பெச்சகுச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொமானியாவின் குளுச்-நபோகாவில் நடந்த 'பெச்சகுச்சா இரவு' நிகழ்வில் ஒரு பேச்சாளர்

பெச்சகுச்சா அல்லது பெச்ச குச்சா (யப்பானிய: ペチャクチャ, IPA: [petɕa ku͍̥tɕa],[1] கிசுகிசு என்பது 20 படவில்லைகளை ஒவ்வொன்றையும் 20 நொடிகளுக்கு மட்டுமே காட்டி நிகழ்த்தும் ஒரு முன்வைப்பு வடிவம் ஆகும் (மொத்தம் 6 நிமிடங்கள் 40 நொடிகள்). முன்வைப்புப் படவில்லைக் காட்சிகளைத் திட்பமாகவும், விறுவிறுப்பாகவும் ஆக்கும் இவ்வடிவத்தை முன்னிறுத்தி பெச்சகுச்சா இரவுகள் என்ற உரையரங்கங்கள் நிகழ்த்தப்படுகின்றன.[2][3]

தோக்கியோவில் உள்ள கிளெயின் டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்டிரிட் கிளெய்ன், மார்க் டீதம் ஆகியோரால் ரொப்பொங்கியில் உள்ள சூப்பர்டீலக்ஸ் என்ற தங்களது பரீட்சார்த்த நிகழ்த்துவெளிக்கு மக்களைக் கவரவும்; இளம் வடிவமைப்பாளர்கள் தங்களுக்குள் கூடி, தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தி, கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்காகவும்[4] பிப்ரவரி 2003 இல் பெச்சகுச்சா இரவு முதலில் வடிவமைக்கப்பட்டது.[5][6]

2004 இல் சில ஐரோப்பிய நகரங்கள் இத்தகைய பெச்சகுச்சா இரவுகளை நடத்தத் தொடங்கிய பிறகு உலகம் முழுக்க நூற்றுக்கணக்கான நாடுகளில் இத்தகைய இரவுகள் நடக்கின்றன.[7][8] மே 2014 இல் உலகளாவிய அளவில் 700 இற்கும் மேற்பட்ட நகரங்களில் பெச்சகுச்சா இரவுகள் அரங்கேறின.[9]

வடிவம்[தொகு]

வகைமாதிரியான பெச்சகுச்சா இரவொன்றில் 8 முதல் 14 முன்வைப்புக் காட்சிகள் நடக்கும். ஒவ்வொன்றிலும் 20 படவில்லைகள் காட்டப்படும். ஒவ்வொரு வில்லையும் 20 நொடிகளே காட்டப்படும். சில நகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் இவ்வடிவத்தில் அவர்களே சில மாறுதல்கள் செய்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள குரோனிஞ்சன் நகரில் இரண்டு காட்சிகள் நேரடி இசைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு காட்சியின் இறுதி 20 நொடிகளும் விழா ஒருங்கிணைப்பாளர்களைச் சார்ந்தவர்களின் உடனடி விமர்சனத்துக்காக ஒதுக்கப்படுகின்றன.

வழக்கமாகக் கலைத்துறை, வடிவமைப்பு, கட்டிடக்கலை, ஒளிப்படக் கலை முதலிய படைப்பூக்கப் புலங்களைச் சேர்ந்தவர்களே பார்வையாளர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்வில் கல்விப்புலம் சார்ந்தவர்களும் பங்கெடுப்பதுண்டு.[10] பெரும்பாலான முன்வைப்பாளர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் தொழில்முறை வடிவமைப்பாளர்களாக இருந்தாலும், தங்களது பயணங்கள், ஆய்வுச் செயல்திட்டங்கள், பொழுதுபோக்குகள், சேகரிப்புகள், ஏனைய விருப்பங்கள் குறித்தும் பேசுவதுண்டு. சில நிகழ்வுகளில் காணொலிக் கலை வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டது உண்டு.

பெச்சகுச்சா இரவு தொடங்குவதற்கான நெறிமுறை[தொகு]

பெச்சகுச்சா இரவு நிகழ்ச்சி நடத்த விழைபவர்கள் பெச்சகுச்சா அமைப்பைத் தொடர்புகொண்டு ஒரு முறைசாரா விண்ணப்ப நடைமுறைக்குப் பிறகு "கைகுலுக்கும்" ஒப்பந்தம் ஒன்றைப் பரிமாறிக் கொள்கின்றனர்.[11] பெச்சகுச்சா இரவுகளுக்கு அனுமதி வரம்பு என்று எதுவும் இல்லை. எவரும் கலந்து கொள்ளலாம்.

