பாலூர் து. கண்ணப்பர்
பாலூர் து. கண்ணப்பர் | |
---|---|
பிறப்பு | பாலூர் | திசம்பர் 14, 1908
இறப்பு | 29 மார்ச்சு 1971 | (அகவை 62)
தொழில் | தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர். |
கல்வி | கலை முதுவர் |
பெற்றோர் | துரைச்சாமி – மாணிக்கம்மாள் |
பாலூர் துரைச்சாமி கண்ணப்பர் (Balur D. Kannappar, 1908 திசம்பர் 14 – 1971 மார்ச் 29) என்னும் பாலூர் கண்ணப்ப முதலியார் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர்.
பிறப்பு
[தொகு]கண்ணப்பர், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூரில் 1908 திசம்பர் 14 ஆம் நாள் துரைச்சாமி – மாணிக்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.[1]
கல்வி
[தொகு]கண்ணப்பர் பள்ளிக் கல்வியைக் கற்ற பின்னர், டி. என். சேசாசலம் என்பவரிடம் ஆங்கிலமும் மே. வீ. வேணுகோபாலனார், கோ. வடிவேலர், சூளை வைத்தியலிங்கனார் ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்று வித்துவான் பட்டம் பெற்றார்.[1] 1956 ஆம் ஆண்டில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி.ஓ.எல்) பட்டமும் 1964 ஆம் ஆண்டில் கலை முதுவர் (எம். ஏ.) பட்டமும் பெற்றார்.
குடும்பம்
[தொகு]கண்ணப்பர், தெய்வானையம்மை என்பவரை மணந்து ஏழு பெண்மக்களைப் பெற்றார்.[1]
அலுவல்
[தொகு]தமிழ்க் கல்வியை முடித்த கண்ணப்பர் தமிழாசிரியப் பயிற்சி பெற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள லூதரன் மிசன் உயர்நிலைப் பள்ளியில், 1926 சூன் முதல் 1934 மே வரை, எட்டாண்டுகளும் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில், 1934 சூன் முதல் 1938 மே வரை, நான்காண்டுகளும் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளியில், 1938 சூன் முதல் 1952 மே வரை, பதினான்கு ஆண்டுகளும் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் 1952 சூன் திங்கள் தமிழ் துணை விரிவுரையாளராகப் பணியேற்றார். 1954ஆம் ஆண்டில் தமிழ் விரிவுரையாளராகவும் 1955ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பதவி உயர்வுபெற்றார். பதினாறாண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றி 1968 சூன் திங்கள் ஓய்வுபெற்றார்.[2]
பங்கேற்ற அமைப்புகள்
[தொகு]கண்ணப்பர் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அப்பாலும் தமிழ்ப் பணியாற்ற விரும்பி சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகி உழைத்தார். சென்னை பல்கலைக்கழக பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்று பணியாற்றினார்.[1]
எழுத்துப்பணி
[தொகு]கண்ணப்பர் தமிழ்மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதோடு நின்றுவிடாமல், பின்வரும் நூல்களை எழுதினார்.
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | குறிப்பு |
01 | 1949 | புதுமை கண்ட பேரறிஞர் | பயணநூல் | |
02 | 1949 | நடு நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் | பாட நூல் | |
03 | 1951 | சங்க கால வள்ளல்கள் | வரலாறு | |
04 | 1951 | குமுத வாசகம் – இரண்டாம் படிவம் – பொதுப்பகுதி | பாட நூல் | |
05 | 1951 | குமுத வாசகம் – இரண்டாம் படிவம் – சிறப்புப் பகுதி | பாட நூல் | |
06 | 1951 | புதுமுறைப் பூந்தமிழ் இலக்கணம் – 1, 2 படிவங்கள் | ||
07 | 1953 | அமலநாதன் | புதினம் | |
08 | 1953 | தமிழ்ப் புலவர் அறுவர் | வரலாறு | |
09 | 1954 | குமுத வாசகம் – முதலாம் படிவம் – பொதுப்பகுதி | பாட நூல் | |
10 | 1954 | குமுத வாசகம் – மூன்றாம் படிவம் – பொதுப்பகுதி | பாட நூல் | |
11 | 1954 | கவி பாடிய காவலர் | வரலாறு | |
12 | 1954 | வையம் போற்றும் வனிதையர் | வரலாறு | |
13 | 1955 | தூது சென்ற தூயர் | இலக்கியக் கட்டுரைகள் | |
14 | 1955 | நீதிபோதனைப் பாடப் புத்தகம் – நான்காம் படிவம் | பாட நூல் | |
15 | 1955 | தொழிலும் புலமையும் | கட்டுரைகள் | |
