்ல. இன்றுமுள்ள முதலை முதலான விலங்குகளும் டைனசோர் எனலாம். முதலை என்னும் சொல்லில் உள்ள முதல் என்னும் சொல், தொன் முதும் விலங்குகளில் ஒன்று என்பதைக் குறிப்பது, ஆனால் அதுதான் முதல் விலங்கு என்பது பொருள் அல்ல. அது போலவே தொன்மா என்பதும் ஒரு குறிப்புச் சொல். எல்லா தொன்மையான விலங்குகளும் தொன்மா என்று அழைக்கப்படுவதில்லை என்று கட்டுரையிலேயே குறித்தும் உள்ளேன். "Prehistoric Animals" என்னும் சொல் குறிப்பிடுவதை "வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள்" எனலாம். "Prehistoric" என்பது குழப்பம் ஊட்டுவது. எல்லாமே வரலாறுதான், ஆனால் பொதுவாக Prehistory என்னும் சொல் மாந்தர்களின் எழுத்து வடிவில் உள்ள வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்தைக் குறிக்கும் (சற்றேறக்குறைய 10,000 ஆண்டுகள்). ஆனால் உயிரியல் வரலாற்றில் தொன்மாக்கள் வாழ்ந்த காலத்தையும் குறிக்கும். ஆங்கில விக்கியில், en:Prehistory என்னும் கட்டுரையில் "Prehistory can be said to date back to the beginning of the universe itself, although the term is most often used to describe periods when there was life on Earth; dinosaurs can be described as prehistoric animals and cavemen are described as prehistoric people. " (அடிக்கோடு நான் இடது) என்று குறித்துள்ளதையும் பார்க்கவும். எனவே சொல் சரியான சொல்தான் என்பது என் கருத்து.--செல்வா 20:53, 31 ஆகஸ்ட் 2008 (UTC)


Prehistoric animals குழப்பம் பற்றி ஒப்புக்கொள்கிறேன். முதலை என்பது "முதல்விலங்கு"ஆ அல்லது"மூழ் + தலை" என்பதன் திரிபா? --Mojosaurus 03:24, 1 செப்டெம்பர் 2008 (UTC)
சீழ்+ தலை சாத்தனார் சீத்தலைச்சாத்தனார் என மருவியது போல், மூழ்தலை என்பது மூதலையாக மருவி, பின்பு முதலையாக மருவியிருக்கக்கூடும். முதலை எனும் சொல்லை பழைய இலக்கியங்களில் எங்கு முதலில் காணலாம்? --Mojosaurus 06:19, 1 செப்டெம்பர் 2008 (UTC)

முதலாவது சீத்தலைச் சாத்தனார் என்னும் பெயரில் உள்ள சீத்தலை என்பதை சீழ்+தலை என்று பிரிப்பது தவறு. சீழ்+தலை = சீழ்த்தலை என்றாகும். கீழ்+கணக்கு = கீழ்க்கணக்கு என்றாகும். எழுத்தாணி குத்தி தலையில் புண் ஏற்பட்டது என்பதெல்லாம் கற்பனைக் கதை - இதெல்லாம் சரியென்று நல்லறிஞர்கள் யாரும் கூறக்கேட்டதில்லை. தமிழில் சீத்தல் என்றால் "சீக்குதல், சீவுதல், தூய்தாக்குதல் , நீக்கல், செப்பம் பண்ணுதல்" என்னும் பொருள்களைக் கழக தமிழ் அகராதி தருகின்றது. எனவேஎ தெளிவாகக் சிந்திக்கும் தலையை உடையவர் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், இதுதான் பொருள் என்று நான் கூறவில்லை. சீழ் + தலை என்பது சரியல்ல. சீ என்றால் சீழ் என்றும் பொருள் உண்டு, ஆகவே சீத்தலை என்பது சீ (சீழ்)+தலை என்று பொருள் கொள்ளலாம் என்றாலும், சீ என்னும் சொல்லுக்கு 21 பொருள்கள் கழகத்தமிழ் அகராதி தருகின்றது. அவற்றுள். சிறப்பு குறிக்கும் அடைமொழி, ஒளி, விடம் (நஞ்சு), உறக்கம், ஸ்ரீ, சீ என்னும் ஏவல் என்று பற்பல பொருட்கள் தந்துள்ளார்கள். எனவே புண்ணின் சீழ் என்னும் பொருள்படும் சீ என்பதுதான் அங்கு உள்ளது என்று கொள்ள எந்த அடிப்படியும் இருப்பதாக அறியேன். முதலை என்பது மூழ்+தலை என்றாகாது. மூழ்+தலை = மூழ்த்தலை என்றாகும் (முதல் எழுத்து உகரம் நெடிலாக இருக்கவேண்டும்). முதலை என்னும் சொல் முதன் முதல் தமிழில் எப்பொழுது ஆண்டார்கள் என்னும் செய்தி அறியேன். ஆனால் சங்க இலக்கியத்தில் கட்டாயம் இருக்கும். சான்று கிடைத்தால் இங்கு இடுகின்றேன்.--செல்வா 15:53, 1 செப்டெம்பர் 2008 (UTC)

நன்றி செல்வா. இதுவரை தெரியாத விடயஙள். சீழ் கதை செவிவழிச்செய்தி மட்டுமே. உண்மையான பொருள் தெரிந்ததில் மகிழ்ச்சி. --Mojosaurus 17:18, 1 செப்டெம்பர் 2008 (UTC)

சங்க இலக்கியத்தில் பல இடங்களில் முதலை என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஓர் எடுத்துக்காட்டுக்கு, ஐங்குறுநூறு 41 ஆவது பாடலின் முதல் வரியைச் சுட்டுகின்றேன்: தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு என்கிறது. பார்ப்பு என்பது, சில விலங்குகளின் குட்டிகளின் பொதுப்பெயர், இங்கு முதலையின் குட்டியைக் குறிக்கின்றது. முதலை தன் குட்டிகளை உண்ணும் என்று இப்பாடல் கூறுகின்றது . இங்கேயும் இப்படி முதலை தன் குட்டிகளை உண்ணும் பழக்கம் உடையது என்கிறது. இங்கும் இச்செய்தி கூறப்படுகின்றது. என்னென்ன வகையான முதலைகள் இப்படிப்பட்ட பழக்கங்கள் கொண்டுள்ளன என்று தெரியவில்லை.

