பிரியிழையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரங்களில் வளர்ச்சி இடம்பெறும் இழையப் பகுதி பிரியிழையம் (Meristem) என அழைக்கப்படும். இவ்விழையம் வியத்தமடையாத தொடர்ச்சியாகக் கலப்பிரிவுக்கு உட்பட்டு வளர்ச்சியடையும் பிரியிழையக் கலங்களால் ஆனது. இவற்றிலிருந்தே புதிய கலங்கள் தாவரங்களில் உருவாகும். உருவாகும் புதிய கலங்களில் அரைவாசி பிரியிழையமாகவும் மீதி வியத்தமடைந்த கலங்களாகவும் மாறும். இதனால் தொடர்ச்சியாகப் பிரியிழையம் தாவரத்தில் பேணப்பட்டு வரும்.

சிறப்பியல்புகள்[தொகு]

 • இழையுருப்பிரிவு அடையக்கூடியவை.
 • வியத்தமடையாத கலங்களால் ஆனவை.
 • கலங்கள் யாவும் ஒத்த பரிமாணமுடையவை.
 • மிகவும் மெல்லிய கலச்சுவர் உடைய கலங்கள்.
 • துணைச்சுவர் படிவு இல்லை.
 • கலங்களுக்கிடையில் கலத்திடைவெளி குறைவு.
 • செறிவான குழியவுரு காணப்படும்.
 • சிறிய சாற்றுப் புன்வெற்றிடம் காணப்படும்.
 • பருமனில் பெரிய கரு காணப்படும்.
 • அதிகளவிலான இழைமணிகளும், உயர் அனுசேப வீதமும் இருக்கும்.
 • குறைந்தளவிலான உருமணிகள் இருக்கும்.
 • அதிகளவிலான இறைபோசோம்கள் காணப்படும்.

வகைகள்[தொகு]

தாவரங்களில் உள்ள பிரியிழையங்கள் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:

 1. உச்சிப்பிரியிழையம்:

தண்டு மற்றும் வேரின் உச்சியில் காணப்படும் பிரியிழையமாகும். இவை தண்டு மற்றும் வேரின் நீட்சியை ஏற்படுத்துகின்றன.

 1. பக்கப்பிரியிழையம்:

இரு வகையான பக்கப் பிரியிழையங்கள் உள்ளன.

 • கலன் மாறிழையம்
 • தக்கை மாறிழையம்

கலன் மாறிழையம் காழுக்கும் உரியத்துக்குமிடையே காணப்படும். இது தண்டு மற்றும் வேரின் விட்டம் அதிகரிப்பதில் உதவும். கலன் மாறிழையம் கலப்பிரிவடைந்து துணைக் காழ் மற்றும் துணை உரியம் ஆகியவற்றை உருவாக்கும். இதன் காரணமாக விட்டம் அதிகரித்து தாவரத்தில் துணை வளர்ச்சி ஏற்படும். தக்கை மாறிழையம் தண்டு மற்றும் வேரின் மேற்பட்டையில் காணப்படும். இது இவற்றின் நீரிழப்பைக் கட்டுப்படுத்தும் தக்கையைத் தோற்றுவித்து, அவற்றின் விட்டம் அதிகரிப்பதிலும் உதவும்.

 1. இடை புகுந்த பிரியிழையம்

கணு, புற்தாவரங்களின் இலையடியில் காணப்படும். இவை கணு நீட்சியில் உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியிழையம்&oldid=2746448" இலிருந்து மீள்விக்கப்பட்டது