பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி
பலியிடுவதற்காக மாலை அணிவித்து நிறுத்தப்பட்டுள்ள ஆடு
பலியிடப்பட்ட ஆடு
கோயிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் அசைவச் சாப்பாடு தயார் செய்யப்படுதல்

பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில் தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் இருக்கும் முல்லை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழனிசெட்டிபட்டி அணை என்கிற சிறிய அணையின் அருகில் இருக்கிறது. இந்த அணைக் கருப்பசாமி இந்த ஊரிலிருக்கும் அனைவராலும் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

கோயில் வரலாறு[தொகு]

தமிழகத்தில் இருக்கும் நீர்வளங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் நீர்நுண்ணளவுத் துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் முல்லை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை இந்த ஊரிலிருக்கும் பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் நிர்வாகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அணையின் பராமரிப்பு, நீர் பகிர்மானம் உட்பட அனைத்துப் பணிகளையும் இந்த அமைப்பே தனிப்பட்ட முறையில் செய்து வருகிறது. இதற்காக ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கு சிறப்பு செப்புப்பட்டயம் வாயிலாக உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அணைக்கு அருகே இந்த நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்ட கோயில்தான் அணைக் கருப்பசாமி கோயில்.

காவல் தெய்வம்[தொகு]

முதலில் இந்த ஊரின் தொடக்கக் காலத்திலிருந்த தேவாங்கர் எனும் தேவாங்க செட்டியார் சமூகத்தவர்கள் மட்டும் இந்தக் கோவிலில் வழிபட்டு வந்தனர். இந்தப் பகுதியில் நூற்பாலைகள் போன்ற சில தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டதால் இந்த நிறுவனங்களில் வெளியூர்களிலிருந்து பணிக்கு வந்து சேர்ந்தவர்கள் இந்த ஊரில் அதிக அளவில் குடியேறத் துவங்கினர். பின்னர் அவர்களும் இந்தக் கோவிலில் வழிபாடுகள் செய்யத் துவங்கினர். தற்போது இந்த ஊரில் இருக்கும் அனைவராலும் அணைக் கருப்பசாமி காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

வழிபாடு[தொகு]

இந்த ஊரில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலாவது முடி எடுக்கும் முன்பாக இந்த அணைக் கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்வது நல்லது என்பது நடைமுறையாகி இருக்கிறது. இந்த வழிபாட்டில் அணைக் கருப்பசாமிக்கு ஆடு, கோழி என்று ஏதாவது ஒன்று பலியிடப்பட்டு அதை அசைவச் சமையல் செய்து அத்துடன் மதுவகைகள், சுருட்டு போன்றவை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் அந்தக் கோவிலுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் அசைவ உணவளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.