--செல்வா 20:21, 1 செப்டெம்பர் 2008 (UTC)

தொன்மாக்களின் சிறப்பான உடலமைப்புகள்[தொகு]

இப்பகுதியில் "இன்றுவரை நிகழ்ந்துள்ள எராளமான கண்டுபிடிப்புகளை கணக்கில் கொண்டால் எல்லாத் தொன்மாக்களுக்கும் பொருந்தி வரும் பொது அமைப்புகள் அரிதாகிவந்தாலும்," என எழுதப்பட்டுள்ளது. இதற்கான பொருள் என்ன?

டைனொசர்கள் எலும்பமைப்பைப் பொருத்து இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன - en:Saurischia பல்லிஇடை கொண்டவை, மற்றும் en:Ornithischia பறவை இடை கொண்டவை.

மற்றும், ஆர்க்கியோசோர் என்ற வகை தவறு. ஆர்க்கோசார்(archosaur), அதாவது, ஆளும் ஊர்வன(ruling reptiles) என்பதே சரி. இது எனது முதல் நாள் என்பதால், கட்டுரையை நேரடியாக மாற்றவில்லை. பேச்சு பகுதியில் எழுதியுள்ளேன். - --Mojosaurus 15:19, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

  • எல்லா தொன்மாக்களுக்கும் பொருந்திவருமாறு பொது உடலமைப்புகள் இல்லை என்பது கருத்து. ஒரு சில உடலமைப்புகள் ஒரு சில வகை தொன்மாக்களுக்குப் பொருந்தினாலும் அவை பிறவற்றுக்குப் பொருந்துவன அல்ல.
  • ஆர்க்கொசோர் என்பது மண்டை ஓட்டில்இரட்டைக் குழி உள்ள விலங்குகள். இவை பெரும்பாலும் பல்வேறு வாயை பெரிதாக திறக்கவல்ல ஊர்வன வகைகளும் பறவைகளும் ஆகும். இவ்விரட்டைக் குழிகளும் ஒன்று கண்ணுக்கும் மேலாகவும் ஒன்று கண்ணுக்கு கீழாகவும் உள்ளன. இந்த இரட்டைக் குழிகளை diaspid என்கிறார்கள். ஆனால் டயஸ்பிடு என்பது இரட்டை வளைவு என்று பொருள்படும் சொல். ஆர்க்கோசோர் என்னும் சொல்லின் நேரடியான மொழிபெயர்ப்புப் பொருள் ஆளும் ஊர்வன என்பதுதான். ஆனால் பறவைகளை ஊர்வன என்று கூறுவது பொருந்தாது. இருகுழிமா எனலாம். இவ்வினங்கள் வகைப்பாடுகள் பற்றி பல கருத்துவேறுபாடுகள் உண்டு.

--செல்வா 22:22, 31 ஆகஸ்ட் 2008 (UTC)


  • இக்கட்டுரையில் தொன்மா எனும் சொல் டைனொசர்களை மட்டுமே குறிப்பதால், அவற்றின் உடலமைப்பு ஓர் பொது வகையாக அல்லாமல் இரு பொதுவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன என்பதை எழுதினால நன்றாக இருக்கும். நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.
  • இருகுழிமா எனும் சொல் நன்றாக உள்ளது. மற்றும், நீங்கள் கூறுவது போல், ஊர்வன எனும் சொல், டினோசர்கள் மற்றும் பறவைகளுக்குப் பொருந்தா. ஆனால், இருகுழிமா எனும் சொல்லை பயன்படுத்துதல் சரியல்ல. anapsid, eurapsid போன்றவை கூட சாராப்சிடா(sauropsida) வகையைச் சேர்ந்தவையே.

--Mojosaurus 03:13, 1 செப்டெம்பர் 2008 (UTC)

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஈஷ்வர். கட்டாயம் தொன்மாக்களின் இருபிரிவுகள் பற்றிக் கூறுதல் வேண்டும். பறவை இடுப்பெலும்பு வகை, ஊர்வன இடுப்பெலும்பு வகை முதலியவற்றைக் குறித்தல் வேண்டும். இக்கட்டுரை வெகுவாக விரிவு படுத்த வேண்டியது. தொன்மாக்கள் பற்றி நிறைய குறிப்புகளைத் தொகுத்து வைத்துள்ளேன், பல நூல்களும் என்னிடம் உள்ளன, ஆனால் இன்னும் இங்கு விரித்து எழுதவில்லை. செய்வோம் :) --செல்வா 16:00, 1 செப்டெம்பர் 2008 (UTC)

கட்டாயம் செய்வோம் செல்வா. --Mojosaurus 17:21, 1 செப்டெம்பர் 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொன்மா&oldid=2332697" இருந்து மீள்விக்கப்பட்டது