பாடம் செய்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிகாம் யங் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வில்லியம் டபில்யூ தன்னர் ஒரு பாடம் செய்யப்பட்ட புலியுடன்.

பாடம் செய்தல் என்பது ஆங்கிலத்தில Taxidermy என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. கிரேக்க மொழியில் இந்தச் சொல்லுக்கு தோல் போர்த்தல் என்ற பொருள்படும்.[1] இது ஒரு கலையாகும். விலங்குகளின் உடலை காட்சிப்படுத்த (எ.கா. முதுகெலும்பிகள்) அதன் தோலை உறித்து பாடம் செய்து வைத்தலாகும். அக்காலத்தில் வேட்டையாடிய காட்டு விலங்குகளை இவ்வாறு பாடம் செய்து தனிநபர்கள் காட்சிப்படுத்தினர். தற்காலத்தில் அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்த அல்லது ஆய்வு நோக்கோடு விலங்கு இனங்களை அடையாளம் காண பாடம் செய்யப்படுகிறது. தற்கால செல்வந்தர்கள் தங்கள் செல்லப்பிராணிகள் இறந்தால் அதை பிரிய மனமின்றி அதன் உடலை பதப்படுத்தி வைக்க இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு பாலூட்டிகள், பறவைகள், மீன்கள், ஊர்வன, நீர்நில வாழ்வன ஆகியவன பாடம் செய்யப்படுகின்றன.

இந்தோனேசியாவின் சுமத்தாவில் உள்ள பன்னாட்டு காட்டுயிர் அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்ட விலங்குகள்

விலங்குகளை பாடம் செய்பவர் டாக்சிடெர்மிஸ்ட் என அழைக்கப்படுகிறார். இவர்கள் அருங்காட்சியகங்கள் அல்லது தொழில்முறை வேட்டைக்காரர்களிடம் பணிபுரிகின்றனர். மேலும் மீனவர்களுக்கு உதவியாகவும், பொழுதுபோக்குக்காகவும், உடற்கூறியல், சிற்பம், ஓவியம், மற்றும் தோல் பதனிடுதல் போன்றவற்றிற்காக இப்பணிகள் செய்யப்படுகின்றன.

பாடம் செய்யும் முறை[தொகு]

விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் உடலைப் பதப்படுத்தும் கலை சிற்பம், ஓவியம், தச்சு, தோல் தையல், உடற்கூறியல் என ஐந்து கலைகளின் சேர்க்கையாகும். இறந்துபோன விலங்கின் உடலை பாடம் செய்ய மொத்தம் ஏழு நிலைகள் உள்ளன. முதல் நிலை விலங்கு இறந்த உடனே தோலை உரித்தல், இரண்டாவது நிலை விலங்கின் கழுத்து, வயிறு போன்ற உடல் அளவை எடுத்துக் கொள்ளுதல், மூன்றாம் நிலையானது தோலில் எஞ்சி ஒட்டியுள்ள சதைகளைக் கவனமாக நீக்குதல், நான்காம் நிலை எலும்புகளைப் பிரித்தெடுத்தல், எலும்புகளை உடையாமல் பிரித்தெடுத்தலே முதன்மையானது. இதில் எலும்புகள் உடைந்துவிட்டால் உயிரினத்தைப் பாடம்செய்வதில் சிரமம் ஏற்படும், உடல் வடிவமைப்பும் சரியாக வராது. ஐந்தாம் நிலையாக காட்டுயிரை எந்த வடிவில் அதாவது கர்சிப்பது போலவா நடப்பது போலவா பாடம்செய்வது என்பதை முடிவு செய்து அதே அளவு, நிறையுள்ள மாதிரி உடலமைப்பை எடைகுறைந்த கண்ணாடி இழை, காகிதக்கூழ், போன்றவற்றைப் பயன்படுத்தி உருவாக்குதல், ஆறாம் நிலையானது ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள எலும்புக் கூடான மாதிரி உருவத்தின் மீது பதப்படுத்தப்பட்ட உண்மையான தோலைப் போர்த்துதல் ஆகும். ஏழாம் நிலையில் கண்ணாடி கண்கள் பொருத்தி இதர உறுப்புகளை ஒப்பனை செய்து பதப்படுத்தப்பட்ட உருவம் உருவாக்கப்படுகிறது.[2]

இந்தியாவில்[தொகு]

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் விலங்குகளின் உடலைப் பதப்படுத்தும் முறை மிகவும் பிரபலமாக இருந்தது. மகாராசாக்களும், பிரித்தானிய ஆட்சியாளர்களும் வேட்டையாடிய விலங்குகளின் உடலைப் பதப்படுத்தி தங்களின் மாளிகைகளில் ஆடம்பரமாக வைத்து, அதன் அருகில் நின்று ஒளிப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்திய விடுதலைக்குப்பின், 1972 இல் இயற்றப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் வேட்டையாட தடை விதித்தது. எனவே, உடலைப் பதப்படுத்தும் கலையும் இந்தியாவில் வழக்கொழிந்தது.

இந்தியாவின் விலங்கு, பறவைகள் உடலைப் பதப்படுத்தும் ஒரே டாக்ஸிடெர்மி மையம் மும்பை தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இம் மையத்திற்கு இயற்கையாகவோ, விபத்து காரணமாகவோ இறக்கும் வனவிலங்குகளின் உடலை, அருங்காட்சியகங்களில் வைப்பதற்கான கோரிக்கையுடன் வந்தால், அதனை பதப்படுத்தித் தருகிறானர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harper, Douglas. "taxidermy". Online Etymology Dictionary. http://www.etymonline.com/index.php?term=taxidermy. பார்த்த நாள்: 17 July 2010. 
  2. ந. வினோத் குமார் (செப்டம்பர் 30 2017). "உயிர்த்தெழச் செய்யும் கர்த்தா". தி இந்து தமிழ். 
  3. "விலங்கு, பறவைகளின் உடலைப் பதப்படுத்தும் நிபுணர்". தி இந்து (தமிழ்). 18 சூன் 2016. http://tamil.thehindu.com/india/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/article8744469.ece. பார்த்த நாள்: 18 சூன் 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடம்_செய்தல்&oldid=3577758" இருந்து மீள்விக்கப்பட்டது