தமிழ் பாணர்
தமிழ் பாணர் (Tamil Panar) என்பவர்கள் இந்திய துணைக்கண்டத்தின், தமிழகத்தில் வாழ்ந்த இசை சமூகத்தினர் என்று பண்டைய சங்க கால நூல்கள் முதல் இடைக்கால கல்வெட்டுகள் வரை தெரிவிக்கின்றன. இவர்கள் பல்வகையான இசைக் கருவிகளை முழக்கிக்கொண்டு ஊர் ஊராக நாடோடிகள் போன்று செல்வது உண்டு. யாழ் இவர்களின் முதன்மையான கருவி. பண்ணிசைத் தொழிலால் இவர்கள் பாணர் எனப்பட்டனர். பாணாற்றுப்படை இவர்களின் புறவாழ்க்கையைப் புலப்படுத்தும். பாணாற்றுப்படைப் பாடல்களும், சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை நூல்களும் இவர்களின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இவர்கள் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாகக் கொண்டோர். அவர்கள் யாழ் என்ற இசைக் கருவியின் துணையோடு தங்கள் பாடல்களைப் பாடினர்.[1] இக் கலைகளில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்.
அகத்திணைப் பாடல்களில் தலைவியின் ஊடலைத் தீர்த்துவைக்கும் வாயில்கள் பன்னிருவரில் ஒருவராக, இவர்கள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
பழந்தமிழர்கள்
[தொகு]பழங்காலத்தில் பாணர்கள் என்னும் குடியினர் இருந்தனர். பாணர் குடியிருக்கும் பகுதி பாண்சேரி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது போன்றவற்றைச் செய்வார்கள். அவர்களைப் பல மன்னர்கள், குறுநில மன்னர்கள், செல்வர்கள் முதலியோர் ஆதரித்து வந்தனர். அவர்களில் பெண்பாலர்களை 'விறலியர்' என்பார்கள். பாணர்களின் முக்கிய இசைக்கருவி யாழ் ஆகும். யாழில் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருந்தன. சகோட யாழ், சீறியாழ், பேரியாழ் போன்றவை. ஆயிரம் நரம்புகள் உள்ள யாழும் இருந்திருக்கிறது. பாணர்களில் சிலர் மன்னர்களுக்காக தூதுகூட சென்றிருக்கிறார்கள். சங்ககாலத்திலிருந்து பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரைக்கும் பழைய பாணர் குடி இருந்திருக்கிறது.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு ராஜராஜசோழர் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப்பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான நீலகண்ட யாழ்ப்பாணர் குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை ( மதங்கசூளாமணி ) வைத்துப் பண்முறை வகுத்தனர்.
மாறவர்மன் சுந்தர பாண்டியர் சோழநாட்டின் மீது படையெடுத்த பின்னர் சோழனுடைய திருமுடி ஆகியவற்றைப் பாணனுக்குப் பரிசிலாகக் கொடுத்ததாக அவருடைய கல்வெட்டுக் கூறுகிறது. துருக்கர் படையெடுப்புக்குப் பின்னர் இக்குடியினர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. [2]
பாணர்க்கு வழங்கும் தொழிற்பெயர்கள்
[தொகு]இசைக்கருவியில் பண்ணப்படுவது பண்.
- பண்ணிசையுடன் பாடுவர் பாணர்.
- பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்.
- பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.
- கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.
- அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் கூத்தநூல்கள் [3]
- சிறுபாண்
- ஏழு நரம்புகள் கொண்ட சீறியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள்.
- பெரும்பாண்
- 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டிக்கொண்டு பாடுபவர்கள்.
பாணர் பிரிவுகள்
[தொகு]அக்காலத்தில் இவர்கள் இசைப்பாணர்கள், யாழ்ப்பாணர்கள், மண்டைப்பாணர்கள் (இரந்துண்டு வாழ்பவர்) என மூவகைப்படுவர். இவருள் யாழ்ப்பாணர் யாழின் அளவைப் பொறுத்து சீறியாழ்ப்பாணர், பேரியாழ்ப்பாணர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். இக்காலத்தில் பாணான், மேஸ்திரி, தையல்காரர்பிள்ளை என்று அழைக்கப்படுகிறார்கள்.
