பிராண்ஸ் சூபேர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராண்ஸ் சூபேர்ட், வில்ஹெல்ம் ஆகஸ்ட் ரீடர் என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம், 1875. 1825ல் அவரே வரைந்த நீர் வண்ண ஓவியம் ஒன்றைத் தழுவி வரையப்பட்டது.

பிராண்ஸ் பீட்டர் சூபேர்ட் (Franz Peter Schubert - ஜனவரி 31, 1797 – நவம்பர் 19, 1828) ஒரு ஆஸ்திரிய இசையமைப்பாளர். இவர் நூற்றுக் கணக்கில் சிறிதும் பெரிதுமான பல்வேறு வகையான இசை ஆக்கங்களை எழுதியுள்ளார்.

இசை அறிவு கொண்ட குடும்பமொன்றில் பிறந்த சூபேர்ட், அவரது சிறு பராயம் முழுதும் முறையான இசைப் பயிற்சியைப் பெற்றார். இவரது நண்பர்கள், கூட்டாளிகள், ஆர்வலர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழுவினர் இவரது ஆக்கங்களை விரும்பிச் சுவைத்து வந்தாலும், இவரது வாழ்நாளில் இவரது ஆக்கங்களுக்குப் பரவலான வரவேற்பு இருந்ததாகச் சொல்லமுடியாது. இவர் என்றும் ஒரு நிரந்தரமான பணியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்ததில்லை. பெரும்பாலும் இவரது குடும்பத்தினரதும், நண்பர்களினதும் ஆதரவிலேயே இவர் வாழ்க்கை நடத்தி வந்தார். வெளியிடப்பட்ட ஆக்கங்கள் மூலம் இவருக்கு ஓரளவு வருமானம் கிடைத்து வந்தது. தவிர, அவ்வப்போது தனிப்பட்ட முறையில் இசைப் பயிற்சியும் கொடுத்து வந்தார். இவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில் இவருக்கு ஓரளவு புகழ் ஏற்படத் தொடங்கியிருந்தது. இவர் இறக்கும்போது இவருக்கு வயது 31.

இவரது இறப்புக்குப் பின் இவரது ஆக்கங்கள் பற்றிய ஆர்வம் பெரிதும் அதிகரித்தது. இசையமைப்பாளர்களான பிராண்ஸ் லிஸ்ட், ராபர்ட் சூமான், பீலிக்ஸ் மண்டல்சோன் போன்றோரும், இசையியலாளரான சர். ஜார்ஜ் குரோவும் இவரது ஆக்கங்களை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்றனர். பிராண்ஸ் சூபேர்ட், இப்பொழுது மேனாட்டு இசை மரபின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராண்ஸ்_சூபேர்ட்&oldid=2209891" இருந்து மீள்விக்கப்பட்டது