பள்ளிகொண்டா உத்தர ரங்கம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தர ரங்கநாதர் கோயில்
பெயர்
பெயர்:உத்தர ரங்கநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:பள்ளிகொண்டா
மாவட்டம்:வேலூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா

பள்ளிகொண்டா உத்தர ரங்கம் கோயில், என்பது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டாவில் அமைந்துள்ளது.

தொன்மம்[தொகு]

திருமகளுக்கும், கலைமகளுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து கலைமகள் பிரம்மனிடம் கேட்டபோது திருமகளே உயர்ந்தவர் என்று முடிவு கூறினார். இதனால் கோபம் கொண்ட கலைமகள் கணவனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்து சஹய பர்வதத்தில் வசிக்கிறாள்.

பிரம்மாவுக்கோ தனிமை. சத்யவிரத சேத்திரத்தில் ஓர் அசுவமேத யாகம் செய்ய முனைகிறார். கலைமகள் அந்த யாகத்தை அழிக்க விரைகிறாள். நதி உருவில் பெருக்கெடுத்து யாகசாலைக்குள் புக எண்ணுகிறாள். பிரம்மா தம் தந்தை மகா விஷ்ணுவிடம் சரண் அடைகிறார். முன்னமேயே அம்பரீஷ முனிவர் தவத்துக்கு இரங்கிப் பூலோகத்தில் அவருக்குக் காட்சி தருவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார் அவர். ஆகவே, முனிவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும், பிரமனது வேண்டு கோளைப் பூர்த்தி பண்ணவும், விரைந்து இப்பூமிக்கு இறங்கி, பெருக்கெடுத்து வரும் ஆற்றுக்குக் குறுக்கே சங்கு சக்ரதாரியாய், ஆதிசே சயனனாகத் தெற்கே தலையும் வடக்கே காலுமாகப் பள்ளிகொண்டு விடுகிறார், பாலாறாய்ப் பெருகி வந்த சரஸ்வதியை மேற்கொண்டு போக விடாமல் தடுத்து விடுகிறார். அம்பரீஷருக்கும் சேவை சாதிக்கிறார். கல்வியறிவால் ஏற்படும் அகங்காரத்திற்கு அணை போட்டு, அறிவை வளரச் செய்யும் பெருமாளாக, இப்பள்ளி கொண்டான் உத்தர ரங்கத்திலே பள்ளி கொள்கிறார்.

கோயில்[தொகு]

சந்நிதித் தெருவில் உள்ள தேரடியில் இருக்கும் சிறிய திருவடி கோயிலில் அஞ்சலி அஸ்தராக ஆஞ்சநேயர் இருக்கிறார். இவருக்கு மேற்கே நடந்தால் திருவந்திக் காப்பு மண்டபம் கோபுர வாசல் எல்லாம் கடந்து கோயிலை அடையவேண்டும். கோயிலுக்கு அருகே உள்ள ஒரு சிறு மாடத்தில் மேற்கே தலையும், கிழக்கே காலும் நீட்டிக் கொண்டு, ஒரு சிறு ரங்கநாதர் இருக்கிறார். கஸ்தூரி ரங்கர் என்ற இவரை அங்குள்ளவர்கள் சோட்டா ரங்கநாதர் என்றும் அழைக்கின்றனர். தென்னகத்தின் மீது முகம்மதியர்கள் படையெடுத்துக் கோயில்களை சூறையாடிக் கொண்டு வந்த போது, இந்தத் தலத்தில் உள்ளவர்கள் பள்ளி கொண்டானைக் காப்பாற்றக் கருவறைக்கு முன் ஒரு பெரிய சுவர் எழுப்பி, அவருக்குப் பதிலாக இந்தச் சிறிய ரங்கநாதரை உருவாக்கி, வெளியே கிடத்தியிருக்கிறார்கள். கோயிலுக்குள் நுழைந்த முகமதியர், இவர்தானா உங்கள் சாமி? இது என்ன சோட்டா சாமி?’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி விட்டார்கள் என்பது செவிவழி செய்தி.

கருவறையில் இருக்கும் பள்ளி கொண்டான் நல்ல ஆஜானுபாகுவாக. கிரீடம், குண்டலம், திருமண்காப்பு, வேட்டி, உத்தரீயம் போன்றவற்றை சாத்திக் கொண்டு, திருவனந்தாழ்வான் என்னும் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி அவரது கையைத் தாங்கப், பூதேவி திருவடிகளை வருடிக் கொண்டிருக்கிறாள். நாபிக் கமலத்தில் நான்முகன் உள்ளார்

கோயிலின் மேலப்பிராகாரத்திலே இராமன், கண்ணன், ஆண்டாள் முதலிய மூவருக்கும் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. கோயில் பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் முன் மண்டபத்தோடு கூடிய ஒரு சிறிய கோயிலில் சீதாலட்சுமண சமேதனாக ராமன் நின்று கொண்டிருக்கிறார். சுமார் நான்கடி உயரமுள்ள அச் சிலாவடிவங்கள் மிகவும் அழகு வாய்ந்தவை. ராமர் சந்நிதிக்கு சற்று வடக்கே வெண்ணை உண்ணும் கண்ணனுக்கு சிறு கோயில் உள்ளது. இதற்கு சற்று வடக்கே ஆண்டாள் சந்நிதி உள்ளது.

கல்வெட்டுகள்[தொகு]

கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் வழியாக இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்த விக்ரம சோழன் காலத்துக்கு முன்னாகவே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. விக்ரம சோழன் கீழ்ச்சிற்றரசனாக இருந்த குலசேகர சாம்புவராயன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், பல்லவ மன்னன் நந்திவர்மன் மகன் கம்பவர்மன் செய்துள்ள தானங்களைப் பற்றியும், கல்வெட்டுகள் இங்கே உண்டு. பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இந்த ஊருக்கு நந்திவர்ம சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் வழங்கியது அறியவருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]