பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு
Benjamin Apthorp Gould
Benjamin Apthorp Gould (Harper's Engraving).jpg
பெஞ்சமின் ஆப்தார்ப் கவுல்டு
பிறப்புசெப்டம்பர் 27, 1824(1824-09-27)
போசுட்டன், மசாசூசட்
இறப்புநவம்பர் 26, 1896(1896-11-26) (அகவை 72)
கேம்பிரிட்ஜ், மசாசூசட்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வார்டு கல்லூரி
அறியப்படுவதுவானியல் இதழ்
கவுல்டு பட்டை
கவுல்டு பெயரீடுகள்
தாக்கம் 
செலுத்தியோர்
சி.எஃப். காசு
விருதுகள்ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம் (1887)
துணைவர்மேரி ஆர்தார்ப் குவின்சி கவுல்டு

பெஞ்சமின் ஆர்தார்ப் கவுல்டு (Benjamin Apthorp Gould) (செப்டம்பர் 27, 1824 – நவம்பர் 26, 1896) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வானியல் இதழைத் தொடங்கியதற்காகவும் கவுல்டு பட்டையின் கண்டுபிடிப்புக்காகவும் அர்ஜெண்டினா வான்காணகத்தை உருவாக்கியதற்காகவும் அர்ஜெண்டீனா தேசிய வானிலையியல் சேவையை தோற்றுவித்ததற்காகவும் பெயர்பெற்றவர்.

வாழ்க்கை[தொகு]

இவர் மசாசூசட், போசுட்டனில் பிறந்தார். இவரது தந்தையார் போசுடன் இலத்தீன் பள்ளியின் முதல்வரான பெஞ்சமின் ஆர்தார்ப் கவுல்டு ஆவார். இந்தப் பள்ளியில் தான் ஆர்தார்ப் கவுல்டு கல்வி கற்றார். இவரது தாயார் உலுக்ரீழ்சியா தானா கோடார்டு ஆவார்.[1] கவிஞர் அன்ன பிளேகு கவுல்டு இவரது மாமா ஆவார். ஆர்வார்டு கல்லூரியில் சேர்ந்து 1844 இல் பட்டம் பெற்றதும், இவர் செருமனி, கோட்டிங்டன் பல்கலைக்கழகத்தில் காசின் கீழ் கணிதவியலும் வானியலும் படித்தார். அப்போது இவர் வால்வெள்ளிகள், குறுங்கோள்கள் ஆகியவற்றின் நோக்கீடுகள் பற்றியும் அவற்றின் இயக்கம் பற்றியும் 29 ஆய்வுரைகளை வெளியிட்டார். அமெரிக்கவிலேயே முதன்முதலாக வானியலில் முனைவர் பட்டம் பெற்றதும், ஐரோப்பாவின் வான்காணகங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, அமெரிக்காவில் வானியலை மேம்படுத்த என்ன செய்யவேண்டும் என அறிவுரைகள் கேட்டுப் பெற்றார். அங்கு இவருக்கு Astronomische Nachrichten இதழின் அமைப்பில் ஒரு வானியல் இதழை அமெரிக்காவில் தொடங்குமாறு முதன்மையான அறிவுரை வழங்கப்பட்டது.

இவர் 1848 இல் அமெரிக்காவுக்குத் திரும்பிவந்தார். இவர் 1852 இலிருந்து 1867 வரை ஐக்கிய அமெரிக்க கடல் அளக்கைத் துறையின் நெட்டாங்குப் புலத்துக்குப் பொறுப்பேற்றார். இவர் இப்பணியை வளர்த்தெடுத்து ஒழுங்கமைத்தார். தொலைவரி ஊடாக நெட்டாங்கைத் தீர்மனித்த முதல் முனைவு இதுவே எனலாம். இதற்காக இவர் 1866 இல் அட்லாண்டிக் வடத்தைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெட்டாங்கைத் துல்லியமாக நிறுவினார்.

இவர் மசாசூசட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் மீண்டதும், ஒரு வானியல் இதழைத் 1849 இல் தொடங்கி, 1861 வரை நடத்தினார் . பிறகு 1885 இல் நடுவில் நின்ற இந்த இதழை மீள நடத்தலானர். இது இன்றும் வெளியிடப்படுகிறது. இவர் 1855 இலிருந்து 1859 வரை நியூயார்க், அல்பானியில் உள்ள டட்லி வான்காணகத்தின் இயக்குநராகச் செயல்பட்டார். இவர் 1859 இல் ஐக்கிய அமெரிக்கக் கடற்கரை அளக்கைத் துறை விண்மீன்களின் முனைவட்ட உண்மை இயக்கத்தையும் இருப்பிடங்களையும் செந்தரங்களாகப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றிய விவாதத்தை வெளியிட்டார். இவர் 1861 இல், ஐக்கிய அமெரிக்க நாவாய் வான்காணகத்தின் வானியல் நோக்கீடுகளின் பதிவுகளை வெளியிடும் பணிக்கான தகவல்களை 1850 ஆம் ஆண்டு முதலாகத் திரட்டினார்.

இவர் 1851 இல் கண்டுபிடிப்பு வரிசையில் சிறுகோள்களுக்கு எண்ணையிட முன்மொழிந்தார். இந்த எண்ணைச் சிறுகோளின் மரபுக் குறியீடாக ஒரு வட்டில் பதிவிட வேண்டினார்.