திருமண உறவுகள்
[தொகு]பாணர்கள் தங்கள் உறவுக்குள்ளேயே அத்தை மகள், மாமன் மகள்களை திருமணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பாணர்கள் 18 கிளைகள் கொண்டவர்கள். கிளைகள் தாய்வழி வருவது. தாய்வழி உறவு முறை கொண்ட பழமையான சமூக கட்டமைப்பு கொண்ட சாதிகளில் பாணரும் ஒன்று!
இலக்கியங்களில் பாணர்
[தொகு]சங்க இலக்கியங்களான சிறுபாணாற்றுப்படை இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ (சிறுபாண்:35), பெரும்பாணாற்றுப்படை, நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் பாணர்களைக் குறித்த பல செய்திகள் காணப்படுகின்றன.
பக்தி இலக்கியத்தில் பாணர்
[தொகு]அக்காலத்தில் பக்தி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது. அதே போல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
பாணர்களின் சிறப்பு
[தொகு]யாழ் வாசிப்பில் மிகுதிறமை பெற்ற ஒரு வகுப்பினரே யாழ்ப் பாணர் என்றழைக்கப்பட்டனர்.பாணர்களில் ஒருவருக்கு நாயன்மார் வரிசைகளில் இடம்கொடுத்து அழகு செய்தது பழந்தமிழகம். தேவாரப்பண்களுக்கு பண்ணும் இசையும் செய்வித்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இலங்கையின் யாழ்ப்பாணம் என்னும் ஊர் ஒரு யாழ் வாசிப்பில் நல்ல திறன் பெற்ற ஒரு பாணருக்கு இலங்கை அரசனால் பரிசளிக்கப்பட்ட ஊராதலின் அந்த ஊருக்கே யாழ்ப்பாணம் என்று பெயர் ஏற்பட்டது.[4]
பல்வேறு காலங்களில் சமூகநிலை
[தொகு]இச்சமூகத்தினர் பாரம்பரியமாக தீண்டத்தகாதவர்களாக தமிழ் தொன்ம இலக்கியங்களில் கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையில் இவர்கள் இன்றுவரை தீண்டத்தகாதவர்கள் அல்லர். இடைக்கால கல்வெட்டுகளில் இவர்கள் சமசுகிருத நாடகங்கள் நடிப்பவர்கள், பாடல் பாடுபவர்கள் என்றும் பிராமணீய கோவில்களில் நடனக் கலைஞர்களுக்கு நடனம் கற்றுக் கொடுப்பவர்கள் என்றும் ஆதாரங்களைத் தெரிவிகின்றன.[5] தமிழகத்தின் இடைக்காலத்தில் வாழ்ந்த பாணர்களைப் பற்றிய எந்தவொரு புள்ளி விவரங்களையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் பாணர்கள் குறித்த சமூகநிலை பற்றிய சுவாராசியமான செய்தியாகும். பாணர்களைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட சமூகநிலையை தெரிவிக்கும் அத்தகைய உண்மையான தகவல்கள் நமக்கு தமிழ் கல்வெட்டுகள் மூலம் கிடைக்கின்றன.
பாணர்கள் வீழ்ச்சி
[தொகு]சங்ககாலத் தமிழகத்தில் இசை மக்களின் வாழ்வில் மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. இசை வல்லுனர்களான பாணர்களும், பாடினிகளும் நிறைந்திருந்தனர். அவர்கள் ஊர்கள் தோறும் சென்று, வள்ளல்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வந்தனர். பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற இரு சங்க நூல்கள் பாணர்களின் பெயரைத் தாங்கியுள்ளன. வாழ்க்கையின் இன்பங்களையும் சரி, துயரங்களையும் சரி, பாடல்களாகப் புனைந்ததோடு மட்டுமல்லாமல், யாழ், முழவு (மிருதங்கம்) முதலிய கருவிகளின் துணையோடு அவற்றை இசைக்கும் கலாசாரமும் செழித்து வளர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாகவே, தொடக்க கால சமண காவியமான சிலப்பதிகாரத்தில் இசையும், நடனமும் முக்கிய இடத்தைப் பெறுவதைப் பார்க்கின்றோம்.
