பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Principia Mathematica to *56 என்பது பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் சுருக்க வடிவு நூல். இதன் முகப்பு.

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica) என்பது ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், பெர்ட்ரண்டு ரசல் ஆகிய இருவர் எழுதிய, கணிதவியலின் அடித்தளங்கள் பற்றிய, முத்தொகுதிகள் கொண்ட, 1910-1913 ஆண்டுகளில் வெளிவந்த பெருநூல். இது கணிதவியலின் உண்மைகள் யாவற்றையும் தெளிவாக வரையறை செய்த மெய்கோள்கள் மற்றும் முடிவு தேரும் முறைகளை குறியீடு ஏரண முறைகளின் படி வருவிக்க முனைந்ததாகும்.

காட்லாபு ஃவிரெகெ (Gottlob Frege) செய்த ஏரணம் பற்றிய ஆய்வால் உந்தித் தூண்டப்பட்ட ஆய்வுநூல் பிரின்சிப்பியா. இந்த ஆய்வின் பயனாக சில முரண் உண்மைகளை (paradoxes) ரசல் கண்டுபிடித்தார். இவ்வகையான முரண்கூற்றுகள் தோன்றா வண்ணம் இருக்குமாறு பிரின்சிப்பியாவை வளர்த்தெடுத்தார். இதற்காக, கணக்கோட்பாடுகளில் வகையினக் கொள்கையை (Type theory) விரிவாக வளர்த்தெடுத்தார்.

அரிஸ்டாட்டிலின் ஆர்கானன் (Organon)[1] என்னும் நூலுக்குப் பின், கணிதவியல் ஏரணம், மெய்யியல் துறைகளில் எழுந்த மிகமுதன்மையான, புத்தூட்டம் தரும் ஆக்கம் பிரின்சிப்பியா என்று துறையறிஞர்களால் போற்றப்படுகின்றது. மாடர்ன் லைப்ரரியின் (Modern Library) கணிப்பில் 20ஆம் நூற்றாண்டில் புனைகதை வகை அல்லாத நூல்களில் இந்நூல் 23 ஆவது சிறந்த நூலாக இருக்கின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]