இவர் இவரது தாத்தா பெஞ்சமின் கவுல்டின் பேராளராக 1864 இல் மசாசூசட் சிஞ்சினாட்டிக் கழகத்தில் சேர்க்கப்பட்டார். இவர் 1890 களில் மசாசூசட்டின் அமெரிக்கப் புரட்சியாளர்களின் மைந்தர்கள் கழகத்தில் தொடக்கநிலை உறுப்பினரானார்.

இவர் 1862 இல் ஐக்கிய அமெரிக்கத் துப்புரவு ஆணையத்தின் காப்புக்கணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டார். இவர் 1869 இல் படையியல், மாந்தரியல்(மனிடவியல்) புள்ளிவிவரங்கள் பற்றிய முதன்மை வாய்ந்த தொகுதிகளை வெளியிட்டார், இவர் 1864 இல் மசாசூசட்டில் உள்ள கேம்பிரிட்ஜில் ஒரு தனியார் வான்காணகத்தை நிறுவினார். இவர் 1868 இல் அர்ஜெண்டீனக் குடியரசு சார்பில், அந்நாட்டின் கோர்டோபா எனுமிடத்தில் ஒரு தேசிய வான்காணகத்தை ஒழுங்கமைக்க உதவியுள்ளார். இவர் 1871 இல் அர்ஜெண்ட்டினத் தேசிய வான்காணகத்தின் முதல் இயக்குநர் ஆனார்( இன்று அது கோர்டோபா தேசியப் பல்கலைக்கழகத்தில் அர்ஜெண்டீனத் தேசிய வான்காணகம் என வழங்குகிறது). இவர் இங்கே நான்கு உதவியாளர்களுடன் புதிதாக உருவாக்கப்பட்ட ஒளியயியல் முறைகளைப் ப்யன்படுத்தி, தென் அரைக்கோள வான்பரப்பு முழுவத்தையும் படம் எடுத்தார். இவர் 1884, ஜூன், 1 இல் 1882 ஆண்டுக்கான பெருவால்வெள்ளியைக் கண்ணுற்றார். வானியலாளருக்கு வானிலையியல் முன்கணிப்பு அறிவு தேவை என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக, இவர் அர்ஜென்டீன நண்பர்களோடு இணைந்து அர்ஜென்ட்டீனத் தேசிய வானிலையியல் சேவையை தென் அமெரிக்காவில் முதன்முதலாக நிறுவினார்.

இலெவிசு மோரிசு உரூதர்போர்டு 1866 இல் எடுத்த கார்த்திகை விண்மீன் குழுவின் ஒளிப்படங்களைக் கவுல்டு அளந்து செய்த அளவீடுகளின் திறமை ஒளிப்படக்கருவியைத் துல்லியமாக பயன்படுத்தும் வானொளிப்படவியல்முன்னோடி எனும் பெரும்புகழை இவருக்கு ஈட்டித் தந்தன; மேலும், இவர் 1400 தென் பால்வெளிக் கொத்துகளின் ஒளிப்படபடல நகலைக் கோர்டோபாவில் பாதுகாப்பகத் திரட்டிவைத்தார். இவற்றை இனங்கண்டு தொகுத்துப் படம் வரைதலே இவரது கடைசி வாணாள் பணியாக அமைந்தது. இவர் 1885 வரை அர்ஜென்டீனாவில் தங்கியிருந்து, பிறகே மசாசூசட்டில் உள்ள கேம்பிரிட்ஜுக்குத் திரும்பினார். இவர் 1883 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தையும் 1887 இல் ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கத்தையும் பெற்றார். இவர் 1887 இல் கவன இர்ர்ப்புக்கு உள்ளாக்கிய பால்வழியின் பேரியல் கட்டமைப்பின் வானியற்பியலை வானியலாளர்கள் தொடர்ந்து இன்றும் ஆய்வு செய்து வருகின்றனர். பால்வழியின் கவுல்டு பட்டையும் நிலாவின் கவுல்டு மொத்தல் குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன. இவர்1896 இல் மசாசூசட்டில் உள்ள கேம்பிரிட்ஜில் இறந்தார்.

விண்மீன் வரைபடவியல்[தொகு]

இவர் தன் மாபெரும் பணியாகிய யுரோனோமெட்ரியா அர்ஜென்டீனா விண்மீன் அட்டவணையை 1874 இல் முடித்து, 1879 இல் வெளியிட்டார். இதற்காக இவருக்கு 1883 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. இந்த வெளியீடு தென் விண்கோளத் தென் முனையில் இருந்து 100 பாகை வரையிலான பொலிவுமிகு விண்மீன்களுக்கான கவுல்டின் பெயரீடுகளைத் தாங்கி வந்தது. இப்பணி பிளேசுட்டீடு வட அரைக்கோளத்தில் நிகழ்த்திய பணிக்கு இணையானதாகும். இருபதாம் நுற்றாண்டின் அனைத்து விண்மீன்களின் தரவுகளையும் இணைத்து இது நாளதுபடுத்திய பதிப்பு யுரோனோமெட்ரியா அர்ஜென்டீனா, இங்கே www.uranometriaargentina.com/ பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம் கிடைக்கிறது.

இவர் தனது யுரானோமெட்ரியா அர்ஜெண்டீனா அட்டவணைக்குப் பின்னர், 1884 இல் 73,160 விண்மீன்களுக்கான வட்டார அட்டவணையையும் 1885 இல் 32, 448 விண்மீன்களுக்கான நெட்டாங்கு நோக்கீடுகள் வழியாக பொது அட்டவணை ஒன்றையும் தொகுத்து வெளியிட்டார்.

மேலும் காண்க[தொகு]

  • கவுல்டு பட்டை
  • கவுல்டு பட்டை அளக்கை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]