புவியியல் ஆள்கூற்று முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவியியல் ஆள்கூறுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகலாங்கு மற்றும் நெட்டாங்குகளை காட்டும் புவியின் வரைப்படம்

புவியியல் ஆள்கூற்று முறை (Geographic coordinate system) என்பது புவியின் மீதுள்ள எந்தவொரு இடத்தையும் கோள ஆள்கூற்று முறையின் இரண்டு ஆள்கூறுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தும் ஒரு முறையாகும். இதன் போது புவியின் சுழற்சி அச்சை மையமாக கொண்டு ஆள்கூறுகள் கணிக்கப்படுகின்றன. கிரேக்க சிந்தனையாளரான தொலெமி பாபிலோனியர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வட்டமொன்றை 360 பகுதி(பாகை)களாகப் பிரித்தார்.

  • அகலாங்கு (நிலநேர்க்கோடு) என்பது எந்தவொரு புள்ளிக்கும் நடுக்கோட்டுக்கும் இடையேயான கோணமாகும். ஒன்றுக்கொன்று சமதொலைவான கற்பனை அகலாங்கு கோடுகள் பூமியின் மேற்பரப்பில் சிறு வட்டங்களை அமைக்கின்றன. நிலநடுக்கோடு 0 பாகை அகலாங்காகும். இது ஒரு பெருவட்டத்தை அமைக்கிறது. புவி முனைகள் 90 பாகை அகலாங்குகளாகும் (வட முனை 90° N, தென் முனை 90° S).
  • நெட்டாங்கு (நிலநிரைக்கோடு) என்பது ஒரு புள்ளி ஏதாவது ஒரு புள்ளியிலிருந்து கிழக்காகவோ மேற்காகவோ ஆக்கும் கோணமாகும்: ஐக்கிய இராச்சியத்தின் கிறின்விச் நகரூடாக செல்லும் வட தெற்கான் கோடு 0 பாகையாகக் கொள்ளப்படுகிறது. அகலாங்குகளை போலல்லாது நெட்டாங்குகள் எல்லாமே பெரு வட்டங்களாகும். இக்கோடுகள் யாவும் வட மற்றும் தென்முனைகளில் இணைகின்றன.

இவ்விரு ஆள்கூறுகளை கையாள்வதன் மூலம் புவி மேற்பரப்பின் எந்தவொரு புள்ளியையும் அடையாளப்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக, சென்னை மாநகரானது அகலாங்கு 13.09° வடக்கு, மற்றும் 80.27° கிழக்கு ஆள்கூறுகளை கொண்டுள்ளது. இதன் கருத்து, புவி மையத்திலிருந்து 13.09° வடக்காகவும்,80.27° கிழக்காகவும் வரையப்படும் ஒரு கற்பனைக் காவியானது சென்னை மாநகரூடாக செல்லும் என்பதாகும்.

பாகையானது பொதுவாக, கலை ( ′ ) விகலை ( ″ ) என பிரிக்கப்படுகின்றது. அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை குறிக்க இவை பல முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அகலாங்கு முதலில் கூறப்படுவது வழக்கமாகும்.

  • DM பாகை:கலை (49:30.0-123:30.0)
  • DMS பாகை:கலை:விகலை (49:30:00-123:30:00)
  • DD தசம பாகை (49.5000-123.5000), பொதுவாக 4 தசமதானங்களுக்கு.

அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பவற்றை கணிப்பிட பயன்படுத்தப்படும் முறைக்கேற்ப (Geodetic system அல்லது datum அல்லது WGS84) ஒரு புள்ளியின் அகலாங்கு மற்றும் நெட்டாங்கு என்பன வேறுபடும். இது இம்முறைகள் பயன்படுத்தும் ஆதாரப்புள்ளியை பொருத்ததாகும்

புவிநிலை ஆள்கூறுகள்[தொகு]

புவிநிலை செயற்கைக்கோள்கள் (உ+ம் தொலைக்காட்சி செயற்கைகோள்கள் ) நிலநடுக்கோட்டுக்கு மேலாக காணப்படுகின்றன. ஆகவே, அவற்றின் நிலையம் நெட்டாங்குகள் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவற்றின் அகலாங்கு மாறுவதில்லை அஃது எப்போதும் பூச்சியமாகும்.

மூன்றாவது பரிமாணம்: உயரம், ஆழம்[தொகு]

புவி மேற்பரப்பிலுள்ள ஒரு புள்ளியை முற்றாக வரையறுத்து நிலையப்படுத்த உயரமும் தேவைப்படுகிறது. ஒரு புள்ளியின் உயரமானது ஒரு ஆதார தளத்துக்குச் சார்பாக அதிலிருந்து "செங்குத்தாக" அளக்கப்படுகிறது. புவியின் மையத்திலிருந்து உயரத்தை குறிப்பிட முடியுமாயினும், கடல் மட்டம் பொதுவாக பயன்பாட்டில் உள்ளது. புவியின் ஆழமான அல்லது விண்வெளியில் உள்ள புள்ளிகளைக் குறிக்க மட்டுமே புவி மையத்திலிருந்து அளக்கப்பட்ட தொலைவு பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]