ஆனால், வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அல்லாமல், கர்மவினையின் சுழற்சியாகவே பார்க்கும் தன்மையை மிக அதிகமாக பிற்காலச் சமணம் வலியுறுத்தத் தொடங்கியது. இசை என்கிற கலை மேன்மையான விடயமாக அல்ல, மேலும் மேலும் வினையில் ஆழ்த்தும் ஒரு பந்தமாக, மனித மனத்தை மயக்கி வீழ்த்தும் விடயமாகவே சமண இறையியலில் கூறப்பட்டது. அதனால் களப்பிரர் ஆட்சியின் வளர்ச்சி நிகழ்கையில் இசையின் வீழ்ச்சி தொடங்கியது. பாணர்கள் சமூக அடுக்கில் கீழ்நோக்கிச் சென்றனர். பாணர்களை ”இழிசினர்” என்ற கீழ்ச்சாதியினருடன் இணைத்துக் கூறும் ஒரு சங்கப் பாடல் இந்தப் போக்கைக் காட்டுகிறது.
காலப் போக்கில், இசையும், பாணர்களும், பாடினிகளும் தமிழ் மண்ணிலிருந்து ஏறக்குறைய அழிந்தே போகும் தறுவாயிலிருந்தார்கள். நான்மணிக்கடிகை என்ற பதினெண்கீழ்க்கணக்கு நூலில் ”பண் அமைத்துப் பாடுபவர்கள் இல்லையே, யாழ் இசைப்பவர்கள் இல்லையே” என்றெல்லாம், நல்ல இசையைக் கேட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் தொனிக்கும் வரிகளைக் காணலாம் - “பறை நன்று பண்ணமையா யாழின்”, “பண்ணதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும்”. இன்னா நாற்பது என்ற நூலும், “பண்ணமையா யாழின் கீழ்ப் பாடல் பெரிதின்னா” என்று புலம்புகிறது. இஸ்லாமியக் கொடுங்கோலன் ஔரங்கசீப் தனது மதநம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி, தனது ஆட்சிக் காலத்தில் இசையைத் தடைசெய்தான்.[6]
பொருளாதார நிலை
[தொகு]திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை, நாகர்கோயில், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் வீடும் வயல்களுமாக சிறப்போடு பாணர் வாழ்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சொத்துக்களையும் இழந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பொருளாதாரம் முதலியவற்றில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழும் நிலை காணப்படுகிறது.
முற்காலத்தில் யாழ் இசைத்து, இறைவனுக்குத் தொண்டு செய்யும் பணி இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் விழாக்காலங்களில் தேர் அலங்கார வேலைகள், அலங்காரக் கடைகள், ஆண்டவனுக்குரிய ஆடைகள் தைத்தல், பந்தல் போடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அரசாங்க மாற்றத்தால் கோயில்கள் மூலம் கிடைத்த வருமானம் நின்றுவிட்டது. தையல் தொழில், பந்தல் தொழில், கூலித் தொழில் செய்து வாழத் தொடங்கிவிட்டனர். பெண்கள் பீடி சுற்றுதல், தீப்பெட்டி ஒட்டுதல் போன்ற தொழிலைச் செய்து கொண்டுள்ளனர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவில் அரசு உயரதிகாரிகள், அதிகாரிகள்,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நகர்மன்ற, பஞ்சாயத்து உறுப்பினர் என்று யாரும் கிடையாது. இச்சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான அரசியல் தலைவர்களும் இல்லை.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு)
- திருப்பாணாழ்வார் (கி.பி. 8–9 ஆம் நூற்றாண்டு)
இவற்றையும் காணவும்
[தொகு]மேலும் பார்க்க
[தொகு]- பாணர் (குந்தாபுரா), கர்நாடகத்தில் வாழும் நவீன கால சமூகம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zvelebil, Kamil Veith (1995). Lexicon of Tamil literature. Leiden: E.J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-10072-5.
- ↑ டாக்டர் எஸ்.ஜெயபாரதி எழுதிய நந்திவர்மரின் பாணன் கட்டுரை
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 197
- ↑ பாரம்பரிய இசையின் வடிவம் கர்நாடகம்
- ↑ Palaniappan, S. "Hagiography Versus History: The Tamil Pāṇar in Bhakti-Oriented Hagiographic Texts and Inscriptions", The Archaeology of Bhakti II: Royal Bhakti, Local Bhakti, Institute Francais de Pondichery பரணிடப்பட்டது 2017-04-30 at the வந்தவழி இயந்திரம், 2016.
- ↑ சம்பந்தரின் சமூக மீட்சியும், கழுவேற்றமும் கட்டுரை