பாய்க்கப்பல்

தற்காலத்தில் பாய்க்கப்பல் என்பது எந்தவொரு பெரிய காற்றின் ஆற்றலால் செலுத்தப்படும் கப்பலையும் குறிக்கும். மரபுவழியாக, சதுரவடிவான பாய்கள் பொருத்தப்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களே பாய்க்கப்பல்கள் எனப்பட்டன. பாய்க்கப்பல்கள் அவற்றின் அமைப்புக்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இசுக்கூனர், பார்க், பிரிக், பார்க்கென்டைன், பிரிகன்டைன், சுலூப் என்பன இவற்றுள் அடங்கும்.[1]
இயல்புகள்[தொகு]
பாய்க்கப்பல்கள் பல்வேறுபட்ட வகைகளாக உள்ளன. ஆனால், அவை அனைத்துக்கும் பொதுவான சில இயல்புகள் உள்ளன. ஒவ்வொரு பாய்க்கப்பலுக்கும், கப்பலின் வெளிச்சுவர் (Hull), பாயமைப்பு (rigging) என்பவற்றுடன் கப்பலைச் செலுத்துவதற்கான ஆற்றலைப் பெறுவதற்காகக் காற்றைப் பயன்படுத்தும் வகையில், பாய்களை இணைப்பதற்கான ஒன்றுக்குக் குறையாத பாய்மரம் என்பன இருக்கும்.
கப்பலைச் செலுத்துவதற்கான பணிக்குழுவினர் மாலுமிகள் எனப்படுகின்றனர். கப்பலைச் செலுத்துவதில் அவர்கள் முறை எடுத்துக்கொன்டு கண்காணிப்புச் செய்கின்றனர். இக்கண்காணிப்பு என்பது குறித்த காலத்துக்குக் கப்பலின் செயற்பாட்டைக் கவனித்து அதை மேலாண்மை செய்யும் பொறுப்பு ஆகும். பொதுவாக ஒரு கண்காணிப்புக் காலம் நான்கு மணிநேரம் ஆகும். சில பாய்க்கப்பல்கள் நேரத்தை அறிவிக்கவும், கண்காணிப்பு முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கும் கப்பல் மணிகளைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் மணி அடிக்கப்படும். ஒரு நான்கு மணிநேரக் கண்காணிப்புக் காலத்திலும் எட்டு முறை மணி அடிக்கும்.[2][3]
பாய்க்கப்பல்கள் மூலமான கடற்பயணம் பல மாதங்கள் எடுக்கக்கூடியது. காற்றில்லாமல் கப்பல் அசைவற்று நின்றுவிடுதல் அல்லது பெருங் காற்று, புயல் என்பவற்றினால் திசைமாறிச் செல்லுதல் அல்லது காற்றினால் உரிய திசையில் செல்ல முடியாதிருத்தல் என்பன பொதுவான இடர்கள். பெருங் காற்றினால் கப்பல்கள் பாறைகளில் மோதி உடைவதும், கப்பலில் இருப்பவர்கள் இறந்துவிடுவதும் உண்டு.
பாய்க்கப்பல்களின் ஆகக்கூடிய அளவு வெப்ப எந்திரக் கப்பல்களின் அளவுகளுடன் ஒப்பிடும்போது குறைவானது. இதனால் அளவினால் கிடைக்கக்கூடிய சிக்கனமும் மட்டுப்படுத்தப்பட்டதே. பாய்களை மட்டுமே உந்து ஆற்றலாகக் கொண்ட பாய்க்கப்பல்களின் அதிகூடிய எடை 14,000 தொன்கள் (இடப்பெயர்ச்சி) ஆகும். இதனால் பாய்க்கப்பல்களில் கொண்டு செல்லத்தக்க வழங்கல் பொருட்களின் அளவும் குறைவாக இருப்பதால், நீண்ட பயணங்களை மேற்கொள்ளும்போது தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல நிறுத்தங்களை உட்படுத்தித் திட்டமிடல் வேண்டும்.
பாய்க்கப்பல் வகைகள்[தொகு]
பெரும்பாலும் பாயமைப்பு, உடற்சுவர், அடிப்பாகம், பாய்மரங்களின் எண்ணிக்கையும் அமைப்பும் ஆகியவற்றைக் கொண்டு வேறுபடுத்தப்படும் பலவகையான பாய்க் கப்பல்கள் உள்ளன. இங்கே பட்டியலிடப்படாத பல சிறியவகைப் பாய்க்கப்பல்களும் உள்ளன.[4] கீழே பட்டியலிடப்பட்டுள்ள பாய்க்கப்பல் வகைகளின் பொருளும் காலப்போக்கில் மாற்றம் அடைந்துள்ளன.
- பார்க்
- பார்க்கென்டைன்
- பைலான்டர்
- பிரிக்
- பிரிகன்டைன்
- கராவெல்
- காராக்
- கட்டமரான்
- கிளிப்பர்
- கொக்
- கோர்வேட்
- கட்டர்
- டோ
- டிங்கி
- பிரிகேட்
- மீன்பிடி சிமாக்
- புளுயிட்
- முழுப்பாயமைப்புக் கப்பல்
- கலியன்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Parker, Dana T. Square Riggers in the United States and Canada, pp. 6-7, Transportation Trails, Polo, IL, 1994. ISBN 0-933449-19-4.
- ↑ Tony Gray. "Workshop Hints: Ship's Bells". The British Horological Institute இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110612045510/http://www.bhi.co.uk/aHints/ships.html. பார்த்த நாள்: 12 June 2011.
- ↑ "Ship's Bell". National Maritime Museum இம் மூலத்தில் இருந்து 2008-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081209002216/http://www.nmm.ac.uk/collections/nelson/viewObject.cfm?ID=EQA0482. பார்த்த நாள்: 2008-04-07.
- ↑ "Classes and Equipment". International Sailing Federation. http://www.sailing.org/boatclasses.php. பார்த்த நாள்: 17 June 2011.