பார்னம் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பார்னம் விளைவு (Barnum effect) என்பது பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய, பொத்தாம்பொதுவான சில ஆளுமை தொடர்பான விவரணைகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவது பற்றிய அவதானிப்பைக் குறிக்கிறது. இது ஃபோரெர் விளைவு (Forer effect) என்றும் அழைக்கப்படுகிறது. சோதிடம், குறிசொல்லுதல், கையெழுத்து ஆளுமையியல், முன்னுணர்ந்து சொல்லுதல், சில குறிப்பிட்ட ஆளுமைத் தேர்வுகள் போன்றவை பரவலாக ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்பதற்கான காரணத்தை ஓரளவு இவ்விளைவு விளக்குகிறது எனலாம்.

மேற்கூறியவாறு பொத்தாம்பொதுவான- ஆனால் பலரும் தம்மையே குறிப்பதாகக் கருதிக்கொள்ளக்கூடிய- விவரிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:

  1. பிறர் உங்களை விரும்ப வேண்டும்; உங்களைப் பார்த்து வியக்கவேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு உண்டு
  2. நீங்கள் இதுவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாத ஆற்றல் உங்களிடம் ஒளிந்துகிடக்கிறது
  3. உங்கள் ஆளுமையில் சில பலவீனங்கள் இருந்தாலும் அவற்றைப் பொதுவாக உங்களால் ஈடுசெய்துகொள்ள முடிகிறது
  4. வெளிப்பார்வைக்கு ஒழுக்கமாகவும், சுயகட்டுப்பாடோடும் இருந்தாலும் உள்ளே கவலையாகவும், பாதுகாப்பின்றியும் உணர்கிறீர்கள்
  5. சில சமயங்களில் உங்களுக்கு நாம் எடுத்த முடிவு சரியா, நாம் செய்த செயல் சரியானதுதானா என்ற சந்தேகம் எழுகிறது
  6. கொஞ்சமாவது மாற்றமும், தினுசுகளும் இருந்தால்தான் உங்களுக்குப் பிடிக்கும். கட்டுப்பாடுகளும், வரன்முறைகளும் உங்களைச் சிறைப்படுத்தும்போது எரிச்சலடைவீர்கள்
  7. உங்களுடைய சில எதிர்பார்ப்புகள் நடைமுறைக்கு ஒவ்வாதனவாக இருக்கின்றன
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்னம்_விளைவு&oldid=1890032" இலிருந்து மீள்விக்கப்பட்டது