பெச்சகுச்சா என்பது கிளெய்ன்- டீதம் கட்டிடக்கலை நிறுவனத்தின் பதிவுபெற்ற வணிகப்பெயராகும்.[2][3][12] பெச்சகுச்சா பயன்பாட்டு விதிமுறைகளின்படி முன்வைப்பாளர்கள் "அவர்கள் நிகழ்த்திய காட்சியை மீளாக்கம் செய்துகொள்வதற்கான சில தனிப்பட்டதல்லாத உரிமைகளையும், உரிமங்களையும் வழங்க" முன்வர வேண்டும்.[13] நிகழ்ச்சி அழைப்பிதழ்கள் உலகளாவிய பெச்சகுச்சா டெய்லி வலைப்பூவில் வெளியிடப்படுவதோடு,[14] காணொலி வடிவங்களும் இணையத்தில் ஏற்றப்படுகின்றன.[15]

இவற்றையும் பார்க்க[தொகு]

  • மின்னல் உரை: ஒப்பிடத்தகுந்த முன்வைப்பு வடிவம்.
  • இக்னைட்: ஒப்பிடத்தகுந்த முன்வைப்பு வடிவம்.
  • விரைவு ஆர்வலர் அரட்டை (ஸ்பீடு கீக்கிங்): ஒன்றன்பின் ஒன்றாக என்றில்லாமல் ஒரே நேரத்தில் நிகழும் 5-நிமிட முன்வைப்புகள். ஒரே அறையில் அல்லது உரையாடல் வெளியில் பங்கேற்பாளர்கள் சுழல்முறையில் முன்வைப்புகளை நிகழ்த்துதல்.

உசாத்துணை[தொகு]

  1. போர்வோ தளத்தில் பெச்சகுச்சாவின் சப்பானிய பலுக்கல் முறை
  2. 2.0 2.1 "Case details for Community Trade Mark E5374426". United Kingdom: Intellectual Property Office. 11 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 "Case details for Trade Mark 2417930". United Kingdom: Intellectual Property Office. 9 சூன் 2006.
  4. Jean Snow (சூன் 9, 2006). "20/20 Vision: The Tokyo-born Pecha Kucha phenomenon has the global creative community hooked". Metropolis. Archived from the original on 2009-12-26. பார்க்கப்பட்ட நாள் 2007-02-26.
  5. Jean Snow (சூலை 17, 2006). "All Talk". டைம். http://www.time.com/time/magazine/article/0,9171,501060724-1214999,00.html. பார்த்த நாள்: 2012-07-04. 
  6. "PechaKucha 20x20 – Tokyo – Vol. 1". பார்க்கப்பட்ட நாள் 23 மே 2014.
  7. "PechaKucha 20x20".
  8. Daniel H. Pink (2007-08-21). "Pecha Kucha: Get to the PowerPoint in 20 Slides Then Sit the Hell Down". Wired (magazine). பார்க்கப்பட்ட நாள் 2009-09-29.
  9. "PechaKucha 20x20 – Attend". Archived from the original on 2014-05-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-01.
  10. Allis, Sam (2010-06-28). "Designed to inspire". The Boston Globe. http://www.boston.com/ae/theater_arts/articles/2010/06/28/pecha_kucha_designed_to_inspire/. 
  11. "PechaKucha 20x20 – Start a City". பார்க்கப்பட்ட நாள் 23 மே 2014.
  12. "PECHAKUCHA". USPTO. சூலை 12, 2011. Archived from the original on 2017-07-28. பார்க்கப்பட்ட நாள் 2015-11-01.
  13. "PechaKucha 20x20 – Terms Of Use". பார்க்கப்பட்ட நாள் 23 மே 2014.
  14. "PechaKucha 20x20 – PechaKucha Daily Blog". http://www.pechakucha.org/daily. பார்த்த நாள்: 23 மே 2014. 
  15. "PechaKucha 20x20 – Watch". பார்க்கப்பட்ட நாள் 23 மே 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெச்சகுச்சா&oldid=3575646" இலிருந்து மீள்விக்கப்பட்டது