பிட்டின் இந்தியா சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டின் இந்தியா சட்டம் (Pitt's India Act) அல்லது கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784 என்பது பெரிய பிரித்தானிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் 1784 இல் இயற்றப்பட்ட ஒரு சட்டம். இந்தியத் துணைகண்டத்தில் |கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியையும் நடவடிக்கைகளையும் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இது இயற்றப்பட்டது. இச்சட்டம், இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கம்பனியும் பிரித்தானிய அரசும் கூட்டாக நிருவாகம் செய்ய ஒரு கட்டுப்பாட்டு வாரியத்தை அமைத்தது.

1773 இல் கிழக்கிந்திய நிறுவனம் தனக்கேற்பட்ட நிதிப்பற்றாக்குறையைப் போக்க பிரித்தானிய அரசின் உதவியை நாடியது. இந்தியாவிலிருந்த நிறுவன அதிகாரிகளிடையே ஊழல் மலிந்திருந்த காரணத்தால், நிதி உதவி செய்வதற்கு நிபந்தனையாக, நிறுவனச் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒரு சட்டத்தை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது. 1773 மேற்பார்வைச் சட்டம் (Regulating Act of 1773) என்றழைக்கப்பட்ட அச்சட்டம் தோல்வியடைந்தது. நிறுவனச் செயல்பாடுகளில் காணப்பட்ட முறைகேடுகளையும் ஊழலையும் அதனால் தடுக்க முடியவில்லை. இச்சட்டத்தின் குறைபாடுகளைத் தீர்க்க 1784 இல் பிரித்தானியப் பிரதமர் வில்லியம் பிட் 1784 இல் ஒரு புதிய சட்டத்தை இயற்றினார்.[1]

1784 கிழக்கிந்திய நிறுவனச் சட்டத்தின் படி ஒரு நிருவாக வாரியம் உருவாக்கப்பட்டது. அது மொத்தம் ஆறு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அவர்களில் இருவர் அரசினால் நியமிக்கப்பட்டனர். எஞ்சிய நாலு பேர், பிரிவி கவுன்சிலின் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத்தின் தலைவர், கிழக்கிந்திய நிறுவன விவகார அமைச்சர் போன்று செயல்பட்டார். நிறுவனத்தின் இராணுவ, குடிசார், வருவாய்சார் செயல்பாடுகள் அனைத்தும் இவ்வாரியத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. மேலும் இச்சட்டம் நிறுவனத்தின் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கையை மூன்றாகக் குறைத்தது. மும்பை மற்றும் சென்னை மாகாணங்களில் ஆளுனர்கள் தன்னிச்சையாகச் செயல்படும் உரிமையை இழந்தனர். கொல்கத்தா மாகாண ஆளுனரின் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கினர். கல்கத்தா இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிருவாகத் தலைநகராகச் செயல்படத் தொடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Pitt’s India Act (1784)
  • Nilakanta Sastri, K.A. (2000). Advanced History of India. New Delhi: Allied Publishers Ltd. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  • "The Pitt's Act". Archived from the original on 2006-05-14. பார்க்கப்பட்ட நாள் 2006-06-26.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டின்_இந்தியா_சட்டம்&oldid=3437949" இலிருந்து மீள்விக்கப்பட்டது