பிரான்ஸ் பெக்கன்பேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014

ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் (பிறப்பு 1945) ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் மற்றும் கால்பந்து மேலாளர் ஆவார். இவர் நேர்த்தியான விளையாடும் பாணியும் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தும் வல்லமையும் படைத்தவர். இவர் தலைமை பண்பு கொண்டவராக இருப்பதாலும் இவரின் முதல் பெயரான "ஃப்ரான்ஸ்' ஆஸ்திரிய அரசர்களை நினைவூட்டுவதாக இருப்பதாலும் இவரது இளமை காலங்களில் பேரரசர் என்னும் புனைப்பெயரில் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். கால்பந்து விளையாட்டில் ஈடுபட்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.[1][2] இவர் கால்பந்து விளையாட்டில் பல்துறை வல்லமை படைத்தவர். முதலில் மத்திய நிலையில் ஆடும் வீரராக அறிமுகமாகி, பிற்காலத்தில் மிகச்சிறந்த தடுப்பாட்ட வீரராகவும் சிறந்து விளங்கினார்.

சிறந்த ஐரோப்பிய வீரருக்கான வருடாந்திர விருதினை இரண்டு முறை இவர் வென்றுள்ளார். மேற்கு ஜெர்மனி தேசிய அணிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் மூன்று முறை உலகக் கோப்பை கால்பந்து தொடர்களிலும் விளையாடியுள்ளார். இவர் உலகக்கோப்பையை அணி தலைவராகவும் அணியின் மேலாளராகவும் வென்றுள்ளார். 1974 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை போட்டியில் அணித்தலைவராக விளையாடி இவர் கோப்பையை வென்றுள்ளார். 1990ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனி அணியின் மேலாக பணியாற்றி மேலும் ஒரு முறை உலகக்கோப்பையை வென்றார். தேசிய அணிக்காக விளையாடி உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பை மற்றும் குழும அணிக்காக விளையாடி ஐரோப்பிய கோப்பை ஆகியவற்றை வென்ற முதல் அணித்தலைவர் இவரே ஆவார்.

இவர் குழும அளவில் பேயர்ன் முனிச் அணிக்காக 1967ம் ஆண்டு, 1974 முதல் 1976 வரை ஆகிய நான்கு ஆண்டுகளில் ஐரோப்பிய கோப்பையை வென்றுள்ளார். பிற்காலங்களில் பேயர்ன் முனிச் அணியின் மேலாளராக பணியாற்றி, மேலும் அக்குழுவின் தலைமைப் பொறுப்பிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

தற்போது ஜெர்மனிய மற்றும் உலக கால்பந்து அரங்கில் செல்வாக்கு மிகுந்த நபராக இவர் கருதப்படுகிறார். 2006 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இவர் செயல்பட்டார்.

இளமைக்காலம்[தொகு]

ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய முனிச் நகரில் ஃப்ரான்ஸ் பெக்கன்பேவர் சீனியருக்கும் ஆண்டோனி என்பவருக்கும் மகனாக 1945ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்த பகுதியில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகமாக இருந்தனர். இவரது தந்தைக்கு கால்பந்து விளையாட்டின் மீது வெறுப்பு இருந்தபோதிலும் இவர் தனது 9 வயது முதல் கால்பந்து போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு முதல் பேயர்ன் முனிச் அணிக்கு விளையாட ஆரம்பித்தார்.

பேயர்ன் முனிச்[தொகு]

இவர் சேர்ந்த ஆண்டு முதல் பேயர்ன் முனிச் அணி சிறப்பாக விளையாட ஆரம்பித்தது. இரண்டாம் நிலையில் இருந்து முதல்நிலை போட்டிகளுக்கு அந்த அணி தேர்வானது. 1967 ஆம் ஆண்டு ஜெர்மனிய கோப்பையும் ஐரோப்பிய அளவிலான கோப்பையையும் இந்த அணி வென்றது. 1968 ஆம் ஆண்டு இவர் அந்த அணிக்கு தலைவராக அறிவிக்கப்பட்டார். 1972 முதல் 1974 வரை ஜெர்மனிய கோப்பைகளையும், 1974 முதல் 1976 வரை ஐரோப்பிய அளவிலான கோப்பைகளையும் அணித் தலைவராக இருந்து வெற்றி பெற்றார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக ரசிகர்களும் ஊடகங்களும் 1968ஆம் ஆண்டு முதல் "பேரரசர்' எனும் புனைப் பெயர் இட்டு இவரை கொண்டாடினர்.

1977ம் ஆண்டு மிகவும் லாபகரமான ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் அணிக்காக விளையாடினார். அந்த அணியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1978 முதல் 1980 வரை மூன்று ஆண்டுகளுக்கு அந்த அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். அதன்பிறகு ஜெர்மனியைச் சேர்ந்த ஹாம்பர்க் அணிக்காக 2 ஆண்டுகள் விளையாடினார். 1982 ஆம் ஆண்டு அந்த அணி ஜெர்மனிய கோப்பையை வென்றது. மொத்தம் 587 குழும ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அவைகளில் 81 கோல்களை இவர் அடித்துள்ளார்.

ஜெர்மனிய தேசிய அணி[தொகு]

தேசிய அணிக்காக இவர் 103 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 1966, 1970 மற்றும் 1974 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகளும் அடங்கும். 1966 உலகக்கோப்பையில் ஜெர்மனி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. 1970ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் ஜெர்மனிய அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. 1974-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை ஜெர்மனி அணி இவரின் தலைமையில் வெற்றி பெற்றது. இந்த 3 உலகக் கோப்பை போட்டிகளிலும் இவர் சிறந்த வீரர்களுள் ஒருவராக கருதப்பட்டார். மேலும் ஐரோப்பிய அளவிலான சர்வதேச போட்டிகளில் 1972 ஆம் ஆண்டு ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. 1976 ஆம் ஆண்டு ஜெர்மனி அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.

கால்பந்து அணி மேலாளர்[தொகு]

ஜெர்மனி தேசிய அணியின் மேலாளராக பணியாற்றி 1986ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இரண்டாம் இடமும் 1990ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வெற்றியும் பெறுவதற்கு இவர் பங்களிப்பு நல்கினார். பிறகு குழும அளவில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மார்ஸைல் அணிக்கு மேலாளராக பணியாற்றி 1991 ஆம் ஆண்டு அந்த அணி பிரான்ஸ் நாட்டின் கோப்பையை வெல்வதற்கு துணை புரிந்தார். 1994 மற்றும் 1996 ஆண்டுகளில் பேயர்ன் முனிச் அணிக்கு இவர் மேலாளராக பணியாற்றிய காலத்தில் அந்த அணி ஒரு ஜெர்மனிய கோப்பையும் ஒரு ஐரோப்பிய அளவிலான கோப்பையையும் வென்றது. அதன்பிறகு பேயர்ன் முனிச் குழு மற்றும் ஜெர்மனிய கால்பந்து சங்கத்தின் தலைமை பொறுப்புகளிலும் இவர் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Der Kaiser, the brains behind Germany". FIFA இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160409234351/http://www.fifa.com/u20womensworldcup/news/y=2007/m=4/news=der-kaiser-the-brains-behind-germany-503637.html. பார்த்த நாள்: 24 July 2009. 
  2. Lawton, James (3 June 2006). "Franz Beckenbauer: The Kaiser". The Independent (UK). https://www.independent.co.uk/news/people/profiles/franz-beckenbauer-the-kaiser-480839.html. பார்த்த நாள்: 24 July 2009.