பார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்று பாய்மரங்களைக் கொண்ட பார்க், ஐ.அ. இறைவரி கட்டர் சல்மன் பி. சேசு, 1878–1907)
மூன்று பாய்மரங்களைக் கொண்ட பார்க் பாய்த் திட்டம்

பார்க் (barque, barc, அல்லது bark) என்பது, ஒரு வகையான பாய்க்கப்பல். இது, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்டது. முன் பாய்மரமும், முதன்மைப் பாய்மரமும் குறுக்குப் பாயமைப்புக் (rigged square) கொண்டது. பின் பாய்மரம் முன்-பின் பாயமைப்புக் (rigged fore-and-aft) கொண்டது.

பெயர்[தொகு]

18ம் நூற்றாண்டில், பிரித்தானிய அரச கடற்படை, அதன் வழமையான வகைப்பாட்டுக்குள் அடங்காத ஒரு கப்பலுக்கு "பார்க்" என்ற பெயரைப் பயன்படுத்தியது. பிரித்தானியக் கடற்படைத் தலைமை யேம்சு குக்கின் ஆய்வுப் பயணத்துக்காக ஒரு கப்பலை வாங்கியபோது, அதை எ.எம்.பார்க் என்டெவர் என்னும் பெயரில் பதிவு செய்தனர். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த சுலூப் வகைக் கப்பலான "என்டெவர்" என்பதில் இருந்து வேறுபடுத்துவதற்காகவே "பார்க்" என்னும் சொல் சேர்க்கப்பட்டது.

பாயமைப்பு[தொகு]

18ம் நூற்றாண்டின் இறுதியில், "பார்க்" என்னும் பெயர், ஒரு குறித்த வகையான பாய்த் திட்டம் கொண்ட எந்தவொரு கப்பலையும் குறிக்கப் பயன்பட்டது. இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களையும், பின் பாய்மரத்தில் முன்-பின் பாயமைப்பும், ஏனைய பாய்மரங்களில் குறுக்குப் பாயமைப்பும் கொண்டதாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் பாய்க்கப்பல்களின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலத்தில் "பார்க்" கப்பல்கள் முக்கிய பங்காற்றின. குறைந்த பணிக்குழுவுடன் இயங்கிய போதிலும், கடல்வழிகளைக் கண்டடைவதில் முழுப் பாயமைப்புக் கப்பல்களுக்கு இணையாக இவை விளங்கின.

உழைப்புச் செறிவு கொண்ட குறுக்குப் பாய்கள் குறைவாக இருப்பதால், முழுப் பாயமைப்புக் கப்பல்கள், "பிரிக்" பாயமைப்புக் கப்பல்கள் ஆகியவற்றைவிடக் குறைந்த பணிக்குழுவுடன் இயங்க முடிவது "பார்க்" கப்பல்களின் சாதகமான தன்மைகளுள் ஒன்று. இவற்றின் பாயமைப்பும் செலவு குறைவானது. இசுக்கூனர், பாக்கென்டைன் போன்ற கப்பல்களைவிடத் திறமையாகச் செயற்படக்கூடிய "பார்க்", கையாள்வதற்கு இலகுவானதும், காற்றின் திசையில் செல்வதற்கு முழுப் பாயமைப்புக் கப்பல்களிலும் சிறந்ததுமாகும். பொதுவாக முழுப் பாயமைப்புக் கப்பல்களே அக்காலக் கப்பல்கள் அனைத்திலும் சிறந்தது எனினும், முன்-பின் பாயமைப்புக் கப்பல்களே காற்றின் திசையில் செல்ல மிகவும் உகந்தவை. இதனால், இரண்டினதும் சிறப்புக் கூறுகளைக் கொண்ட "பார்க்" நல்ல இணக்கமான தீர்வாக அமைந்தது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

நல்ல நிலையில் உள்ள வணிக "பார்க்"குக்கான ஒரு எடுத்துக்காட்டு பொமேர்ண் ஆகும். இது இப்போது ஆலண்ட் கடல்சார் அருங்காட்சியகத்தில் உள்ளது. 1887ல் கட்டப்பட்ட சிகின் எனும் மரத்தாலான "பார்க்" ஒரு அருங்காட்சியகக் கப்பலாக துர்க்குவில் உள்ளது. 1841ல் வெள்ளோட்டம் விடப்பட்ட மரத்தாலான திமிங்கில வேட்டைக் கப்பலான சார்லசு டபிள்யூ. மோர்கன் என்னும் "பார்க்" 1921ல் சேவையில் இருந்து விலக்கப்பட்டு,[1] ஒரு அருங்காட்சியகக் கப்பலாக இப்போது கானெக்டிக்கட்டில் உள்ள மிசுட்டிக் துறைமுகத்தில் உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sailing Ships". Sailing-ships.oktett.net. Archived from the original on 2012-02-19. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.
  2. "Mystic Seaport homepage". MysticSeaport.org. Archived from the original on 2013-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்&oldid=3562808" இலிருந்து மீள்விக்கப்பட்டது