16 | 1956 | குமுத வாசகம் – முதலாம் படிவம் - சிறப்புப்பகுதி | பாட நூல் | |
17 | 1956 | வள்ளுவர் கண்ட அரசியல்: நாடும் மக்களும் | திறனாய்வு | |
18 | 1957 | தமிழ் இலக்கிய அகராதி | அகராதி | |
19 | 1957 | கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள் | கட்டுரைகள் | |
20 | 1957 | பாண்டிய நாட்டுப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் | இடவரலாறு | |
21 | 1958 | பொய்யடிமையில்லாத புலவர் யார்? | திறனாய்வு | |
22 | 1964 | சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை | உரை | |
23 | 1965 | தமிழ் மந்திர உரை | உரை | |
24 | 1966 | இலக்கியத் தூதர்கள் | கட்டுரைகள் | தூது சென்ற தூயர்கள் நூலின் மறுபதிப்பு. பழைய கட்டுரைகளோடு அன்னம் என்னும் புதிய கட்டுரை சேர்க்கப்பட்டு உள்ளது. |
25 | 1966 | கட்டுரைக் கொத்து | கட்டுரை | |
26 | 1968 | திருவருட்பா விரிவுரை – திருவருள் முறையீடு (முற்பகுதி) – ஒன்பதாம் புத்தகம் | உரை | |
27 | 1968 | திருவருட்பா விரிவுரை – வடிவுடை மாணிக்கமாலை – பதினோராம் புத்தகம் | உரை | |
28 | 1969 | திருவருட்பா விரிவுரை – இங்கிதமாலை – பதிரெண்டாம் புத்தகம் | உரை | |
29 | 1969 | தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள் | இடவரலாறு | |
30 | திருக்குறள் அறத்துப்பால் உரை நடை | உரை | ||
31 | மாணவர் திருக்குறள் விளக்கம் | உரை | ||
32 | அதிகமான் | வரலாறு | ||
33 | தமிழர் போர் முறை | கட்டுரை | ||
34 | கட்டுரைக் கதம்பம் | கட்டுரை | ||
35 | திருமணம் | |||
36 | தமிழ் நூல் வரலாறு | இலக்கிய வரலாறு | ||
37 | தமிழ்ப் புதையல் | கட்டுரை | ||
38 | மாணவர் தமிழ்க் கட்டுரை | கட்டுரை | ||
39 | அறுசுவைக் கட்டுரைகள் | கட்டுரை | ||
40 | ஜான்சன் வாழ்க்கை வரலாறு | வரலாறு | ||
41 | கலை வல்லார் | வரலாறு | ||
42 | பழமை பாராட்டல் | கட்டுரை | ||
43 | நானே படிக்கும் புத்தகம் | |||
44 | இன்பக் கதைகள் | |||
45 | அன்புக் கதைகள் | |||
46 | சிறுவர் கதைக் களஞ்சியம் | |||
47 | நகைச் சுவையும் கவிச்சுவையும் | |||
48 | கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள் | |||
49 | தமிழ்த் தொண்டர் | |||
50 | இலக்கிய வாழ்வு | |||
51 | சீவகன் வரலாறு | |||
52 | மாண்புடைய மங்கையர் | |||
53 | சமரச சன்மார்க்க சத்திய சங்க விளக்கம் | |||
54 | தொடக்கப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் | |||
55 | உயர் நிலைப் பள்ளி மாணவர் இலக்கண விளக்கம் | |||
56 | புதுமுறை இலக்கணமும் கட்டுரைகளும் | |||
57 | உயர் நிலை வகுப்பு செந்தமிழ்ச் சிலம்பு | |||
58 | உயர் நிலை வகுப்பு தமிழ்ப் புதையல் | |||
59 | திருவெம்பாவை உரை | |||
60 | திரு ஈங்கோய் மலை எழுபது உரை | |||
61 | திருவருள் முறையீடு உரை | |||
62 | பல்சுவைப் பாமாலை குறிப்புரை | |||
63 | இங்கிதமாலை உரை |
விருதுகள்
[தொகு]கண்ணப்பர் செய்த தமிழ்த் தொண்டினையும் சைவத் தொண்டினையும் பாராட்டி செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன.[3]
மறைவு
[தொகு]சென்னைப் பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பர், அப்பணி நிறைவுறும் முன்னரே 1971 மார்ச்சு 29 ஆம் நாள் இயற்கை எய்தினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 இராமசாமிப் புலவர் சு. அ., தமிழ்ப் புலவர் வரிசை – பத்தாம் பகுதி – இருபத்தியொன்பதாம் புத்தகம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் சென்னை, 1973
- ↑ கண்ணப்ப முதலியார் பாலூர், திருவருட்பா விரிவுரை –ஒன்பதாம் புத்தகம், முன்னுரை, வடார்க்காடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் வேலூர்,1968 ,பக்.vi
- ↑ கண்ணப்பர் பாலூர் து., சேக்கிழார் பிள்ளைத் தமிழ் மூலமும் விளக்க உரையும், ஶ்ரீ கந்தப்பெருமான் தேவத்தானம் திருப்போரூர், 1964, தலைப்புப் பக்கம்