பேச்சு:தி. வே. கோபாலையர்
Untitled
[தொகு]தமிழ்நூற்கடல் தி.வே.கோபாலையர் (22.01.1926 - 01.04.2007)
தமிழ்நூற்கடல் என அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்ட பண்டித, வித்துவான் தி.வே. கோபாலையர் அவர்கள் உடல்நலம் குறைவுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறுநீரகம் செயலற்றதாலும், நெஞ்சடைப்பாலும் உயிர் மீளமுடியாமல் 2007 ஏப்ரல் முதல் நாளன்று இயற்கை எய்தினார். திருச்சிராப்பள்ளி திருவரங்கத்தில் உள்ள அவர் தம் மகளார் இல்லத்தில் அனைவரின் இறுதி வணக்கத்திற்கு வைக்கப்பட்டிருந்த உடல், நல்லோர்களின் வணக்கத்திற்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் பணி புரிந்த புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தினரும், தமிழறிஞர்களும், சமயத்துறை சார்ந்த அறிஞர் பெருமக்களும் கையற்றுக் கலங்கித் தம் இறுதி வணக்கத்தைச் செய்த வண்ணம் உள்ளனர். தி.வே. கோபாலையரின் நினைவைப் போற்றும் வண்ணம் பல்வேறு நினைவுக் கூட்டங்கள் பல ஊர்களில் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
புதுவை பிரெஞ்சு நிறுவனத்தின் ஆசியவியல் பள்ளியில் 04-04-2007 அறிவன் (புதன்) மாலை 4.00 மணிக்கு ஆசியவியல் பள்ளியின் தமிழ்ப்பிரிவுத் தலைவர் இவா வில்டன் முன்னிலையில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. பேராசிரியர் விசயவேணுகோபால் தி.வே. கோபாலையரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பின்பு கோபாலை யருடன் பணிபுரிந்த, பழகிய அன்பர்கள் தி.வே. கோபாலையரின் படத்திற்கு மலர் வணக்கம் செய்து நினைவுரை ஆற்றினர். திரு. வரததேசிகன் கோபாலையரின் பெருமைகளை எடுத்துச் சொன்னார். கோபாலையர் படிக்கத் தொடங்கினால் வேறு எதனையும் நினைவில் கொள்ள மாட்டார் எனவும் தான் படித்ததை, கற்றதை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கொண்டவர் எனவும் கூறினார். மேலும் தமிழில் ஏற்படும் ஐயங்களைத் தீர்த்து வைக்கும் தலைமைப் புலவராகக் கோபாலையர் விளங்கியதையும் மனதில் பட்டதைத் துணிச்சலுடன் எடுத்துரைக்கும் ஆற்றலையும் நினைவு கூர்ந்தார்.தி.வே. கோபாலையரின் நூல்களை (இலக்கணக் களஞ்சியங்களை) செம்பதிப்பாக வெளிக்கொணர்ந்த தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன் அவர்கள் தமக்குக் கோபாலையருடன் அமைந்த தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.
பாவலர் செவ்வேள், பாவலர் மணி சித்தன், பேராசிரியர் அ. அறிவுநம்பி, பேராசிரியர் ஆரோக்கியநாதன், முனைவர் இரா. திருமுருகனார் முதலானவர்கள் கோபாலையரின் பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தினர். புதுச்சேரியில் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களும், புதுவை நகரத் தமிழறிஞர்களும், தி.வே. கோபாலை யருடன் பணிபுரிந்தவர்களும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும் திரளாக நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா muelangovan@yahoo.co.in
- முனைவர் இளங்கோவன் அவர்கள் எழுதிய கோபாலையரின் வாழ்க்கைக் குறிப்பு விக்கியாக்கப்பட்டு கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.--Kanags 22:47, 6 நவம்பர் 2007 (UTC)